கதை எழுதி , சுனந்தா ரகுநாதன் மற்றும் மாதவனோடு சேர்ந்து திரைக்கதை அமைத்து , சுதா கொங்காரா இயக்கி இருக்கும் படம் இறுதிச் சுற்று . படம் சுற்றிச் சுற்றி வர வைக்குமா ? சுத்தலில் விடுமா? பார்க்கலாம் .
அயோக்கியத்தனம் நிறைந்த அரை வேக்காடுகள் ஆட்டம் போடும் உலகில் நேர்மையும் நேர்த்தியும் நிறைந்த ஒரு மனிதனுக்கு, வரவைக்கப்படுகிற அனைத்துக் கோபங்களும் நிறைந்த. மகளிர் குத்துச் சண்டைப் பயிற்சியாளர் பிரபு( மாதவன் ).
அவனுக்கு நேர்மாறான , திறமையற்ற– ஆனால் அயோகியததனத்தால் அதிகாரத்துக்கு வந்து , பிரபுவை அநியாயமாக வீழ்த்துவதில் வெற்றி பெற்றவன், தேவ் (ஜாகிர் ஹுசைன்).
தோல்வியின் விளிம்புக்குச் சென்ற பிரபுவை விட்டு விட்டு அவன் மனைவியே ஓடிப் போய் விடுகிறாள் . தினம் ஒரு மனைவி என்ற ரீதியில் பிரபு வாழ்ந்தாலும் ஒரு குத்துச் சண்டைப் பயிற்சியாளனாக நேர்மையாய் தனது பணியை தொடர்கிறான்.
அதுவும் பொறுக்காத தேவ் , பிரபு பயிற்சி தருகிறான் என்பதாலேயே சில நல்ல குத்துச் சண்டை வீராங்கனைகளை புறந்தள்ளி, பிரபுவுக்கு கோபத்தைத் தூண்டி அவனை வன்முறையாக நடக்க வைத்து,
அதோடு பாலியல் சம்பந்தப்பட்ட பொய் குற்றச்சாட்டையும் சுமத்தி ….
விசாரணை வைத்து , ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் என்னும் ஊரில் இருந்து , பிரபுவை சென்னைக்கு அனுப்பி விடுகிறான் .
‘முடிஞ்சா சென்னையில் இருந்து ஒரு குத்துச் சண்டை வீராங்கனையை உருவாக்கு’ என்ற கிண்டல் சவாலோடு !
அதாவது , மகளிர் குத்துச் சண்டைப் போட்டிக்கான எந்த ஒரு களமும் இல்லாத சென்னைக்கு !
சென்னை வரும் பிரபு , மீனவர் குப்பத்தில் இருக்கும் மகளிர் குத்துச் சண்டை பயிற்சி மையத்துக்கு வருகிறான் . அங்கு அரசு வேலை லட்சியத்துக்காக குத்துச் சண்டை பயிலும் சில மாணவிகளைப் பார்க்கிறான் .
போலீசாக வேண்டும் என்ற நோக்கத்தோடு பயிலும் லக்ஷ்மி என்ற பெண்தான் (மும்தாஜ் சொர்க்கார்) அங்கே முக்கியமான குத்துச் சண்டை வீராங்கனை .
ஆனால் குத்துச் சண்டையில் ஆர்வம் இல்லாத அவளது தங்கையிடம் ( நாயகி ரித்திகா சிங் )…எப்படி நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்குள் நடிப்பு தானாகவே உள்ளீடாக இருந்ததோ…
அப்படி குத்துச் சண்டை திறமை இயல்பாக இருப்பதை உணர்கிறான் .
அவளை குத்துச் சண்டையில் உலக சாம்பியன் ஆக்க முடியும் என்று உணர்கிறான் . ஆனால் அவளோ இவனையும் குத்துச் சண்டையையும் இடது கை சுண்டு விரல் நகத்தால் புறக்கணித்து விட்டுப் போகிறாள்
மிகுந்த போராட்டத்துக்கு பிறகு அவளை குத்துச் சண்டைக்குள் கொண்டு வந்து பயிற்சி கொடுக்க, ஒரு நிலையில் அவளுக்கும் ‘போலீஸ் லட்சிய’ வீராங்கனையான அவளது அக்கா லக்ஷ்மிக்கும் இடையே,
கையை உடைக்கும் அளவுக்கு கருத்து வேறுபாடு வளர்கிறது .
