எஸ் ஜே சூர்யா எழுதி இசை அமைத்து தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம்.
ஹீரோ , இயக்குனர் யாராக இருந்தாலும் கதை என்னவாக இருந்தாலும் தனது இசையால் மட்டுமே படத்தை ஓடவைக்கும் திறமையுடன் விளங்கி இரண்டு தலைமுறைகளாக தமிழ் சினிமாவை கட்டி ஆளும் ஒரு இசையமைப்பாளர் (சத்யராஜா அடச்சே .. சத்யராஜ் ) , ஒரு நிலையில் ஆணவம் அதிகரித்து தன்னிடம் வரும் இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் எல்லோரையும் அசிங்கப்படுத்துகிறார் .
அப்படி அவமானப்படும் இயக்குனர் ஒருவர் (மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றிய அழகம்பெருமாள் ), அதே பெரிய இசையமைப்பாளரிடம் கீ போர்டு வாசிக்கும் ..,. அடச்சே ! கிடார் வாசிக்கும் ஒரு மீசை இல்லாத மென்மையான வெள்ளைக் கலர் இளைஞனை ( நடிகர் ஏ.ஆர். சூர்யா அடச்சே ! எஸ் ஜே சூர்யா ) இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார் . .
இளைஞனிடம் இருந்து அடுத்தடுத்து இசை ரோஜாக்கள் பிறக்க, ராஜா போல சினிமாவை கட்டி ஆண்ட இசையமைப்பாளர் படங்களே இல்லாமல் முடங்கிப் போகிறார். சிஷ்யனிடம் பாசம் காட்டுவது போல நடித்துக் கொண்டு அவனை அழிக்கத் திட்டமிடுகிறார.
இயற்கை இசையை தேடி மலைப்பாங்கான இடத்துக்குப் போகும் இளம் இசையமைப்பாளன், அங்கு உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை முன் வைத்து இயங்கும் ஒரு சிறு கிராமத்தில், கூட்டுக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணை பார்தது காதலித்து மணந்து கொள்கிறான் .
பிறப்பால் அனாதையான தான் விரைவில் ஒரு குழந்தைக்கு தகப்பனாக ஆசைப்படுகிறான் . மனைவியும் கர்ப்பம் ஆகிறாள் .
அவனது வீட்டில் உள்ள வேலையாள் , மேனேஜர் , டிரைவர் , மற்ற ஊழியர்கள் எல்லோரையும் விலைக்கு வாங்கும் அந்த மூத்த இசையமைப்பாளர் , இந்த இளம் இசையமைப்பாளனை சுற்றி நடக்கும் எல்லா விசயங்களையும் குழப்பி , அவனை தானே பைத்தியக்காரன் என்று நம்ப வைக்கிறார் . இதனால் அவனது பெயர் கெடுகிறது . மார்க்கெட் கெடுகிறது .
ஒரு நிலையில் அந்த இளம் இசையமைப்பாளன் தனது மனைவியைக் கண்டு காதலித்த ஊருக்கு போக, அப்போதுதன அந்த சர்ச் ஊர் எல்லாம் ஷூட்டிங்குக்கு போடுவது போல போடப்பட்ட செட் என்பதும் அங்கு இருந்த மனிதர்கள் அனைவரும் மூத்த இசையமைப்பாளரால் செட்டப் செய்யப்பட நடிகர்கள் என்பதும் ,மனைவியே அப்படி நடிக்க வந்தவள்தான் , அதுவும் அவள் அந்த மூத்த இசையமைப்பாளரின் வைப்பாட்டி மகள் என்பதும் தெரிய வருகிறது .
மனைவியே கணவனைக் கொல்ல வர, ஒரு நிலையில் தம்பதிகளை மூத்த இசையமைப்பாளர் கொலை செய்ய வர, சட்டென்று கனவில் இருந்து விழிக்கிறார் இயக்குனர் எஸ் ஜே சூர்யா .
ஆக, நாம் இதுவரை பார்த்தது எல்லாம் கனவாம்.
இந்தக் கதைக்கு நல்ல கிளைமாக்ஸ் ரெடி பண்ணி படம் இயக்கப் போவதாக, அ ஆ படக் கதாநாயகி நிலாவிடம் இயக்குனர் எஸ் ஜே சூர்யா சொல்ல படம் முடிகிறது .
மனைவியின் வயிற்றில் இருக்கும் கருவிடம் கலைந்து விடாதே என்று கெஞ்சும் காட்சி அருமை . சத்யராஜின் வில்லன் நடிப்பு அப்ளாஸ்களை அள்ளுகிறது . மற்றதெல்லாம வேஸ்ட் .
காதல் காட்சிகள் என்ற பெயரில் கூசும் ஆபாசக் காட்சிகள் படத்தில் இருக்கின்றன .
சர்ச் , ஃபாதர், பாவமன்னிப்பு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு கிண்டல் அடிக்கிறார் எஸ் ஜே சூர்யா . சில காட்சிகளில் வடிவேலு போல நடிக்கிறார் . வசனம் பேச ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசிக் கொல்லுகிறார்.
தனது சிஷ்யனுக்கு வாய்ப்பு கொடுதத இயக்குனரை அந்த மூத்த இசையமைப்பாளர் பல வருடங்களுக்கு பிறக நள்ளிரவில் வீடு புடுந்து அடித்து உதைக்கிறார் என்பதெல்லாம்.. அடப் போங்கப்பா !
கனவு என்பது வரை கூட ஒகே தான் . ஆனால் அதுவரை ரசிகன் பின் தொடர்ந்து வந்த கதைக்கு பிறகும் ஒரு முடிவு கூட சொல்லாமல் படத்தை முடிப்பது படம் பார்க்கும் ரசிகனை கேவலப்படுத்தும் செயல் .
ஒரு திரைக்கதை வித்தியாசமாக இருப்பது எப்போது பாராட்டப்படும் தெரியுமா? அது ஏற்றுக் கொள்ளும்படியும் இருக்கும்போதுதான் . ஆனால் இந்தப் படம் பேத்தலாக முடிகிறது .
இசை .. வசை !