![Iraivi Press Meet (25)](https://wh1026973.ispot.cc/wp-content/uploads/2016/04/Iraivi-Press-Meet-25.jpg)
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா, அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் , திருக்குமரன் என்டர்டெயின்மென் சார்பில் சி வி குமார் ஆகியோர் தயாரிக்க,
எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா , அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் ,
பிட்சா மற்றும் ஜிகிர்தண்டா படங்களின் மூலம் எல்லோரையும் வியக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் படம் இறைவி .
ஒளிப்பதிவு, இறுதிச் சுற்று படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் . இசை சந்தோஷ் நாராயணன்.
அம்மா, சகோதரி, மனைவி , மகள் என்று யாராக இருந்தாலும் பெண்கள் என்றாலே அவர்கள் ஆணுக்கு அடங்கியவள் என்ற எண்ணம் சமூகத்துக்கு இருக்கிறது .
அதன் காரணமாக பெண்களின் உணர்வுகள் ஆண்களால் நசுக்கி சிதைக்கப்பட்டு அவர்கள் சூழ்நிலைக் கைதியாக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது .
இதற்கு எதிராக, ஆண்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் பெண்களின் குரலாக வரும் படம் இது என்கிறார்கள் .
படத்தின் பாடல்கள் வெளியீடு நடந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .
நிகழ்வில் படத்தின் முன்னோட்டமும் எஸ் ஜே சூர்யா – கமாலினி முகர்ஜி நடிக்கும் பாடல் காட்சி ஒன்றும் திரையிடப்பட்டது .
முன்னோட்டத்தில் ஓர் அற்புதம் செய்து இருந்தார் கார்த்திக் சுப்புராஜ் .
பெண்களின் உணர்வுகளின் குரலாக வரும் இந்தப் படத்தின் முன்னோட்டத்தில், ஆண் கதாபாத்திரங்கள் சம்மந்தப்பட்ட நிகழுவுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருந்தது .
ஆனால் அந்த ஆண் கதாபாத்திரங்கள் அனைத்தும் வெறிபிடித்து முரட்டுத்தனமாக முட்டாள்தனமாக நடந்து கொள்வதாகவே இருந்தது .
அப்படியானால் சம்மந்தப்பட்ட இந்த ஆண் கதாபாத்திரங்களிடம் சிக்கித் தவிக்கும் பெண்களின் நிலை என்ன கேள்வி தானாக மனதில் எழுகிறது .
அந்த உணர்வு மூலமே இது பெண்களின் உணர்வுகளை சொல்லும் படம் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ் .
இதுதாங்க டைரக்ஷன் !
திரையிடப்பட்ட பாடல், பிரிந்து வாழும் மனைவியை (கமாலினி முகர்ஜி) , ஆடிப்பாடி சமாதானப்படுத்த முயன்ற கணவன் (எஸ் ஜே சூர்யா) ,
கடைசியில் மனைவியிடம் அடி வாங்கி அதிர்ந்து நிற்பதாக முடிந்தது . மனைவிக்கு ஆதரவாக சிறுமியான ஒரு மகள் . கணவனுக்கு ஆதரவாக அவனது நண்பன் ஒருவன் ( பாபி சிம்ஹா).
தனது முதல் இரண்டு படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வேறொரு களத்தை கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்து இருப்பது தெரிவதோடு , அது ஆர்வத்தை தூண்டும்படியும் இருக்கிறது .
ஸ்டுடியோ கிரீன் சார்பில் சக்திவேலன் பேசும்போது
” சின்ன படங்களெல்லாம் பிரபலப்படுத்தப்பட்டு வெற்றி பெறுவது முடியாது என்று இருந்த நிலையில்,
அட்டகத்தி படத்தின் மூலம் அதை உடைத்து புதிய பாணியை உருவாக்கினர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா . அதன் பின்னர் சி வி குமார் தயாரித்த பிட்சா படம்,
ஒரு புதிய அலை படைப்பாளிகளை சினிமாவுக்கு கொண்டு வந்தது . அதில் எழுந்த கார்த்திக் சுப்புராஜ், ஜிகிர்தண்டா படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்தார் .
இவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்து இருக்கும் இந்த இறைவி படம் புதிய சரித்திரம் படைக்கும் ” என்றார் .
“இந்தப் படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் வேறொரு களத்தை தொட்டு இருக்கிறார் . இந்தப் படம் மாபெரும் வெற்றி பெறும்” என்றார் , அபினேஷ் இளங்கோவன் .