குத்துச் சண்டை சாம்பியனாக வருவாள் என்று பிரபுநினைக்க, அவளோ ஒரு நிலையில் பிரபுவைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் . எரிச்சலாகிறான் பிரபு. அவளை விட்டு விட்டுப் போகிறான் .
தேவ், நாயகிக்கு ஹெவி வெயிட் பிரிவில் மோத வாய்ப்புக் கொடுப்பது போல கொடுத்து , ரஷ்ய சாம்பியன் ஒருத்தியிடம் அவளை நிலை குலைந்து வீழச் செய்து, அதோடு அவளை பாலியல் ரீதியாக அணுகி ,
‘காயம்’ வாங்குகிறான் . அதோடு அவள் மனதில் இருந்தே குத்துச் சண்டையை வெளியே எடுக்கிறான் . எச்சில் பாத்திரம் கழுவும் வேலைக்கு போகிறாள் அவள்.
தான் அநியாயமாக வீழ்த்தப்பட்டது போலவே நிஜமான ஒரு குத்துச் சண்டை வீராங்கனையான தனது மாணவியும் வீழ்த்தப்பட்ட நிலையில், நிஜ பயிற்சியாளன் பிரபு செய்தது என்ன?
பிறவிக் குத்துச் சண்டை வீராங்கனை என்ன ஆனாள் என்பதே இறுதிச் சுற்று .
முதலில் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் மானசீகமாக எழுந்து நின்று இயக்குனர் சுதா கொங்கராவுக்கு கைவலிக்கக் கைதட்டல்களை கொடுத்து விடலாம். அது ரசனையின் கடமை .
அப்படி ஒரு சிறப்பான , உணர்வுப் பூர்வமான , வீரியமான , அழுத்தமான , ஆழமான , சக்தி செறிந்த , அவசியமான , நேர்த்தியான , செம்மையான , ஒரு முழுமையான படம் இறுதிச் சுற்று .
எழுதிய கதைக்கு – அமைந்த சரியான திரைக்கதைக்கு — பொருத்தமான , மிக நியாயமான ஒரு படமாக்கலை செய்து இருப்பதோடு, கதைக்குதான் நடிக நடிகையர் என்பதில் அவ்வளவு தீர்மானமாக இருந்திருக்கிறார் சுதா .
இந்திய சினிமாவின் ஹீரோவுக்கான அரைத்த மாவு இலக்கணங்களை கொதி நீர் ஊற்றிக் கழுவி, ஹீரோ (கதா)பாத்திரத்தை சுத்தம் செய்து இருக்கிறார் சுதா.
முதல் காட்சியிலேயே இன்னொருவன் மனைவியோடு படுக்கையில் இருக்கும் நாயகன் , நாயகனை அடிக்கடி ”போடா கெழவா” என்று அழைக்கும் நாயகி, அவளை அநியாயமாக போலீசில் பிடித்துக் கொடுக்கும் நாயகன் …
எல்லா கேரக்டர்களையும் எல்லா கேரக்டர்களும் கிண்டல் அடிப்படிது , எந்தக் கேரக்டையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடாத படைப்புக் கம்பீரம்….
என்று பல சுவாரஸ்யமான ரசனையான இன்ப அதிர்ச்சிகள், படம் முழுக்க!
இந்தக் காட்சி சூப்பர், அந்தக் காட்சி ஓஹோ, அது இப்படி இது அப்படி என்று பிரித்துச் சொல்ல முடியாத விமர்சன அவஸ்தையே இந்தப் படத்தின் மாபெரும் மகுடம் .
(மேலே உள்ள போட்டோவில் ரித்திகா சிங் இருக்கிற அதே உணர்வில்தான் விமர்சனம் எழுதும் போது இருக்க வேண்டி உள்ளது .)
படத்தின் இடைவேளை வரும்போதே , ‘இனி இந்தப் படத்தை இயக்குனர் சுதாவே நினைத்தாலும் ஓரளவுக்கு மேல் கெடுக்க முடியாது’ என்ற நம்பிக்கை உணர்வு வந்து விடுகிறது
அப்படி இருக்க, வைரச் சக்கரத்தில் சாணை பிடிக்கப்பட்ட போர்வாள் மாதிரி, மீதிப் படத்தைக் கொண்டு போய் இரண்டாம் பகுதியில் விஸ்வரூபம் எடுக்கிறார் சுதா .
