ஜெய்பீம் @ விமர்சனம்

2D என்டர்டைன்மென்ட் சார்பில் சூர்யா & ஜோதிகா தயாரிப்பில் சூர்யா, பிரகாஷ் ராஜ்,  மணிகண்டன், லிஜா ஜோஸ் மோல், ரஜிஷா விஜயன் மற்றும் பல சிறப்பான நடிகர்கள் நடிப்பில்

சான் ரோல்டன் இசையில், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில், கதிரின் கலை இயக்கத்தில் பிலோமின் ராஜ் படத் தொகுப்பில் த. செ.ஞானவேல் இயக்கி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜெய் பீம் . 

என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்தின்  விமர்சனத்தில் ‘ உண்மையில் இட ஒதுக்கீட்டைத் திருத்தவேண்டும் என்றால் அது  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , சீர் மரபினர் மற்றும் பழங்குடியினருக்கு ஆதரவாகத்தான் திருத்தப்பட வேண்டும் என்று எழுதி இருந்தேன் . 

எனது அந்தக் கருத்துக்கான ரத்த சாட்சியாக வந்திருக்கிறது ஜெய் பீம் . 

நீதியரசர் சந்துரு அய்யா அவர்கள் வழக்கறிஞராக இருந்த காலகட்டத்தில், 1990களில் 
பழங்குடி பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட சகிக்க முடியாத அநியாயம் சந்துரு அய்யாவின் கவனத்துக்கு வர,

அந்தப் பெண்ணின் கையறு நிலை கண்டு  அதிர்ந்து போய் அந்தப் பெண்ணுக்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒன்றரை ஆண்டுகள் வழக்கு நடத்தி அவர் நியாயம் வாங்கிக் கொடுத்த சம்பவத்தை கண்ணீரும் கதறலும் அவலமும் ஓலமும் ரத்தமும்  நிணநீருமாக பதிவு செய்திருக்கும் படம் ஜெய் பீம் .   

காசு என்ற ஒன்றையே கண்ணில் பார்ப்பது கஷ்டம் என்ற நிலையில், புற்றுகளை விட கொஞ்சம் பெரிசு என்று சொல்லத்தக்க –  மண் சுவரால் எழுப்பப்பட்ட –  மழையில் சுவரும் கரைந்து ஓடுகிற-  வீடுகளில் வாழ்ந்தாலும்…

செங்கல் சூளையில் வேகிற –  நேர்மையான — கட்டுக்கட்டாக கண் முன் விரிந்தாலும் அடுத்தவர் பணத்துக்கு ஆசைப் படாத-  இருளர் இன இளைஞன் ராஜா கண்ணு  ( மணிகண்டன்) .அவனது தம்பி இருட்டப்பன்  அக்கா, அக்கா மகன்  மொசக்குட்டி மற்றும் உறவுகள் .எலி பிடித்து உண்டு வாழ்ந்தாலும்  அதிலும்  குட்டி எலிகளை கொல்லாமல் விடுகிற அளவுக்கு நேயமும்   ஈரமும் கணவன் ராஜாகண்ணு மீது  அளவற்ற காதலும் கொண்ட அவன் மனைவி செங்கேணி ( லிஜா மோல் ஜோஸ் ) 

மனைவிக்கு எப்படியாவது கல்வீடு கட்டித்தர வேண்டும் என்பது ராஜா கண்ணுவின் வாழ்நாள் கனவு . கையில் ஒன்று வயிற்றில் ஒன்றாய் இரண்டு பிள்ளைகள். 

 ஊர் ஆண்டையின் மனைவி விசேஷத்துக்குப் போவதற்காக அணிவதற்கு,  ,அத்தனை நகைப் பெட்டிகள் மற்றும்  கட்டுக்கட்டாய் பணம் இருக்கிற அலமாரியை திறந்து போட்டு நகைகளை எடுக்கும்போது, பாம்பு !

அப்படியே போட்டு விட்டு அலற, மனைவிக்கு கருகமணி மட்டுமே வாங்கித் தர முடிந்த ராஜா கண்ணு வரவழைக்கப்பட்டு ,  பாம்பு பிடிக்கப்படுகிறது . பயத்தில் ஆண்டையம்மா தவற விட்ட சின்ன மூக்குத்தியைக் கூட  தேடி எடுத்துக் கொடுத்து விட்டுப் போகிறான் ராஜா கண்ணு . 