படத்தை வாங்கி வெளியிடும் கே . ஆர் . பிலிம்ஸ் சரவணன் ” நாங்கள் வாங்கி வெளியிட்ட பிச்சைகாரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது .
அதை விட இந்தப் படம் வெற்றி பெறும் ” என்றார்
விஜய் சேதுபதி தனது பேச்சில் ” இந்தப் படத்தின் ஸ்கிரிப்டைப் படித்து விட்டு பிரம்மித்து விட்டேன் . படத்தின் சில காட்சிகளைப் படித்து விட்டு என்னால் நடிக்க முடியாது போல இருக்கிறது என்றேன் .
ஒரு முக்கியமான காட்சி படமாக வேண்டிய தினத்தில் எனக்கு மூடும் இல்லை .
என்னை சமாதானப் படுத்தி சில எளிய காட்சிகளை படம் பிடித்து விட்டு, அப்புறம் அந்தக்காட்சிகளை கார்த்திக் சுப்புராஜ் படமாக்கினர் ” என்றார்.
கலை இயக்குனரும் தயாரிப்பு வடிவமைப்பாளருமான விஜய் முருகன் ” கலை இயக்கத்துக்கு நல்ல படங்கள் எப்போதாவதுதான் கிடைக்கும் .
அப்படி அரவான் போன்ற பல சிறப்பான படங்களில் பணியாற்றியவன் நான். அந்த வகையில் இறைவி படம் எனக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு . தவிர , படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறேன் ” என்றார் .
நடிகர் சீனு மோகன் பேசுகையில் ” எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி . முன்பொருமுறை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ,
நீர் என்ற குறும்படத்தைப் பார்த்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் என்னிடம் ‘ இந்தப் படத்தில் தேவை இல்லாமல் ஒரு ஷாட் கூட இல்லை’ என்று பாராட்டினார் . எப்பேர்ப்பட்ட பாராட்டு அது !
என்ன வேண்டும என்பதில் தெளிவாக இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் . அவரை யாராலும் குழப்ப முடியாது
படத்தில் கலை இயக்குனர் விஜய் முருகன் , இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் , ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோரின் தெளிவும் திறமையும் என்னை பிரம்மிக்க வைத்தது ” என்றார் .
கருணாகரன் பேசும்போது ”
இந்தப் படத்தில் நடித்தது மிக சுவாரஸ்யமான அனுபவம் . மிக நல்ல வாய்ப்பு . எனக்கு ரொம்ப நல்ல கேரக்டர். நண்பர்களாக ஜாலியாக இருந்ததும் எக்ஸ்ட்ரா சந்தோஷம் ” என்றார் .
நடிகை பூஜா தேவாரியா தன் பேச்சில் ” நான் நடிகையாக முயன்று சில படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் மட்டும் நடித்து நல்ல வாய்ப்பு கிடைக்காமல் விரக்தி அடைந்து,
‘இந்த வேலையே வேண்டாம்’ என்ற மன நிலைக்கு போய் விட்டேன் . அப்போது எனக்கு கிடைத்த வாய்ப்பு இது . நாம் தகுதியோடு இருந்தால் வாய்ப்பு எப்போது வேண்டுமானலும் வரலாம் என்பதற்கு நானே உதாரணம் .
வாய்ப்புக்கு ஏங்கும் அனைவருக்கும் இதையே நான் சொல்ல விரும்புகிறேன் ” என்றது நெகிழ்வு .
அஞ்சலி பேசும்போது ” சினிமாவில் பெண்களுக்கான கதாபாத்திர முக்கியத்துவம் குறைந்து வரும் காலத்தில்
இப்படி ஒரு படம் வருவதும் அதில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது “என்றார் .
ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசும்போது ” இறைவி என்ற பெயர் , இந்தகே கதை இரண்டும் என்னை என்னவோ செய்தது . அவ்வளவு அற்புதமான கதை . சிறப்பான காட்சிகள் .
எதிலும் என் வேலை சரியாக இருக்க வேண்டும் என்று தோன்றும் . இதிலும் அப்படியே அமைந்தது . கார்த்திக் சுப்புராஜ் சாருடன் பணி புரிந்தது மிகச் சிறந்த அனுபவம் ” என்றார்
பாபி சிம்ஹா தனது பேச்சில் ” என் நண்பன் கார்த்திக் சுப்புராஜ் ஜிகிர்தண்டா மூலம் எனக்கு நல்ல உயரம் கொடுத்த நிலையில், இந்தப் படத்திலும் நல்ல கேரக்டர் கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் என்னை மிகவும் இளமையாகக் காட்டியுள்ளார் . படம சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .
