முன் குறிப்பு : – இந்த விமர்சனத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒரு பெண் இருப்பார். .இறைவிகளுக்கு ஒரு மரியாதை !!
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் , ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா , அபி அண்ட் அபி பிக்சேர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிக்க ,
எஸ் ஜே சூர்யா , விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா கமாலினி முகர்ஜி, அஞ்சலி பூஜா தேவரியா நடிப்பில் ,
பீட்சா மற்றும் ஜிகிர்தண்டா புகழ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் படம் இறைவி .
இந்த இறைவி நிறைவியா ? பார்க்கலாம் .
பரம்பரையாக கோவில் சிலைகள் செய்யும் இரண்டு குடும்பங்களின் , இன்றைய மூத்தவர்கள் தாசும் (ராதாரவி) ஜானும் (சீனு மோகன்) ,
தாஸ் தனது மனைவி மீனாட்சியை (வடிவுக்கரசி) காலம் காலமாகக் கொடுமைப்படுத்திக் கொண்டே இருக்க, ஒரு நிலையில் மன அழுத்தம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு,
கோமா நிலைக்குப் போகிறார் மீனாட்சி . இப்போது அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறார் தாஸ் .
தாசின் மூத்த மகன் அருள் (எஸ் ஜே சூர்யா) ஒரு திரைப்பட இயக்குனர் . தனது இரண்டாவது படத் தயாரிப்பாளருடன் (கலை இயக்குனர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளரான விஜய் முருகன்),
ஏற்பட்ட தகராறில் (சரிதானே கார்த்திக் சுப்புராஜ் சார்?) ‘பணமே போனாலும் பரவாயில்லை அந்தப் படத்தை வெளியிடாமல் தூக்கிப் போட்டு ,
அருளின் கேரியரை காலி செய்யவேண்டும்’ என்று தீர்மானித்து விடுகிறார் தயாரிப்பாளர் .
இந்த வேதனையில் மொடாக் குடியன் ஆகி விடும் அருள் , குடித்து விட்டால் கண் மூடித்தனமாக நடந்து கொள்ளும் மன நிலைக்கு வருகிறான் .
அவனைக் காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து ஒரு குழந்தைக்கும் தாயான யாழினி (கமாலினி முகர்ஜி ) இதனால் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகிறாள் .
தாசின் இளைய மகன் ஜெகன் (பாபி சிம்ஹா ) கல்லூரி மாணவன் .
ஜானின் அண்ணன் மகனான மைக்கேல் (விஜய் சேதுபதி) கல்யாணத்துக்கு முன்பே மலர் (பூஜா தேவரியா ) என்ற பெண்ணோடு உறவு வைத்துக் கொண்டு இருக்கிறான்.
காதலித்து கைப் பிடித்த கணவன் பிசினஸ் தோல்விக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ள தனி மரமாகும் மலர் ,
வாழ்க்கையைக் கண்டு அஞ்சாமல் தனது ஓவியக் கலைத் திறமையால் சம்பாதித்து சொந்தக் காலில் நிற்பவள்.
மலரைத் திருமணம் செய்து கொள்ள மைக்கேல் விரும்ப “எனக்கு இனி காதல் கல்யாணத்தில் எல்லாம் நம்பிக்கை வராது,.
நமக்குள் இருக்கும் இருக்கும் உறவு செக்சும் நட்பும் மட்டுமே . அதற்கு மேல் எதுவும் வேண்டாம் ” என்கிறாள் மலர் .
மைக்கேல் தனது சித்தப்பாவை அழைத்து வந்து மலரிடம் கல்யாணத்துக்கு பேச வைக்கிறான்.
மலர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க, மலரை கேவலமான பெண்ணாக உணர்ந்து, மைக்கேலுக்கு கல்யாணத்துக்கு வேறு பெண் பார்க்கிறார் சித்தப்பா .
