பொதுவாக படங்களுக்கான சக்சஸ் மீட்கள், மீடியாவுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்புகள் இவற்றின் முக்கிய நோக்கம் மேலும் கொஞ்சம் விளம்பரம் என்ற நோக்கத்துடனேயே இருக்கும் . அதில் தப்பும் இல்லை .
ஆனால் ஒரு நிஜமான சக்சஸ் மீட், உணமையான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடக்கும்போது ஏற்படும் சந்தோஷமே தனி . பத்திரிகையாளர்களும் பேனா மகுடத்தை மூடி வைத்து விட்டு , ரசிகர்களாக மாற்றி கைதட்டிக் கொண்டு இருப்பார்கள் .
அப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்தது இறுதி சுற்று படக் குழுவின் சக்சஸ் மீட் மற்றும் மீடியாவுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு .
படத்தின் பிரிமியர் ஷோவில் பல்வேறு பிரபலங்களும் படத்தைப் பார்த்து விட்டு பாராட்டிப் பேசிய காட்சிகளை திரையிட்டார்கள். அதுவே ஒரு உணர்வுக் கொந்தளிப்பின் குவியலாக இருந்தது . அதுவும் அதில் இயக்குனர் சசி , மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோரின் பாராட்டு சிகரமாக இருந்தது
பிறகு, நிகழ்ச்சியில் முதன் முதலில் பேச வந்த தயாரிப்பாளர் சசிகாந்த் ” தலை அல்லது பூ கேட்டு டாஸ் போடும்போது, அந்த நாணயம் தலைக்கு மேல் சுற்றி வரும்போது , நாம் கேட்டது கிடைக்குமா கிடைக்காதா என்று திரில்லோடு காத்திருக்கிற நிலைமை இருக்கிறதே…..
அதை விட நடுக்கமானது ஒரு படத்தை தியேட்டருக்கு அனுப்பி விட்டு ரிசல்ட் என்ன ஆகுமோ என்று காத்திருப்பது.. ஆனால் இறுதி சுற்று படத்தைப் பொறுத்தவரை நான் கேட்ட பூ விழுந்தது . அதனால் படத்தின் தலை தப்பியது ” என்றார் தயாரிப்பாளர் சஷிகாந்த் .
பல்வேறு பத்திரிக்கைகளில் இறுதி சுற்று படத்துக்காக கொடுக்கப்பட்ட பல பாராட்டு வரிகளை குறிப்பிட்டு மகிழ்ந்தார் தனஞ்சயன் .
அம்மா கிரியேசன்ஸ் சிவா , பிரிமியர் ஷோவில் படம் பார்த்து பாராட்டியதோடு நின்று விடாமல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் ராதாகிருஷ்ணன் , காட்ர கட்ற பிரசாத், ரவி கொட்டாரக்காரா , அருள்பதி உள்ளிட்ட பிரமுகர்களோடு,
“. தமிழில் ஒரு பெண் இயக்குனர் இப்படி ஒரு படத்தின் மூலம் பெரும் வெற்றி பெற்று இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. வெகுநாட்களாக நல்ல படங்களுக்கு அம்மா அவார்டு என்ற பெயரில் மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது .
அதை ஆரம்பிக்க வேண்டிய அற்புதத்தை இறுதி சுற்று செய்து விட்டது .எனவே இந்த இறுதி சுற்று படத்தின் மூலம் அம்மா அவார்ட் வழங்குவதை துவங்குகிறேன் . கலைப்புலி எஸ் தாணு அவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் எல்லோருக்கும் அந்த விருதை வழங்குவார்கள் ” என்று அறிவித்தார் .
“இந்தப் படத்தை பார்த்து விட்டு தம்பி சிவா என்னிடம் அவ்வளவு உணர்வுப் பூர்வமாக பேசினார்.அந்த அளவுக்கு இந்தப் படத்தைப் பாராட்டினார் . விருதுகளை வழங்குவதில் நானும் பெருமை அடைகிறேன் ”
என்று குறிப்பிட்டு விட்டு ,
அனைவருக்கும் அழகிய வெண்ணிற டாலர் வடிவ பதக்க மாலையை கலைப்புலி எஸ் தாணு அணிவிக்க மற்ற பிரமுகர்களும் தொடர்ந்தார்கள்.
பதக்க எண்ணிக்கையை விட , மேடையில் பாராட்டுக்குரிய கலைஞர்கள் அதிகம் இருந்ததால், படத்தின் சக திரைக்கதையாளர் சுனந்தா ரகுநாதன் , வசனகர்த்தா அருண் மாதேஸ்வரன் , ஏய் சண்டைக்காரா பாடலைப் பாடிய பாடஹி தீ ஆகியோருக்கு விருது வழங்க முடியாது போக,
அந்தப் பாடலை எழுதிய விவேக் தனக்கு தரப்பட்ட விருதை பாடகிக்கு அணிவித்தார் . (சுனந்தா , அருண் , விவேக் மூவருக்கும் பிடியுங்கள் . தலைக்கு ஒரு டன் எக்ஸ்ட்ரா பாராட்டுகளை !)
“சுதாவுடன் பணியாற்றியது சிறந்த அனுபவம் .
அடுத்து பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில்…..
படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களை பாராட்டி ….
பத்திர்ககையாளர்கள் கிருஷ்ணன் குட்டி, கவிதா, மணவை பொன் மாணிக்கம் , கார்த்திக் , அண்ணாதுரை ஆகியோர்…..
படத்தின் கலைஞர்களுக்கு மரியாதை செய்தனர்.
