Passion ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் தயாரிக்க, ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அஹமத் இயக்கி இருக்கும் படம் இறைவன் . இசை யுவன் சங்கர் ராஜா
அஹமத் இதற்கு முன்பு வாமனன், என்றென்றும் புன்னகை , மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் . ஜெயம் ரவி நடிப்பில் இன்னொரு படத்தையும் இயக்கிக் கொண்டு இருக்கிறார் இவர் .
தனி ஒருவன் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியும் நயன்தாராவும் இணையும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது
பரபரப்பான திரில்லர் படமாக வந்திருப்பதாகக் கூறப்படும் இந்தப் படம் வரும் செப்டம்பர் 28 ரிலீஸ் , செப்டம்பர் 3 அன்று முன்னோட்ட வெளியீடு என்று திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் இயக்குனர் அஹமது .

முன்னோட்டம் திரையிடப்பட்டது .
பல பெண்கள் கொடூரமாகக் கொல்லப்படுவது , அவற்றைப் பார்த்து காவல் அதிகாரி நாயகன் கொந்தளிப்பது, கொலை செய்பவன் சக்கர நாற்காலியில் இருப்பது, அதே நிலையில் நாயகனை சுத்தலில் விடுவது, நாயகி நாயகன் திருமண ஏற்பாடு, நாயகியின் கண்ணீர் துளிர்க்கும் என்று முன்னோட்டம் தடதடக்கிறது
படம் பற்றிப் பேசிய இயக்குனர் அஹமது , ” இப்படி ஒரு ரத்தம் தெறிக்கும் படத்துக்கு இறைவன் என்ற பெயரா என்ற கேள்வி வரும் . ஆரம்பத்தில் படத்துக்கு இரை அதாவது உணவு என்ற பொருளில் இரைவன் என்று பெயர் வைக்கலாமா என்று கூட யோசித்தேன். பிறகு இறைவன் என்று மாற்றினேன் . அதற்கு படத்தில் நியாயமான காரணம் இருக்கும்

நான் எடுக்கும் படத்தின் ஜானர் என்னவோ அதற்குள் தீவிரமாக இறங்குவேன் . முன்னோட்டம் வரை அதில் தெரியும் . அப்படித்தான் என்றென்றும் புன்னகை, மனிதன் படங்கள் இருந்தன . அதே போல இந்தப் படத்தின் ஜானருக்கு இவ்வளவு தீவிரமான காட்சிகளோடு கூடிய முன்னோட்டம் தேவைப்பட்டது .
மனிதன் படத்துக்குப் பிறகு வேறொரு படம் இயக்க ஏற்பாடுகள் நடந்தன . கொரோனா சமயத்தில் நடந்தது அது . பின்னர் ஒரு சூழலில் அதை வைத்து விட்டு இதை எடுத்தேன் .
அதுவும் அடுத்து வரும்
இந்த இறைவன் படம் எல்லோரையும் கவரும்படி இருக்கும்” என்றார் .