‘ ஒரு பங்கு கமல்ஹாசன் , ஒரு பங்கு தல, ஒரு பங்கு தளபதி மூன்றும் கலந்த கலவைதான் தனக்கு புருஷனாக வருவான் ” என்று நம்புகிற ,
பொன்னியை (அஞ்சலி) மைக்கேலுக்கு பொண்டாட்டியாக பிடித்துப் போடுகிறார்கள் .
படம் வெளிவராத விரக்தியில் அருள் ஓவராக தன்னை நொந்து கொண்டு , படு ஓவராகக் குடித்து அசிங்கப்பட்டு , யாழினியை அசிங்கப்படுத்த….
அதிருந்து போகிறது தாஸ் மற்றும் ஜான் குடும்பங்கள் .
எப்படியாவது படத்தை கொண்டு வந்தால்தான் அருளைக் குடி போதையில் இருந்து மீட்க முடியும் என்று நம்பும் இவர்கள் ஒன்று சேர்ந்து, சம்மந்தப்பட்ட தயாரிப்பாளருடன் பேசப போக ,
இயக்குனரை அவமானப்படுத்தும் புரடியூசர் ஒரு நிலையில் , தான் செலவு செய்த பணம் முழுசையும் கொடுத்து விட்டு படத்தை வாங்கி ரிலீஸ் செய்து கொள்ளச் சொல்கிறார் .
பணத்துக்காக கோவிலில் உள்ள புராதன சாமி சிலைகளை கடத்த முடிவு செய்கிறார்கள் இயக்குனர் அருள் உள்ளிட்ட அனைவரும் ! அருள் குடிப் பழக்கத்தையும் விட்டு விடுகிறான் .
ஒரு சிலையை கடத்தி விற்று பணமும் தயார் செய்யும் நிலையில் , சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் சொன்ன சொல் மீறுகிறார் .
”அருள் இயக்கிய படம் நன்றாக இல்லாததால் அந்தப் படத்தை அப்படியே தூக்கிப் போட்டு விட்டு அதே கதையை எனது தம்பியின் இயக்கத்தில் மீண்டும் தயாரிக்கப் போகிறேன் என்று அறிவிக்கிறார்
கொலை வெறியாகும் அருள் மீண்டும் குடித்து விட்டு தயாரிப்பாளரிடம் நியாயம் கேட்கப் போகிறான் . அங்கே தயாரிப்பாளர் அருளை அடித்து நொறுக்குகிறார் .
வாழ்க்கையை ரசித்து வாழ விரும்பும் பொன்னியிடம் ” இதோ வருகிறேன் ” என்று சொல்லி விட்டு மைக்கேலும் அவனோடு ஜெகனும் அருளை தேடி போகிறார்கள் .
தயாரிப்பாளர் வீட்டில் அருள் இருந்த நிலையைப் பார்த்து ஜெகன் தயாரிப்பாளரை லேசாக அடிக்க , அருள் மீது கொண்ட அபிமானம் காரணமாக மைக்கேல் , தயாரிப்பாளரை அடித்துக் கொலை செய்கிறான் .
பொன்னியின் வாழ்வில் பூகம்ப அதிர்ச்சியை கொடுத்து விட்டு ஜெயிலுக்குப் போகிறான் மைக்கேல் . மீண்டும் அருள் குடிகாரனாக யாழினியும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டு,
குழந்தையை தூக்கிக் கொண்டு பெற்றோருடன் போய் விடுகிறாள்,
ரெண்டே மாதத்தில் மைக்கேலை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று ஜெகன் சொன்னாலும் அது நடக்க ஏழு வருடம் ஆகிறது .
பொன்னி தனது குழந்தையுடன் சொந்த கிராமத்துக்குப் போய் பாட்டியுடன்சேர்ந்து வறிய வாழ்க்கை வாழ்கிறாள் .
ஒரு வழியாக வெளியே வரும் மைக்கேலை மன்னித்து பெருந்தன்மையாக ஏற்கிறாள் , தாஸ் குடும்பத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒரே கண்டிசனுடன் ! மைக்கேல் சம்மதிக்கிறான் .