ஆண்டை குடும்பத்தோடு ஊர் போக, அவர்கள் வீட்டில் ஒட்டு மொத்த பணம் நகை கொள்ளை அடிக்கப்படுகிறது . 

ராஜா கண்ணு திருடியதாக பழி விழுகிறது . அவன் எந்தக் களங்கமும் அற்றவன் என்று நன்றாக அறிந்த ஆதிக்க சாதி பஞ்சாயத்து தலைவர் ( இளவரசு) கூட, தாழ்ந்த சாதி என்பதால் அவனுக்கு ஆதரவு அளிக்க வரவில்லை . 

நிஜ குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத போலீஸ் , ஆண்டையின் அரசியல் செல்வாக்கால் வழக்கம் போல இருளர்களை குற்றவாளி என்று அறிவிக்கும் வழக்கத்தில் ராஜா கண்ணுவை கைது செய்கிறது குற்றத்தை ஒத்துக் கொள்ளச் சொல்லி ராஜா கண்ணு,  கர்ப்பிணி செங்கேணி, இருட்டப்பன் , ராஜா கண்ணுவின் அக்கா, மொசக்குட்டி ஆகியோர் கொடூரமான,  மிருகத்தனமான,  மன சாட்சியற்ற , கேவலமான அருவருப்பான , தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் . 

ஒரு நிலையில் ராஜா கண்ணு, அவன் தம்பி, அக்கா மகன் மூவரும் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் செங்கேணி இரண்டு பிள்ளைகளோடு மேலும் போலீசின் அடக்குமுறைகளுக்கு ஆளாக , இந்த விஷயம் ஒரு வக்கீல் மூலமாக வழக்கறிஞர் சந்துருவுக்கு ( சூர்யா) தெரிய வருகிறது . 

களம் இறங்கும் சந்துரு முன்  காக்கிச் சட்டைக்குள் இருக்கும் கேவலமான மிருகங்களின்  வெறி என்று தெரிய வருகிறது . அப்புறம் நடந்தது என்ன என்பதை சொல்லும் அற்புத படமே ஜெய் பீம் . 

அன்பு சூர்யா! 

மக்களுக்கு தவறான விஷயங்கள் மீது ஆர்வம் ஏற்படுத்தி அதன் மூலம் நூறு கோடி ஆயிரம் கோடி என்று கல்லா கட்டி கடைசிவரை விஷம் விதைத்தே விருட்சமாகும் ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ நாயகனாக ஜொலிக்கிறார் சூர்யா . 

கமர்ஷியல் கதை, கட்டு செட்டாக கதாநாயகி, கலர் கலர் உடைகள், டமால் டுமீல் சண்டைகள், குத்துப் பாட்டு என்று படம் எடுக்கலாம் அதுவும் ஓடும் என்ற நிலையில்,  தான் இருந்தும் கூட , 

இப்படி ஒரு படத்தில்  ஜோடி இல்லாமல் , வெட்டி பந்தா ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் , உண்மைக்கும் நேர்மைக்கும் உண்மையாகவும் நேர்மையாகவும் போராடுவதே நிஜ நாயகத்தனம் என்று,  

பைத்தியங்கள் பலருக்கும் செவிட்டில் அறைந்து சொல்லும்படியாக நடித்து இமயம் போல உயர்ந்து இருக்கிறார் சூர்யா . 

அட நடித்ததைக் கூட விடுங்கள் .. இப்படி ஒரு படத்தை தயாரித்து இருக்கிறீர்களே அங்கே நீங்கள் எவரெஸ்ட் ஆக இன்னும் உயரம் தொடுகிறீர்கள் சூர்யா.  . 

கால மாற்றத்தில் இமயமும் எவரெஸ்ட்டும் பனி உருகி அல்லது பெருகி உயரம் கூடலாம்;  குறையலாம் . ஆனால் நீங்கள் மென்மேலும் உயர்ந்து கொண்டே போவீர்கள் . 

இந்தப் படம்.. தமிழ் சினிமாவுக்கு நீங்கள் செய்திருக்கும் ரத்த தானம் . 

இதை எழுதும்போது கண்ணோரம் துளிர்க்கும் நீரை நான் எழுத்திலும் மறைக்க விரும்பவில்லை . 
வாழ்த்துக்கள் இயக்குனர் த.சே,ஞானவேல் .