“நீ உன் தாயை உண்மையிலேயே மதிக்கிறாய் என்றால் உன் மனைவியை அவமானப்படுத்த மாட்டாய். . ஏனேன்றால் மனைவி என்பவள் உன் பிள்ளைகளின் தாய் .
இதை வலியுறுத்தும் படம்தான் இந்த இறைவி ” என்று ஆரம்பித்த எஸ் ஜே சூர்யா,
” நான் சினிமாவுக்கு வந்ததும் டைரக்டர் ஆனதும் தயாரிப்பாளர் ஆனதும் ஒரு நடிகனான புகழ் பெற வேண்டும் என்பதற்காகத்தான் . சில படங்களில் நடிக்கவும் செய்தேன் . ரசிகர்களின் பாராட்டைப் பெற்றேன் .
ஆனால் என் மனதில் ஓர் எண்ணம் இருந்தது
தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் தனித் தன்மையுள்ள ஒரு இயக்குனர் எப்போது என்னை ஒரு நடிகனான மதித்து, தன் படத்தில் நடிக்க அழைக்கிறாரோ,
அப்போதுதான் நடிப்பு விசயத்தில் எனது முதல் அடியை எடுத்து வைத்ததாக அர்த்தம் என்று முடிவு செய்து இருந்தேன் .
எப்போது கார்த்திக் சுப்புராஜால் அழைக்கப்பட்டு இந்தப படத்தில் நடிக்க ஆரம்பித்தேனோ அப்போதே என் வெற்றி துவங்கி விட்டது ” என்றார் .
படம் சம்மந்தப்பட்ட பல்வேறு கலைஞர்களும் இந்தப் படத்துக்குள் வந்த விதத்தையும் அவர்களின் பங்காளிப்பு மற்றும் திறமையையும் பாராட்டிப் பேசிய கார்த்திக் சுப்புராஜ்,
” எனக்கு அவ்வளவாக கதை சொல்ல வராது . ஜிகிர்தண்டா முடிந்த நிலையில் ஒரு நாள் தயாரிப்பாளர் சி வி குமாரிடம் இந்தப் படத்தின் கதையை ஜஸ்ட் ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் சொதப்பலாகத்தான் சொன்னேன் .
ஆனால் அவர் சிறப்பாக புரிந்து கொண்டு ‘பண்ணலாம்’ என்று சம்மதம் சொன்னார் . ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன் . விஜய் சேதுபதியிடம் படிக்கக் கொடுத்தேன் . ஏனேன்றால் அவர் எதாவது கருத்து சொல்வார்.
பாபி சிம்ஹா கிட்ட கொடுக்க மாட்டேன் . இதையும் கொடுக்கல . (சிரிக்கிறார்)
எஸ் ஜே சூர்யாவிடம் கதை சொன்னேன் . வழக்கம் போலவே சொதப்பலாகத்தான் . ஆனால் அவர் நடிக்க ஒத்துக் கொண்டார் . ஷூட்டிங் பல நாட்கள் போன பிறகுதான் ஒரு நாள் என்னிடம் ‘கதை நல்லாதான் இருக்கு’ என்றார் .
அப்போதுதான் அவர் கதை மீது நம்பிக்கை இல்லாமலே ஒத்துக் கொண்டது எனக்கு தெரிய வந்தது .
படத்தில் இத்தனை நடிகர்கள் ! ஒரு காட்சியில் ஒருவருக்கு முக்கியத்துவம் இருக்கும் . இன்னொருவர் சும்மா நிற்க வேண்டி இருக்கும் .
அது போன்ற சமயங்களில் எல்லாம் தனக்கு முக்கியத்துவம் இல்லையே என்று முகம் சுளிக்காமல் ஒத்துழைத்த அத்தனை பேருக்கும் நன்றி . இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .
நிறைவாகப் பேசிய தயாரிப்பாளர் சி வி குமார்
” படத்தின் கதையை கார்த்திக் சொன்ன உடனேயே எனக்கு ரொம்ப பிடித்தது . ‘இந்த மாதிரி குணாம்சத்தில் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு . பண்ணுவோம்’னு சொன்னேன் .
ஒரு நிலையில் எனக்கு பொருளாதார ரீதியாக பின்னடைவு வந்தது. அந்த மாதிரி சூழலில் கார்த்திக் கேட்ட விசயங்களை என்னால் கொடுக்க முடியவில்லை .
எனினும் படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்த கார்த்திக்குக்கு நன்றி ” என்றார் .
மே 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது இறைவி