யாழினிக்கு அவளது அப்பா வேறு மாப்பிள்ளை பார்க்கிறாள்
இந்த நிலையில் செத்துப் போன தயாரிப்பாளரின் மனைவி வந்து அருளிடம் “என் கணவர் முன்பு பேசி இருந்த தொகையை கொடுத்து விட்டு படத்தை வாங்கிக் கொள்ளுங்கள் ” என்கிறார் .
பணத்துக்காக மீண்டும் சிலை திருட முடிவு செய்கிறார்கள் . ஆனால் இதில் கண்டிப்பாக மைக்கேல் இருக்க வேண்டும் என்கிறான் ஜெகன் .
மைக்கேலை தேடிப் பிடிக்கும் அருள் விசயத்தை சொல்ல, பொன்னிக்கு தெரியாமல் சிலை திருட கிளம்புகிறான் மைக்கேல் .
கேரளாவில் ஒரு சிலையை திருடும்போது மைக்கேலை திட்டமிட்டு மாட்டி விடுகிறான் ஜெகன் .மைக்கேல் ஜெயிலில் வெளிவர பல காலம் ஆனதற்கும் காரணம் ஜெகனே . .
பொன்னி போன்ற ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை கெடுத்ததால் மைக்கேல் மீது தனக்குக் கோபம் வந்தது என்கிறான் ஜெகன .
மைக்கேல் ஒரேயடியாக ஜெயிலுக்குப் போய் விட்டால் பொன்னியை திருமணம் செய்து அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம் என்பது ஜெகன் எண்ணம் .
மைக்கேல் மாட்டினாலும் சிலை பத்திரமாக வருகிறது . பணமாகிறது . அருள் இயக்கிய படம் அவரது கைக்கு வருகிறது . அப்பாவின் மறு திருமண பிடிவாதத்தால் குழம்பிப் போயிருந்த யாழினி ,
அருளோடு மீண்டும் இணைகிறாள் .
தப்பித்து வரும் மைக்கேல் தன்னை மாட்டி விட்ட ஜெகனை எதிர்க்க , இயக்குனர் அருளோ தனக்காக எல்லாமும் செய்த மைக்கேலை விட தனது சொந்தத் தம்பியின் பக்கமே நிற்கிறார் .
அதனால் நடந்த சம்பவங்களின் முடிவில் அருள், மைக்கேல் ஜெகன் நிலை என்ன ?
இவர்களிடம் சிக்கிய மலர் , யாழினி , பொன்னி, மீனாட்சி ஆகிய நான்கு இறைவிகளின் கதி என்ன ? என்பதே இந்தப் படம் .
(இதை விட கம்மியாக கதை சொன்னால் விமர்சனத்தில் சொல்ல இருக்கும் விஷயங்கள் படிப்பவர்களுக்குப் புரியாது )
பொதுவில் பெண்கள் நல்லவர்கள், பொறுப்பானவர்கள் சுயநலம் பார்க்காதவர்கள் , தவறு செய்பவனை மன்னிக்கத் தயங்காதவர்கள்….
தனது ஆண், குடும்பம் , உறவுகள் , சமூகம் இவற்றின் ஒழுங்குக்காக தங்கள் சொந்த அபிலாஷைகளை தியாகம் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் .
ஆனால் ஆண்கள் இதற்கு நேர் மாறானவர்கள் என்ற உண்மையை சொல்ல வந்திருக்கும் படம் இது .
ஒரு மழை நாளில் வெவ்வேறு இடங்களில் மீனாட்சி தன் வேதனையையும் , யாழினி துவங்கப் போகும் தனது வாழ்வையும் பொன்னி தனது கனவுகளையும் பேச , படம் ஆரம்பிக்கிறது .
எல்லோரும் மழையில் கை நனைத்து விட்டுப் பேச ஆரம்பிக்க , மீனாட்சி பேசி முடித்து விட்டுக் கை நனைக்கும் அந்த ஷாட் கார்த்திக் சுப்புராஜின் டைரக்டோரியல் டச்சுக்கு உதாரணம் . கிளாஸ் !
