எத்தனையோ தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியதன் மூலம் பல கதைகள் பல திரைக்கதைகள் பல கதாபாத்திரங்களைப் பார்த்த எஸ்.என். சக்திவேலின் இயக்கத்தில் ,
அதே போல பல தொலைக்காட்சித் தொடர்களில் பலப்பல கதாபாத்திரங்களில் நடித்ததோடு நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பேட்டி காண்பவர் என்று களம் பல கண்ட தீபக் கதாநாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக ஒரு வல்லிய ….? ம்ஹும்….மெல்லிய மலையாள பெண்குட்டி நேகா கதாநாயகியாக அறிமுகம் ஆக,
வி வி ஆர் சினி மாஸ்க் நிறுவனம் நிறுவனம் மூலம் வி.வெங்கட் ராஜ் தயாரித்து இருக்கும் படம்தான், ‘இவனுக்கு தண்ணியில கண்டம்’ (இந்தப் படத்தின் பெயரை கேட்கும்போது ரைமிங்காக ஒரு வில்லங்க விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது . ஆனால் அது சபைக்கு வேண்டாம் )
மேற்சொன்னவர்களோடு நான் கடவுள் ராஜேந்திரன், குமாரவேல் , சென்ட்ராயன், மனோபாலா, எம் எஸ் பாஸ்கர், லொள்ளு சபா சுவாமிநாதன், பாண்டியராஜன் …
புரியுதா ? இது காமெடியில் பட்டையைக் கிளப்பும் படம் என்பது இந்த நடிகர்கள் நடிப்பதில் இருந்து மட்டுமல்ல….
படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பார்க்கும்போது, பாட்டிலுக்குள் பல்ப் போட்ட மாதிரி பளிச் என்று (த்+)எரிந்தது .
அதே நேரம் படத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது என்பது போனஸ் பொங்கல் .
படத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவே வருகிறார். தீபக் . அதாவது நீயா நானா கோபி போல ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்துனராக வர ஆசைப்படும் அவர் வாழ்வில் அதுவா இதுவா என்று யோசிக்க முடியாத பிரச்னைகள் வருகிறது . (ஆனால் நிஜ வாழ்வில் வெற்றிகரமான பெரிய ஹீரோவாக வர வாழ்த்துகள் தீப்பு.)
இன்னொரு பக்கம் பட்டிக்காட்டில் இருந்து நடிக்க சென்னைக்கு வந்து , தமிழ்ப் படத்தில் நடிப்பதை எல்லாம் அவமானமாகக் கருதி , ஜாக்கிசான், வாண்டாம் போன்ற ஹாலிவுட் ஹீரோக்களின் நண்பனாக நடிக்க முயலும் கதாபாத்திரத்தில் சென்ட் ராயன் ….
எப்படி இருக்கு ?
இத்தனை சீரியல்கள் இவ்வளவு கேரக்டர்கள் யோசித்த பின்னும் இந்த மனிதர் சக்திவேல் எப்படி வித்தியாசமான கேரக்டர்களை பிடித்து இருக்கிறார் பாருங்கள் .
ஏ 7 band என்ற பெயரில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து இசையமைத்து இருக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன . தீபக் , கானா பாலா ஆகியோரின் ஆட்டத்தில் சக்திவேல் அவற்றை மிக சிறப்பாகவும் எடுத்து இருந்தார் .
படம் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் “தீபக் மிக சிறந்த உழைப்பாளி . அவர் மிகப் பெரிய ஹீரோவாக வருவதற்காகவே இந்தப் படம் நனறாக ஓட வேண்டும் ” என்று வாழ்த்திய கானா பாலா அதே உற்சாகத்தில் முழுப் பாடலையும் மேடையில் பாடி அசத்தினார் .
“இது நட்புக்காக உருவான படம்” என்று ஆரம்பித்த தயாரிப்பாளர் வி.வெங்கட் ராஜ்
” தீபக் என் நண்பர்.
தீபக் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை ஆரம்பித்தேன் .
தன்னைப் போல ஒரு சரியான நபரான சக்திவேல் சார் அதன் பின்னர் கதை சொன்னார்.
எல்லாம் நன்றாக அமைந்தது.
படம் ரொம்ப சிறப்பாக வந்திருக்கிறது.
இப்போது எனக்கு இந்தப் படம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள்” என்றார் உற்சாகமாக .
இப்படியெல்லாம் நம்மை உருவேற்றி விட்டு மார்ச் 13 ஆம் தேதிதான் படம் ரிலீஸ் என்று சொல்லி இன்னும் ஒருவாரத்துக்கு மேல் காத்திருக்க வைத்து விட்டாங்களேப்பா !