ஜே. பேபி @ விமர்சனம்

நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோஸ் சார்பில் பா.ரஞ்சித்தோடு ,  விஸ்டாஸ் மீடியா சார்பில் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, அதிதி ஆனந்த் , அஷ்வினி சவுத்ரி ஆகியோர் தயாரிக்க, ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், இஸ்மத் பானு, சபீதா ராய் , தாட்சாயணி, மாயா  ஸ்ரீ  நடிப்பில் சுரேஷ் மாரி இயக்கி இருக்கும் படம். 

அண்ணனின் ( மாறன்) கல்யாணம் அன்று மணப்பெண் ஓடிப்போக, அதனால் ஏற்பட்ட சண்டையில் மணப்பெண்ணின் தங்கை,  அண்ணனைக் கேவலமாகப் பேசி அடிக்க, அடித்த பெண்ணையே காதலித்துக் கொண்டிருக்கும் தம்பி (தினேஷ்) அவளைத் திருமணம் செய்து வீட்டுக்குக் கொண்டு வர,  அண்ணன் தம்பிக்குள் தீராப் பகை உருவாகிறது . 
 
முன்பே இரண்டு மகள்களின் கணவனும் இறந்து,  அவர்கள் விதவையாக இருக்கும் நிலையில் , இது வேறு சேர , மனம் உடைந்து போகிறார், தனது ஐந்து பிள்ளைகளோடு தங்கை மகன் மீதும் பாசம் காட்டும் ஓர் ஏழைத் தாய் ( ஊர்வசி)
 
ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அண்ணன் தம்பி இருவருக்கும் வரும் ஓர் அழைப்பு , “உங்க அம்மா கல்கத்தாவில் ஹவுரா நகரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்” என்று சொல்வதோடு ”பெத்த அம்மாவைப் பார்த்துக் கொள்வதோடு வேறு என்ன வேலை” என்று திட்டுகிறது . 
 
ராணுவத்தில் பணியாற்றும் கல்கத்தா வாழ் தமிழர் ஒருவர் அம்மாவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து இருப்பது தெரிகிறது.
 
தம்பியும் தம்பி மேல் கோபம் குறையாத அண்ணனும் கல்கத்தாவுக்குப் போக, அங்கே ஸ்டேஷனில்   இருந்த அம்மாவை காப்பகத்துக்குக் கொண்டு போக, மகன்கள் காப்பகத்துக்குப் போனால் அங்கே, ”அம்மா காணமல் போய்விட்டார்” என்று அவர்கள் சொல்ல, நடந்தது என்ன…..
 
–  என்பது மட்டும் இந்தப் படம் அல்ல. 
 
அந்த அம்மாவின் கதாபாத்திரம் தமிழ் சினிமா காணாதது . ஆனால் பல தமிழ்க்  குடும்பங்கள் காண்பது . 
 
பிரச்னைகளால் அந்தத் தாய்க்கு ஏற்பட்ட இருமுனைய மனநிலை மாற்றப் பிரச்னை  (bipolar mood swing ) மற்றும் டிமென்ஷியா எனப்படும் மறதி, சிறுசிறு விசயங்களில் கூட முடிவெடுக்க முடியாத தன்மை, சிந்திக்க முடியாமை ஆகிய குறைபாடுகளால்  …. 
 
திறந்து இருக்கும் வீடுகளை வெளியே பூட்டி விட்டு வந்து விடுவது ,  அடுத்த வீட்டுக்கு வந்த லெட்டர்களை திருடிக் கொண்டு வந்து  விடுவது, வீட்டில் உள்ள மோதிரத்தைக் கொண்டு போய்ப் யாருக்காவது தானம் செய்வது, பள்ளிக்குப் போகும் ஊரான் வீட்டுப் பிள்ளையை ஐஸ்கிரீம் வாங்கித் தர அழைத்துக் கொண்டு போக அதனால் பிரச்னை வருவது… 
 
–  என்று அவரது செயல்களும் அதன் விளைவுகளால் பிள்ளைகள் படும் கஷ்டங்களும் , அந்த அம்மாவின் இன்னொரு மேன்மை மிகுந்த பக்கமும் அப்படிப்பட்ட அம்மா காணமல் போய் விட்டார் என்பதும்தான் இந்தப் படத்தின் ஆன்மா . அற்புதம் 
 
இந்தக் கதாபாத்திரத்தை ஒரு நடிகைக்கு சொல்லிப் புரிய வைப்பதே-  எவ்வளவு பெரிய அறிவாளி,  மேதை, நடிகையாக இருந்தாலும்-   ஒரு சாதனை . அந்த சாதனையை மிக அற்புதமாக செய்து இருக்கிறார் சுரேஷ் மாரி. அதற்கே அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். வாழ்த்துகள் . பாராட்டுகள் . தமிழ் சினிமாவுக்கு நல்வரவு சுரேஷ் மாரி
 
அதைப் புரிந்து கொண்டு அந்தக் கேரக்டரை சரியாக உள்வாங்கி, முக பாவனைகள், நடை உடை பாவனைகள், நுண்ணிய உணர்வுகள் , குரல் நடிப்பு என்று எல்லா வகையிலும் பிரம்மதப்படுத்தி இருக்கிறார் ஊர்வசி . 
 