மைக்கேல் ஜெயிலில் இருந்து வரும் காட்சியை , மழையில் நனைந்த கைதி உடை கொடியில் இருந்து நழுவுவதாக காட்டிய வகையில் ,
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பாலிக் ஷாட் பார்த்த போது ஓர் சிலிர்ப்பு ஏற்பட்டது .
(சிம்பாலிக் ஷாட் என்பது குழ்னதைதனமான இயக்க உத்தி என்பது சில மேதாவிகளின் வாதம் . ஆனால் உண்மையில் சிம்பாலிக் ஷாட் என்பது நல்ல கவிதைக்கு சமமான ஒன்று )
கணவன் இறந்த நிலையில் , உடல் சுகத்துக்காக இன்னொரு ஆணுடன் உறவாடுகிற காரணத்தால், ஜான் போன்ற மனிதர்களின் பொதுப் புத்தியில் தவறாகத் தெரிகிற பெண் கூட ,
அவளோடு சம்மந்தப்படும் ஆணைவிட நல்லவளாக – சொல்லப் போனால் ஒழுக்கமாக – இருக்கிறாள் என்று நிறுவி இருக்கும் இடம் கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதையின் மணிமகுடம் . ! கிரேட் .
“யுவர் எக்ஸ் வுட் பீ இஸ் மை கரண்ட் வைஃப் (your ex would be is my current wife )” உட்பட பல இடங்களில், ரசனை சாரல் தூவுகிறது வசனங்கள் .
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் ஒகே ரகம் மட்டுமே . இன்னும் தேவைப்படுகிறது . கண்ணக் காட்டி மொறச்சா பாடல் சூப்பர். மனிதி பாடல் படத்தில் எடுபடவில்லை
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகளின் உணர்வு மிக இயல்பாக ரசிகனுக்குக் கடததப்படுகிறது .
விவேக் ஹர்ஷனின் படத் தொகுப்பில் 2:40 நிமிட நேரம் ஓடும் படத்தில் ஆரம்பத்தில் அருளுக்கு வரும் ரவுடிகளுடனான சண்டையும் அதைத் தொடர்ந்து வரும் பாடலும் அப்படியே வெட்டி எறியப்பட வேண்டியது .
அருள் மீது மைக்கேலுக்கு உள்ள கண் மூடித்தனமான விசுவசத்தைக் காட்டவும் , அடிக்க வரும் ரவுடி கூட சினிமா டைரக்டர் என்றால் நடிக்க சான்ஸ் கேட்டு தலை சொரிவான் என்கிற,
டைரக்டர் தொழிலின் நியாயமான கெத்தை சொல்லவும், மொத்தமே ஒன்றரை நிமிடம் மட்டும் போதுமே.
நடிப்பில் எஸ் ஜே சூர்யா சூப்பராக ஸ்கோர் செய்கிறார் . விஜய் சேதுபதியும் பாபி சிம்ஹாவும் வழக்கம் போல .
இறைவிகளில் அஞ்சலி நடிப்பில் முதலிடம் பெறுகிறார் பூஜா தேவரியா சிக்கலான ஒரு கேரக்டரில் மிக அழகாக நடித்து இருக்கிறார் . கமாலினி முகர்ஜி பாந்தம்
புரடியூசர் காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்க மறுக்கும் அளவுக்கு சுயமரியாதை உள்ள ‘கிரியேட்ட’ரான அருள், சிலை கடத்த திட்டம் போடுவது என்ன டிசைன் என்றே தெரியவில்லை
அதுவும் சிலை கடத்தலை நியாயப்படுத்தும் வசனங்கள் மன்னிக்க முடியாதவை. சிலை வடிக்க எல்லா ஸ்தபதியும் சம்பளம் வாங்கிக் கொண்டுதானே வேலை செய்யறாங்க.
என்னமோ சொந்தக் காசுல செஞ்சு கொடுத்த மாதிரி பய புள்ளைக பேசுது? பிச்சு ! பிச்சு !!
நம்ம ஊரில் அந்த சிலைகளுக்கு மரியாதை இல்லை என்பதற்காக சிலையை கடத்தி விற்கலாம் என்பது, நாற்பது வயசு வரை கல்யாணம் ஆகாத பெண்களை பாலியல் தொழில் செய்ய வைக்கலாம் என்பது போல இருக்கிறது .