இந்தப் படத்தின் பரிமாணத்தை சொல்லி புரியவைக்க முடியாது . பார்த்தால் மட்டுமே உணர முடியும்.
இது முழுக்க முழுக்க .. சாமி சத்தியமாக….
சுதா கொங்காரா
ஒரு டைரக்டரின் படம் . A DIRECTOR’S MOVIE !!
நாயகியான நடித்து இருக்கும் ரித்திகா சிங்(கம்)…. இளவட்டக் கல்லை சுமக்கும் (காட்டு) மல்லிச் செடி மாதிரி….ஒரு பிரம்மாண்ட கதபாத்திரத்தை வீறு கொண்டு சுமக்கிறார் .
நடிப்பு , துடிப்பு , உடல் மொழிகள் மற்றும் கடினத் தன்மையால் நிஜ குத்துச் சண்டை வீராங்கனையாகவே மாறிய அர்ப்பணிப்பு …….
படத்தில் தனுஷ் ரசிகையாக வரும் நிலையில் டான்ஸ் மாஸ்டரின் தினேஷின் நடனப் பயிற்சியில் ஆடுகளம் தனுஷ் போலவே ஆடும் நேர்த்தி… என்று, துவக்கம் முதல் இறுதி வரை துவளத் துவள பிரம்மிக்க வைக்கிறார் .
இவருக்கான பாராட்டு ராயல்டியில் பத்தொன்பது சதவீதத்தை, பின்னணிக் குரல் கொடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும்.
ஆயுத எழுத்து படத்தை தவிர்த்து விட்டுப் பார்த்தால்….., முழுக்க முழுக்க கரடு முரடான அந்த கோச் கதாபாத்திரத்தில் உருட்டிய கண்ணும் குமுறும் குரலுமாக ,
உணர்ந்து உள்ளுக்குள் சுவாசித்து நடிக்கும் நடிப்பால், கொண்டாட வைக்கிறார் மாதவன்.
படம் முழுக்க ஸ்ரீதேவியை நடிக்க விட்டு விட்டு கடைசி காட்சிகளில் சிலிர்த்து எழுந்த மூன்றாம் பிறை கமல்ஹாசன் மாதிரி, ஒரு உணர்வை கொடுத்து இருக்கிறார் மாதவன் . கிரேட் மாதவன்.
லுச்சாத் தனமும் பாமர நேர்மையும் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் , குத்துச் சண்டைப் படத்தில் நடிப்பு சிலம்பமே ஆடுகிறார் நாசர் .
சாமிக்கண்ணு டூ சாமுவேலாக அதகளப் படுத்தும் காளி வெங்கட் என்று எல்லா நடிகர்களும் நன்றாக நடித்திருப்பதில், இயக்குனர் சுதாவின் உளி , சித்து விளையாடி இருக்கிறது .
அருண் மதீஸ்வரனின் வசனங்கள் சீரியஸ்னஸ் , சிரிப்புக் கொத்துகள் இரண்டையும் சீர் பட்சணமாக தருகிறது.
காமெடிக்கு என்று ஒரு டிராக் , சில கதாபாத்திரங்கள் , பல காட்சிகள் என்று திரைக்கதையை கற்பழிக்கும் அயோக்கியத்தனத்தின் கன்னத்தில் நாக் அவுட் பஞ்ச், விடுகிற மாதிரி, பொருத்தமான வசனங்கள்.
காட்சியின் அடிப்படை சீரியஸ் தன்மையை பாதிக்காமல் சிரிக்க வைக்கிறார்கள் . பிரச்சார நெடி இல்லாமல் மனதுக்குள் நுழைகிறார்கள் .
பூர்ணிமா ராமசாமியின் ஆடை வடிவமைப்பு கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வேலையையும் சிறப்பாக செய்கிறது . குறப்பாக ‘வா மச்சானே’ பாடலில் ரித்திகா சிங்கின் உடை .
படத்தை அட்சர சுத்தமாக தொகுத்த வகையில் ஜொலிக்கிறார் படத் தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. சென்னை உடற்பயிற்சிக் கூட வடிவமைப்பில் ஹலோ சொல்கிறார் ஆர்ட் டைரக்டர் சந்தானம்.