குத்துச் சண்டை சங்கம் சார்பில் பேசிய ஒருவர் ” மான் கராத்தே படத்தில் குத்துச் சண்டையைக் காட்டுகிறேன் என்று எங்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி படம் எடுத்தார்கள் . அவர்கள் மீது நாங்கள் போட்ட வழக்கு நிகழ்வில் இருக்கிறது.
பூலோகம் படத்தில் எங்களை கவுரவப்படுத்தினர்கள் . இறுதி சுற்று படத்தில் நிறைய நிஜமான குத்துச் சண்டை வீரர்களை நடிக்க வைத்ததற்கு நன்றி ” என்றார்
நிகழ்ச்சியில் பேசிய நாயகி ரித்திகா சிங்
” நான் அடிப்படையில் ஒரு நிஜமான பாக்ஸர் . ஏழு வயது முதல் பாக்சிங் கற்று வருகிறேன். இந்தப் படததில் நான் ஒப்பந்தமாக அதுவே காரணம் . மற்றபடி நான் சிறப்பாக நடித்தேன் என்றால் அதற்கு இயக்குனர் சுதாதான் காரணம் . இனி தொடர்ந்து படங்களில் நடிப்பேன் ” என்றார்
நாயகன் மாதவன் ” இயக்குனர் சுதா , இந்தப் படத்துக்காக கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை ஊரு ஊராக சென்று பல பெண் பாக்சர்களையும் ஆண் பாக்சர்களையும் சந்தித்து நிறைய விவரங்களை சேகரித்து,
அதை வைத்து ஒரு ஷோ ரீல் போல என்னிடம் காட்ட்யபோது அதைப் பார்த்து அப்படியே அசந்து போனேன். அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க வந்தேன் .
ஆனால் படம் அவ்வளவு சுலபமாக முடியவில்லை . மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்தப் படம் வளர்ந்தது. சுதா எல்லாம் பட்ட சிரமங்களுக்கு அளவே இல்லை.
ஒரு நிலையில் ‘இனி இந்தப் படம் தொடராது . இதில் நேரததை போடுவதில் பலன் இல்லை’ என்று கூட நான் உணர்ந்த போது எல்லாம், ஏதோ ஒரு தெய்வசக்தி , நல்ல உணர்வை தந்து என்னை இயக்கி இந்தப் படத்துக்கு அனுப்பி வைத்தது என்றுதான் சொல்லணும் நாங்கள் போட்ட உழைப்பின் பலன்தான் இந்த வெற்றி ” என்றார் .
மிகுந்த உணர்வுப் பெருக்கோடு பேசிய இயக்குனர் சுதா கொங்கரா ” படம் பார்த்த பலரும் எனக்கு போன் செய்து உணர்வுப் பெருக்கோடு பாராட்டுகிறார்கள் . பலர் போனில் அழுகிறார்கள் , நானும் பலமுறை அழுதுவிட்டேன் .
எனக்கு முதலில் பத்திரிக்கையாளர்களும் அதைத் தொடர்ந்து படம் பார்க்கும் ரசிகர்களும் மக்களும் அளிக்கும் பாராட்டு மிகுந்த நெகிழ்வை தருகிறது .
இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் வெளியானது . இந்தியில் இந்த படம் பிக்கப் ஆக சில நாட்கள் ஆனது . ஆனால் என் தமிழில்…. என் தமிழ் நாட்டில்…. இரண்டே காட்சிகளில் இந்தப் படம் ஜிவ்வென்று எகிறியது
படம் மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அனைவருக்கும் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத நன்றிகள் ” என்றார் .
நிகழ்ச்சி முடிந்ததும் சுதாவிடம் பேசிக் கொண்டிருந்தேன் . ரித்திகா சிங்கின் நடிப்பு பற்றிப் பேச்சு வந்தது. ரித்திகா சிங்கிற்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் பற்றி பேசும்போது
” ரித்திகா சிங்கிற்கான பாராட்டு ராயல்டியில் பத்தொன்பது சதவீதத்தை, பின்னணிக் குரல் கொடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும்.’ என்று நமது விமர்சனத்தில் https://wh1026973.ispot.cc/iruthi-sutru-movie-review/ ) சொல்லி இருந்ததை சுதாவிடம் குறிப்பிட்டு,
” யார் அந்த அட்டகாசக் கடினமான பின்னணிக் குரலுக்கு சொந்தக்காரர்?” என்று கேட்டேன் .
‘முன்னாடியே பல படங்களுக்கு குரல் கொடுத்து இருக்கும், நீங்கள் அறிந்த அதே உமா மகேஸ்வரிதான்.
இந்தப் படத்துக்கு டப்பிங் பேச அவர் வந்ததும் முதலில் அவரை தியேட்டருக்கு உள்ளே அனுப்பி ”ஓ ஓ ஓ ஓ….” என்று சத்தம் போட்டு தொடர்ந்து கத்த சொல்வேன் . நன்றாகக் கத்திக் கத்தி அவர் குரல் கடினமான பிறகு டப்பிங் பேச சொல்வேன் . ஒரு மணி நேரம் பேசுவார் . மீண்டும் குரல் மென்மை ஆகிவிடும் . மீண்டும் கத்த சொல்வேன் .
ரொம்ப சிரமப் பட்டார். உடனே அவருக்கு முழு படத்தையும் போட்டுக் காட்டினேன். பார்த்து பிரம்மித்து விட்டார் . அப்புறம் அவர் போட்ட உழைப்பும் கொடுத்த ஒத்துழைப்பும் பிரம்மாதமானது ” என்றார் .
” …………………………..”
அதான் .. நாம விமர்சனத்துலேயே தெளிவா சொல்லிட்டமே …
‘இது முழுக்க முழுக்க .. சாமி சத்தியமாக….
ஒரு டைரக்டரின் படம் . A DIRECTOR’S MOVIE !!”