ஜெகனின் அண்ணன் மீது கொண்ட விசுவாசம் காரணமாகவே மைக்கேல் பொன்னியை இன்னலுக்கு ஆளாக்குகிறான். ஆனால் தனது இரண்டாவது படம் வெளிவரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக
அருள் யாழினியை ரொம்ப கொடுமை செய்கிறான் . மைக்கேல் வாழ்க்கையையும் அதன் மூலம் பொன்னி வாழ்க்கையையும் அருளே கெடுக்கிறான்
எனவே , பெண்ணின் வாழ்க்கையை சீரழிப்பதற்காக மைக்கேல் மீது ஜெகனுக்கு கோபம் வரும் என்றால் அந்தக் கோபம் அவனுக்கு முதலில் அருள் மீதுதான் வரவேண்டும் .
அது இல்லாத நிலையில் ஜெகனின் கேரக்டர் அடிபட்டுப் போகிறது
(உண்மையில் இந்த விசயத்தை முக்கயமாக வைத்து ஜெகனின் கேரக்டரை நியாயமாக வடிவமைத்து திரைக்கதையில் பயணித்து,
அதில் ஒரு பெண் கேரக்டர் என்ன செய்கிறது என்று கதையைக் கொண்டு போயிருந்தால் கூட , ஒரு நல்ல பிளே கிடைத்து இருக்கும் )
பொதுவாக ஓர் இயக்குனர், குழந்தை கடத்தப்பட்டது பற்றி ஒரு காட்சியை எழுதுகிறார் என்றால் தன் குழந்தை கடத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணித்தான் அதை எழுதுவார் .
அப்படிப்பட்ட ஒரு கிரியேட்டர் , தனக்காக வாழ்க்கையை இழந்த மைக்கேலின் நியாயத்தை உணராமல் , தன் தம்பியின் பக்கம் நிற்கிறார் என்றால் அப்புறம் என்ன அவர் கிரியேட்டர் . ? புண்ணாக்கு !
“ஜெகன் என்னை லவ் பண்றேன்னு சொன்னான். எனக்கும் அவனை லவ் பண்ணனும் போல இருந்தது .
ஆனா நான் உன் மனைவி . உன் கூடத்தான் வாழணும்” என்று சொல்லும் இடத்திலேயே பொன்னி இறைவி ஆகி விடுகிறாள் .
அப்பாவின் வற்புறுத்தல் காரணமாக வேறு கல்யாண நிச்சயதார்த்தம் வரை போனாலும், அருளை பார்த்த உடன் அவனது தற்போதைய நிலை என்னவென்று கூட கவலைப்படாமல்,
தாவி அணைத்துக் கொள்ளும் இடத்திலேயே யாழினி இறைவி ஆகி விடுகிறாள் .
மைக்கேலின் நல்ல குடும்ப வாழ்க்கைகாக , அவனிடமே தன்னை திட்டமிட்டு தாழ்த்திக் கொள்ளும் இடத்தில் மலரும் , தாசிடம் குற்ற உணர்ச்சியை வர வைத்த இடத்திலேயே மீனாட்சியும் இறைவி ஆகி விடுகிறார்கள் .
எல்லா இறைவிகளையும் தேரில் உட்கார வைத்து இழுத்து வந்து நடுத் தெருவில் அம்போ என்று விட்டு விட்டுப் போய் அவர்களை கண்ணீர் இறைவிகளாகத்தான் மாற்ற வேண்டுமா என்ன ?
அதுவே இறைவிகளின் கையாலாகாத்தனமாகவே தெரிகிறது
எனினும் இவ்வளவு நடிகர்களை வைத்துக் கொண்டு பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் கொடுத்திருக்கும் வகையில் கார்த்திக் சுப்பராஜை பாராட்டலாம்
இறைவி …… பெண்மையைப் போற்றுதும் ! பெண்மையைப் போற்றுதும் !!