சொல்லப் படாத – ஆனால் சொல்லப் பட  வேண்டிய ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை அற்புதமாகப் படமாக்கியதற்காக !  கொஞ்சம் அசந்தாலும் ஆவணப்படமாக வர வாய்ப்புள்ள படத்தை , துளி கூட இறங்க விடாமல் . மனம் நொறுங்க வைக்கும் வாழ்க்கையாக-  படமாக உருவாக்கியமைக்கு மனப்பூர்வமான பாராட்டுகள். 

லொக்கேஷன்  தேர்வு , காட்சி அமைப்பு, யதார்த்தத்துக்கு மிக நெருக்கமான படமாக்கல்,  சரியான திரைமொழி, நடிகர் நடிகையரை நூறு சதவீதம் பயன்படுத்திய விதம் என்று எல்லா வகையிலும் ஜொலிக்கிறார் இயக்குனர் . 

ஒரு நல்ல இயக்குனர் முதல் ஷாட்டில் , பிறகு முதல் காட்சியிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் . இந்தப் படத்திலும் அது நடந்திருக்கிறது .

கோர்ட்டுக்கு வெளியே ஒரு முதியவரும் , அழும் குழந்தையுடன் ஒரு பெண்ணும்  அமர்ந்திருக்கும் காட்சி, அதற்கு முன்னரே ஒலிக்கும் குழநதையின் அழுகுரல், சிறையில் இருந்து வெளி வரும் இளைஞர்களை பொய் வழக்கு போட,

பல்வேறு ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள் காத்திருந்து பாகம் பிரித்து இழுத்துச் செல்வது என்று , அழுத்தமாகத் துவங்கும்  இயக்குனரின் படைப்பாளுமை கடைசிக் காட்சி வரை ( ஆகா அந்தச் சிறுமியின் கம்பீரம்) தொடர்கிறது . 

வானொலிப் பெட்டியில் ஒலிக்கும் ஆழக் கடலில் தேடிய முத்து பாடல் இயக்குனர் எந்த அளவுக்கு இந்தக் கதையில் கரைந்து போயிருக்கிறார் என்பதற்கு உதாரணம் . 

கோர்ட் வளாகத்தில் மழலை மாறாமல் இருளர் சமூக குழந்தைகள் சுற்றித் திரியும் காட்சி கவிதையினும் கவிதையான கவிதை  . 

போலீசின்  கொடுமைகள் பற்றி பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்திடம் மலைவாழ் மக்கள் குமுறும் காட்சியில் இருக்கிறது இந்தப் படத்தின் ஆன்மா . 

சிவமயம் கதாபாத்திரத்துக்கு சந்துரு கொடுக்கும் பதில்,  நகைக் கடை சேட்டை  தமிழில் பேசச் சொல்லும் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் என்று படம் பேசும் சமூக மற்றும் மொழி அரசியலும் போற்றுதலுக்கு உரியது . 

படம் ஆரம்பித்த காட்சியில் ஒரு இருளர் இன இளைஞனும் பெண்ணும்  எலி பிடிக்கிறார்கள்  .  உண்மையாக கேண்டிட் கேமரா வைத்து எடுத்து இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தால் அவர்கள்தான் மணிகண்டன் மற்றும் லிஜாவாம் 

கேரக்டராக மாறி விட்டார் என்று சொல்வார்கள். அதெல்லாம் கம்மி.  கேரக்டராக உருகி கரைந்து பின் இறுகி கெட்டித்து நிற்கிறார் மணிகண்டன்.  பிரம்மிக்க வைக்கும் நடிப்பு .

அதே போல   எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட உன்னத நடிப்பு லிஜாவிடம். 

இவர்களுக்கு இணையாக நடித்துள்ளர்கள் ராஜ கண்ணுவின் அக்காவாக  வருபவரும் இருட்டப்பனாக நடித்து இருக்கும் சின்ராசுவும்,  மொசக்குட்டியாக நடித்து இருக்கும் ராஜேந்திரனும்.

ஆடை களையப்பட்டு அடித்து நொறுக்கப்படும் காட்சியில் அக்காவாக நடித்து இருப்பவர் நடுநடுங்க வைக்கிறார் . நடிப்பா அது? அதற்கும் மேல். போலீஸ் அடிக்கு பயந்து நடுங்கும் நடிப்பில் விதிர்விதிர்க்க வைக்கிறார் ராஜேந்திரன்.

