வி.வெங்கட் ராஜ் தயாரிக்க, ஒரே நேரத்தில் இரண்டு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி,இரண்டையும் டி ஆர் பி யில் நிறுத்தும் சக்தி உள்ள எஸ்.என் .சக்திவேல் இயக்கத்தில் , நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் நடிப்பு இரண்டிலும் பேர் வாங்கிய தீபக் நடிக்க உருவாகும் படம்….. இவனுக்கு தண்ணில கண்டம் .
பொதுவாக ஜோதிடத்தில் நீர் நிலைகளால் உயிராபத்து ஏற்படும் வாய்ப்பை பற்றி சொல்லும்போது தண்ணில கண்டம் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் எத்தனையோ இளைஞர்களுக்கு கண்டமாக இருக்கிற தண்ணி … ‘சரக்கு’ தண்ணிதான். . இந்தப் படத்தின் கதை இரண்டாவது ரகம்.
ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு நாள் டாஸ்மாக்கில் சரக்கு அடிக்கும்போது நடக்கும் சம்பவம், எப்படி அவனது வாழ்க்கைக்கே கண்டமாக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார் சக்திவேல் .
இந்தக் கதையை தீபக், அறிமுகம் நேகா, இவர்களுடன் குமாரவேல், சென்ட்ராயன் , மனோ பாலா, எம் எஸ் பாஸ்கர் , நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன் , கானா பாலா, ஆர், பாண்டியராஜன், சுப்பு பஞ்சு இவர்களை வைத்துக் கொண்டு காமெடியாகவும் பொழுது போக்காகவும் சொல்லி இருக்கிறர்களாம்.
“என்ன தீபக் திடீரென்று சினிமா பக்கம் ?” என்று கேட்டால் , ” ஆமா சார்.. காம்பியர் , டி.வி. சீரியல் ஆக்டர் .. அடுத்து என்ன பண்ணப் போறன்னு என் நண்பர் ஒருத்தர் என்கிட்டே கேட்டார் . அவரே சினிமாவில் நடியேன்னு சொன்னார் . அப்போ சக்திவேல் சார் கிட்ட கதை கேட்டேன் . அவர் சொன்ன கதையை அந்த நண்பர்கிட்ட சும்மா நல்லா இருக்கான்னு கேட்கறதுக்காக நானும் சக்திவேலும் சொன்னோம் . ரொம்ப நல்லா இருக்கு. நானே தயாரிக்கறேன்னு வந்துட்டார் . அந்த நண்பர்தான் படத்தோட புரடியூசர் வெங்கட் ராஜ் ” என்று டுவிஸ்ட் கொடுக்கிறார் தீபக் .
“. சும்மா ஆர்வத்துலதான் கதை கேட்டேன் . ஆனா காமெடியும் மற்ற விஷயங்களும் ரொம்ப நல்லா இருந்தது . நானே தயாரிக்க முடிவு பண்ணி இறங்கிட்டேன் ” என்கிறார் வெங்கட் ராஜ் .
“சீரியலில் வெற்றிகளை கொடுத்த நீங்க சினிமாவிலும் அதே மாதிரி வருவோம்னு நம்பிக்கை இருக்கா?”‘ என்று இயக்குனர் சக்திவேலிடம் கேட்டால் , “மேக்கிங் முறையில் சினிமாவுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் வித்தியாசம் இருக்கு . ஆனா தொடர் இயக்கிய அனுபவம் சினிமாவில் பெருசா கை கொடுக்குது” என்கிறார் .
வாழ்த்துகள் ….. தண்ணி யூனிட் !