டாம் டெல்மரின் சண்டை அமைப்பும் , ஸ்டன்னர் சாமின் சண்டைக் காட்சிகளும் நம்மை நிஜமான மகளிர் குத்துச் சண்டை உலகத்துக்கே அழைத்துச் செல்கின்றன.
சஞ்சீவி மலை போன்ற காட்சிகளை சுமக்கும் இசை அனுமன் மாதிரி, பின்னணி இசையிலும் புதிய சிகரங்களை கண்டுபிடித்து ஏறுகிறார் சந்தோஷ் நாராயணன் .
சுரேனின் ஒலிக்கலவை சவுண்ட் ஃபேக்டர் நிறுவனத்தின் ஒலி வடிவமைப்பு ஆகியவையும் அபாரமாக அமைந்து பாரம் ஏற்றுகின்றன.
ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் … வாவ் ! சபாஷ் ! இந்தத் தம்பி இல்லாமல் இந்தப் படத்தை இப்போது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை . காட்சிகளின் சூழலை எளிதாக உணர வைப்பதாகட்டும்..
நடிகர்களின் நுணுக்கமான உணர்வுகளை சரியான எக்ஸ்போஷரில் அதி சிறந்த கோணங்களில் அள்ளியிருப்பதாகட்டும்….
தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவுப் பொக்கிஷமாக இவர் தெரிகிறார் . அருண் சீனுவின் SFX படத்துக்கு கூடுதல் பலம்.
சினிமா விதிகள் அல்லது கமர்ஷியல் ஜாக்கிரதைக்கு உட்பட்டு படத்தில் வந்திருக்கும் அந்த …..
பயிற்சியாளரைக் மாணவி காதலிக்கிற…. அந்த ஏரியா மட்டும் இல்லாவிட்டால் இந்தப் படத்தின் திரைக்கதையை இந்தியா முழுக்க எல்லாம் பள்ளிக் கூடங்களில் பாடமாகக் கூட வைக்கலாம்
(அந்த காட்சிகள் மற்றும் பாடல் இல்லாவிட்டால் படம் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்குமே சுதா )
நம் நாட்டில் உலகை வெல்ல வேண்டிய எத்தனை பெண் திறமைகள் உளுந்த வடை சுட்டுக் கொண்டும் உப்புக் கருவாடு காயவைத்துக் கொண்டும் இருக்கிறதோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்தும் விதம் ஆகட்டும் ….
விளையாட்டுத் துறையில் ஒரு பெண் நுழைவதில் உள்ள சிரமங்கள் சொன்ன விதம் ஆகட்டும் …..
சிரமத்தை மீறி நுழைந்து உழைத்து திறமையை வெளிப்படுத்தினாலும் , ”அவர்களுக்கான அங்கீகாரத்தை தர வேண்டும் என்றால்….
அவர்களை பக்கத்தில் உட்காரவைத்து தலையைப் பிடித்து தங்கள் இடுப்பை நோக்கி அழுத்தலாம்” என்ற அதிகார வர்க்க ஆண்களின் அருவருப்புப் புத்தியை ‘கடித்து’ச் சொன்ன விதமாகட்டும் …….
திறமைகளை ஊக்குவித்தல் , நாட்டின் கவுரவம் இவை பற்றியெல்லாம் கவலைப்படாது , விளையாட்டுத் துறையில் விஷச் செடியாக கொழுத்துக் கிடக்கும் சுயநல அரசியலை சொன்ன விதம் ஆகட்டும் ….
இந்தப் படம் ஒரு முகமது அலி .. இல்லையில்லை மைக் டைசன் .. ம்ஹும் ! ஜெங்கிஸ்கான் மாதிரி !
தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் , திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ் சி வி குமார் மற்றும் யூ டி வி மோஷன் பிக்சர்ஸ் ஆகியோரை மனதாரப் பாராட்டலாம்
இப்படி ஒரு படத்துக்காக இயக்குனர் சுதா எந்த அளவுக்கு வியர்வை , ரத்தம் , கண்ணீர் , உமிழ் நீர் எல்லாம் சிந்தி இருப்பார் என்று யோசிக்கும்போது மரியாதையையும் மீறி அவர் மேல் ஒரு நேசமே எழுகிறது .
இந்தியாவில் உள்ள எல்லா ஆண்களும் முக்கியமாக ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய படம் இறுதிச் சுற்று.
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462