”நான் யாரு தெரியுமா? இந்திரா காந்தி ஃபிரண்டு . ஜெயலலிதாஃ பிரண்டு ”என்று எகிறுவதாகட்டும்..  மன நலப் பிரச்னையையும் மீறி அநியாயத்துக்கு எதிராகப் பொங்குவதாகட்டும்…. “நான் என்ன பண்றேன்னு தெரியல . என்னால உங்களுக்கு எவ்வளவு பிரச்னை என்று மருகுவதாகட்டும் … மொழி , நில , மாநில எல்லை கடந்து எளிய மக்களை நேசிக்கும் இயல்பான குணமாகட்டும் … 
 
சுரேஷ் மாரி சொல்ல வந்த அம்மாவாக உருமாறி இருக்கிறார் ஊர்வசி 
 
கோப தாபங்கள் உள்ள சராசரி மூத்த மகனாக  சிறப்பாக நடித்திருப்பதோடு , காமெடி பஞ்ச்களிலும் கலகலக்க வைக்கிறார்  மாறன் . குறிப்பாக அந்தக் கடுகு எண்ணெய் பட்டாசு வெடி. 
 
பொறுப்பான இளைய மகனாக கதாபாத்திரத்துக்கு முழுமையாக  நியாயம் செய்யும் நடிப்பை தந்திருக்கிறார் தினேஷ் . 
 
தம்பியின் மனைவியாக வரும் இஸ்மத் பானு மோக இயல்பான நடிப்பில் கவர்கிறார் . அண்ணன் மனைவியாக வரும் சபீதா ராய்க்கு வித்தியாசமான முகம். 
 
சின்ன அக்காவாக வரும் மெலடி டார்கஸ் நாம் பார்ப்பது சினிமா அல்ல; நிஜ வாழ்க்கை என்ற உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்தில் நடிப்பில்  மனம் கவர்கிறார். 
 
ஒரு உண்மைக் கதையில் இருந்து உருவான இந்தப் படத்தில் உண்மையில் கல்கத்தாவில் உதவிய சேகர் நாராயணனே  படத்தில் அவராகவே நடித்திருப்பது  அற்புதம். அவர் சிறப்பாக நடித்துள்ளார் என்பது இன்னும் வியப்பு. அது சரி … மாபெரும் மனிதனாக வாழ்பவருக்கு,  அப்படி  நடிப்பதா கடினம்?
 
கல்கத்தா காட்சிகளில் அருமையான டீட்டெய்லிங் மூலம் அசத்தி இருக்கிறார்கள் இயக்குனர் சுரேஷ் மாரி, ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் , படத்தொகுப்பாளர் சண்முகம் வேலுச்சாமி மூவரும் . டோனி பிரிட்டோ இசையில் படத்துய்க்கு ஏற்ற எளிமை. 
 
ராமு தங்கராஜின்  கலை இயக்கம்  சூழலுக்குள் நம்மை கொண்டு சேர்க்கிறது.   உரையாடல்கள் வெகு எளிமை.  
 
தம்பியைக் காதலிக்கும் பெண் அண்ணனை கல்யாண சூழலில் அப்படி பேசுவாளா?
 
கோபித்துக் கொண்டு அவ்வளவு ஆவேசமாக போகும் அம்மாவை எப்படி பாசமுள்ள பிள்ளைகள் அப்படியே விட்டு விட்டு வருவார்கள் , அதுவும் கண்ணீரோடு ? 
 
இடைவேளைக் காட்சியில் கரடி பிடிப்பது போன்ற அந்த செட்டப்களால் என்ன பயன்? 
 
– போன்ற சில கேள்விகள் வந்தாலும் , அம்மாவின் மன நிலைக் குணாதிசயம் விவரிக்கப்படும்போது அந்தக் குறைகள் காணாமல் போகின்றன. 
 
பேபி … எதிர்பார்க்காத படம்; எதிர்கொள்ள வேண்டிய படம் . ஒரு காவிய அனுபவம் 
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
—————————————–
சுரேஷ் மாரி,  சேகர் நாராயணன் , ஊர்வசி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *