வி வி ஆர் சினிமாஸ்க் சார்பில் வி வெங்கட் ராஜ் தயாரிக்க, சின்னத் திரை மூலம் நன்கு அறிமுகமான தீபக், புதுமுகம் நேகா , நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க , பல நகைச்சுவை மற்றும் கதை அம்சம் உள்ள தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி புகழ் பெற்ற எஸ் என் சக்திவேல் இயக்கத்தில் வந்திருக்கும் படம் இவனுக்கு தண்ணில கண்டம் .
யாருக்கு கண்டம் ? பார்க்கலாம் .
தென்மாவட்ட ஊர் ஒன்றில் உள்ளூர் லோக்கல் சேனலின் காம்பியராக பணியாற்றிய சரவணன் (தீபக்), தமிழகத்தின் பிரபல டிவியான பிங்க் டிவியில் பணியாற்ற சென்னை வந்து, அந்த பிரபல தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்தாலும்…. அவனுக்கு கிடைத்த நிகழ்ச்சி என்னவோ, நள்ளிரவு பதினோரு மணிக்கு மேல் பலான விஷயத்தில் வரும் சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் “வெட்கப்படாமல் கேளுங்கள் ” நிகழ்ச்சிதான் .
அதை வைத்து எல்லோரும் அவனை கிண்டல் செய்ய , ”சொல்வதெல்லாம் உண்மை’ மாதிரி ‘மக்கள் விரும்பும் நல்ல’ நிகழ்ச்சி ஒன்றுக்கு காம்பியராக அவன் திட்டமிட , அது கைவரும் தறுவாயில் சேனல் ஓனரின் காதலியின் கணவனின் இரண்டாவது மனைவியின் மகனுக்கு (கரெக்டா சக்திவேல் சார்?) அந்த வாய்ப்பு போய் விடுகிறது .
ஊரில் அம்மா பார்த்த நூறு கோடி சொத்து உள்ள பெண்ணை திருமணம் செய்ய எக்ஸ்பிரஸ் வட்டி தாதாவிடம் சரவணன் ஐந்து லட்சம் கடன் வாங்க , அந்தப் பெண் கல்யாணத்தன்று கார் டிரைவரோடு ஓடிப் போகிறாள் . அஞ்சு லட்சம் பணமும் செலவான நிலையில், வட்டி கொடுக்கும்போதும் உடனே அசல் வேண்டும் என்று மிரட்டி டார்ச்சர் செய்கிறான் தாதா .
கல்யாணத்தில் அசிங்கப்பட்ட அன்று அறிமுகம் ஆகி, காதலிக்க ஆரம்பித்த தீபிகாவும் (நேகா) இவனிடம் கோவிலுக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு, அவளது கம்பெனி முதலாளியுடன் காரில் அவன் வீட்டுக்கே போகிறாள்.
இப்படி எல்லோரும் ஏமாற்ற மனம் வெறுத்துப் போன சரவணன் தனது நண்பர்கள் ஜேம்ஸ் (குமாரவேல்) மில்க் பாண்டி (சென்ட்ராயன்) இவர்களோடு சேர்ந்து ஓவராக சரக்கடித்து , பார் ஓனரின் மண்டையை உடைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், காலையில் தெளிந்து வீடு வந்தால்…… சரவணனுக்கு போட்டியாக இருந்தா காம்பியர் அநியாயமாக செத்துப் போயிருக்கிறான்.
சரவணனுக்கு வரும் ஒரு போன் “நீ சொன்னபடியே கொன்னுட்டேன். இப்போ சந்தோஷமா ?” என்று கேட்கிறது .அடுத்து கந்து வட்டி தாதா கொலை செய்யப்பட , மீண்டும் அப்படியே ஒரு போன்.
ஒரு நிலையில் உண்மை தெரியவருகிறது . பாரில், போதையில் ரொம்ப எமோஷன் ஆகி ஒரு வயதான கூலிப்படை கொலைகாரனை (நான் கடவுள் ராஜேந்திரன்) செட் பண்ணி , முன்னேற்றத்தை கெடுக்கும் காம்பியர், கந்து வட்டிக்காரன், ஏமாற்றிய காதலி தீபிகா மூவரையும் போட்டுத் தள்ள பணம் கொடுத்து விட்டு வந்த கதை! அது மட்டும் அல்ல , சரவணனுக்கு ஒரு வேலை கேட்க வேண்டிதான் தீபிகா தனது கம்பெனி முதலாளியை பார்க்கப் போனதும் தெரிய வருகிறது .
அதிர்ந்து போன சரவணன் தனது காதலியை மட்டுமாவது காப்பாற்ற எண்ணி , கொலைகளை நிறுத்தும்படி கூற , “எனக்கு வயசாச்சுன்னு எல்லாரும் கிண்டல் பண்றாங்க. அதனால என் வீரத்தைக் காட்டி நான் சிங்கம்னு நிரூபிக்க நான் எல்லா கொலைகளையும் பண்ணிதான் தீருவேன் ” என்று கூலிப்படைக் கொலைகாரன் அடம் பிடிக்க ….
அதன் பிறகு நடக்கும் காமெடி கதகளியே இந்தப் படம் .
படம் ஆரம்பித்த முதல் அரைமணி நேரம் சாதரணமாகப் போகும் படம், ஏ 7 பேன்ட் இசை அமைப்பாளர்களின் “லவ்வு வந்தா எல்லாருமே ஆகுறாங்க லூசா ” என்ற பாடலில் சும்மா கும் என்று நிமிர்ந்து உட்காருகிறது .அந்தப் பாடலின் இசை , நடனம் , பாடல் எடுக்கப்பட்ட விதம் , இயக்குனர் செய்திருக்கும் சில ஈஸ்தெட்டிக்கான ‘டைரக்ஷன் டச்’கள் என்று அது ஒரு டோட்டல் அட்டகாசம். அதன் பிறகு கடைசிவரை சிரிப்பு விருந்து . (தவிர படத்தில் வரும் எல்லாப் பாடல்களுமே நன்றாக இருக்கின்றன.)
ஆரம்பக் காட்சியிலேயே கலர்ஃபுல்லாக கவனம் கவர்கிறது வெங்கடேசனின் ஒளிப்பதிவு
இரண்டாம் பகுதி முழுக்க, தீபக், நான் கடவுள் ராஜேந்திரன், எம் எஸ் பாஸ்கர் , குமாரவேல் , ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடன இயக்குனர் சாண்டி எல்லோரும் சிரிக்க வைக்க , பட்டையைக் கிளப்பும் நகைச்சுவைக் காட்சிகளோடு பயணிக்கிறது படம் .
குறிப்பாக ராஜேந்திரனும் பாஸ்கரும் கலக்குகிறார்கள் .
படம் முடியும்போது பொழுதுபோக்கான நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது .
இவனுக்கு தண்ணில கண்டம் …. இடைவேளைக்குப் பிறகு நகைச்சுவையில் அடிக்கிறது சென்ட்டம் !