ட்ரீம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் பாலச் சந்திரன், அம்ருதா சீனிவாசன், விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி, ஸ்ரீ ராஜ் நடிப்பில் மனோ வெ. கண்ணதாசன் எழுதி இயக்கி இருக்கும் படம் .
தனியே வசிக்கும் இளம், பெண் எழுத்தாளர் இயல் ( அம்ருதா சீனிவாசன்) தனது வீட்டிலேயே கொல்லப்படுகிறார் . கொலையாளியை போலீஸ் தேடுகிறது .
எழுத்தாளருக்கு ஒரு காதலன் , தவிர காமத்துக்கு ஒரு பாய் ஃபிரண்ட் இருக்கிறார்கள் . செக்ஸ் நாவல் எழுதுவதற்காக ஆண், பெண் என்று பல பேருடன் உறவு கொள்வாராம் அந்த பெண் எழுத்தாளர் .
விஷயம் தெரிந்து காதலன் கோபித்து விலக , கொன்றது யார் என்பதே படம் .
படத்தின் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் , அது நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது . அதுதான் படத்தின் பிளஸ்.
போலீஸ் அதிகாரியின் பதட்டம் , விசாரணை காட்சிகள் சிறப்பு .
மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் பேசினாலும் அதிகாரம் செய்யும் காவல் அதிகாரி, இயலின் பாய் ஃபிரண்ட் எல்லா காட்சிகளிலும் எகிறி எகிறி பேசியும் அமைதியாகவே இருக்கிறார் . ஏனென்று சொல்லவே இல்லை .
செக்ஸ் நாவல் எழுதுவதற்காக பல பேருடன் உறவு கொள்ளும் எழுத்தாளர் , அதை நியாயப்படுத்தி காதலனிடம் பேசும் ‘புரட்சிகரமான’ காட்சிகள் படத்தில் உண்டு . அதனால் கோவித்துக் கொண்டு போன காதலனுக்கு, உண்மைக் காதலே இல்லை என்று அழுகாச்சி வேறு .
பல பேரிடம் உறவு கொள்கிற , காதலன் வேறு இருக்கிற இயல், ‘விவகாரமான’ பாய் பிரண்டை ஏன் தொடர்ந்து பொறுத்துக் கொள்ள வேண்டும்? அதற்கு மட்டும் எழுத்தாளருக்கு மாற்று கிடைக்காதா என்ன ?
இப்படி ஒரு கதாபாத்திரத்துக்கு இயல் என்று பெயர் , அதற்குள் இயற்கை என்று ஒரு விளக்கம், தமிழில் கையெழுத்துப் போடுவார் என்று கதாபாத்திர வடிவமைப்பு .. கொடுமை
மேற்படி கதாபாத்திரத்தை ஏதோ அயல் நாட்டுப் படத்தில் பார்த்திருக்கிறார்கள். அப்படியே தமிழ்ப் படத்தில் வைத்து விட்டார்கள் .
இது வைக்கக் கூடிய விசயமா? வைத்தாலும் என்ன மாறுதல் செய்து வைக்க வேண்டும்? அப்படியேதான் வைக்க வேண்டும் என்றாலும் அதை எப்படி சொல்ல வேண்டும் என்று எதைப் பற்றியும் கவலைப்படவில்லை .
படத்தின் முக்கியக் கதாபாத்திரமே இப்படி இருப்பதால் படத்தில் எதுவும் ஈர்க்கும்படி அமையவில்லை.
எனினும் விறுவிறுப்பாக போய் தொண்ணூற்று மூன்று நிமிடத்தில் இறுதிக் காட்சியை முடிக்கிறது , இந்த இறுதிப் பக்கம்
