டி.ஜே. மூவீஸ் சார்பில் லட்சுமி கதிர் தயாரிக்க, புதுமுகங்கள் ஜனா , ஆதி . அனு கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் பன்னீர் செல்வம் இயக்கி இருக்கும் படம் இரு காதல் ஒரு கதை .
மாணவர்கள் படிக்க வேண்டிய வயதில் நன்றாக படிக்காமல் , தவறான விசயங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின் விளைவுகளை விளக்கி கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாடமாக இருக்கும் வகையில் உருவாகி இருக்கும் படமாம் இது
பள்ளி மாணவர்கள் மனதை பிரதிபலிக்கும் ‘தோழிகள்’ என்ற பாடல், கானா பாலா பாடிய ‘காட்டுக்குள்ளே’ என்ற பாடல், தாயின் பெருமைகளை சொல்லும் ‘அம்மா’ என்ற பாடல் , ஆலம்பரா கோட்டையில் படமாக்கப்பட்ட– காதல் பிரிவின் வலியை சொல்லும் ;நில்லடி..’ என்ற பாடல் … இப்படி இந்தப் படத்தில் இடம் பெற்று இருக்கும் ஐந்து பாடல்களையும் எழுதி இசை அமைத்து இந்தப் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி இருப்பவர், அறுபது வயதைத் தாண்டிய குஹா .
படத்தை தயாரித்து இருக்கும் லட்சுமி கதிரின் தந்தைதான். இந்த குஹா . படத்தின் நாயகன் ஜனா, தயாரிப்பாளர் லட்சுமி கதிரின் மகன் .
ஆக மூத்த தலைமுறை அப்பா இசை அமைக்க , அடுத்த தலைமுறை மகள் தயாரிக்க, மூன்றாவது தலைமுறை பேரன் ஹீரோவாக நடிக்கும் படம் இது .(படத்தின் பெயர்தான் இரு காதல் ஒரு கதை என்றால் படம் சம்மந்தப்பட்டவர்களின் பின்னணியோ, ‘மூன்று தலைமுறை ஒரு படம்’ என்று சொல்லும்படி இருக்கே !)
படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சிவ சக்தி பாண்டியன் ” படத்தை எடுத்து வைத்துக் கொண்டு எப்படி ரிலீஸ் செய்வது என்ற குழப்பத்தில் அவர்கள் இருந்தபோது நான் தாணு சாரிடம் அழைத்துப் போனேன் . படம் பிரம்மாதமான முறையில் ரிலீஸ் ஆகப் போகிறது . இனி இப்படி, வழி தெரியாமல் இருக்கும் எல்லா படங்களின் வெளியீட்டுக்கும் தயாரிப்பாளர் சங்கம் உதவும் ” என்றார்.
அடுத்து பேசிய தாணு ” இவ்வளவு முதிர்ந்த வயதில் ஒரு இசையமைப்பாளர் அறிமுகம் ஆவது ஆச்சர்யம் . அதுவும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலை முறை நபர்கள் ஒரே படத்தின் மூலம் அறிமுகம் ஆவதும் புதிய செய்தி . பாடல்கள் பிரம்மதாமாக இருக்கின்றன . இந்தக் காலம் இளம் இசையமைப்பாளர்களைப் போல குஹா உற்சாகமாக இசை அமைத்துள்ளார் ” என்று கூறிய தாணு தன்னை மறந்து ஒரு பாடலை ஹம்மிங்கில் பாடிக் காட்டி, “இந்தப் பாடல் எல்லாம் மியூசிக் சேனல்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் ” என்றார் உற்சாகமாக !
பரவட்டும் உற்சாகம் !
Comments are closed.