அட்வகேட் ஜெனரலாக வரும் ராவ் ரமேஷும் கவனம் கவர்கிறார். 

சிறப்பான ஸ்டன்ட் என்பது சும்மா பறந்து பறந்து தாக்குவது போல காட்சி அமைப்பது அல்ல . லாக்கப்களில் போலீசின் கொடூரத் தாக்குதலை அப்பட்டமாக படம் பிடிப்பது கூட என்று நிரூபித்து இருக்கிறார்கள் அன்பறிவ் . அந்தக் காட்சிகள் படத்தின் யானை பலம். 

பின்னணியில்  ஒலிக்கும் பாடல்களில் மட்டுமல்ல .. காட்சிகளுக்கு  கனம் சேர்க்கும் பின்னணி இசையிலும்  வியாபித்து இருக்கிறார் சான் ரோல்டன்..

தலை கோதும்  எல காத்து, நடந்து நடந்து திசைகளும் தீர்ந்தது போன்ற வரிகளில் பாடலாசிரியர்கள் யுகபாரதி, ராஜு முருகன் , அறிவு இவர்களும் ஜொலிக்கிறார்கள் . 

எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவை தவிர்த்து விட்டு இந்தப் படத்தை யோசிக்கவே முடியவில்லை. உண்மை சம்பவத்தை திரையில் கொண்டு வர நம்பகத் தன்மை வேண்டும் . அதற்கு  சினிமாத்தனம் குறைவான அச்சு அசல் ஒளிப்பதிவு வேண்டும் . அதை சாதித்துக்  கொடுத்து இருக்கிறார் அவர் . 

பிரம்மாண்டம்மான் அந்த கோர்ட் செட்டை எல்லாம் காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் போடுவார்கள் . ஆனால் நாம் பார்ப்பது சினிமா இல்லை நிஜம் என்று சத்தியம் செய்து நம்பும் அளவுக்கு இருளர் குடியிருப்பை கண் முன் கொண்டு வந்துள்ளாரே.. அங்கே தெரிகிறது  ஆர்ட் டைரக்டர் கே கதிரின் கலை இயக்கத்தின் நிஜ பிரம்மாண்டம் .

இரண்டு மணி நேரம் நாற்பத்தி மூன்று நிமிடம் இந்த படம் ஓடி முடித்த பின்னும் இன்னும் கொஞ்ச நேரம் ஓடி இருக்கலாமே என்று மனம் ஏங்குதே அதில் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜுக்கும் பெரும்பங்கு உண்டு . குறிப்பாக கோர்ட் காட்சிகள் பட்டை தீட்டிய கத்தரிக் கோலால் பட்டுத் துணியைக் கததரிப்பது போல அவ்வளவு சிறப்பாக எடிட் செய்யப்பட்டு உள்ளது . லாக்கப் கொடுமை காட்சிகளில் ஆடியோ கிராபியில்  ராஜ கிருஷ்ணனும்,ஒலி  வடிவமைப்பில் அழகிய கூத்தன் மற்றும் சுரேனும் அதிர அடிக்கிறார்கள்.  பட்டினம் ரஷீத்தின் ஒப்பனை நிஜத்துக்கு நெருக்கமாக பிரம்மிக்க வைக்கிறது .அது போலவே பெருமாள் செல்வம் மற்றும்  பூர்ணிமா ராமசாமியின்  ஆடை வடிவமைப்பும் . 

காடு மலைகள், கராக்கிரக சிறை இரண்டிலும்  பாலாஜியின் வண்ணமும் நாக் ஸ்டுடியோவின் VFX ம் வெகு சிறப்பு. 

வீரப்பனை பிடிக்கிறேன் என்று மலை வாழ் மக்களிடம் போலீஸ் செய்த அக்கிரமங்களை இன்னும் நேரடியாக பேசி இருக்கலாமே ஞானவேல்? இந்தப் பூடகம் போதலையே . 

ஆண்டை , பிரசிடென்ட் கதாபாத்திரங்களுக்கு இரத்தின சுருக்கமாகவேணும் ஒரு ஃபினிஷிங் கொடுத்து இருக்கலாம் .

அதே போல் வசனத்தில் போதாமை தெரிகிறது . 

இப்படி ஓரிரு சிறு திருத்தங்கள் தேவைப்பட்டாலும் கூட ஜெய் பீம் அதற்கு எல்லாம் அப்பாற்பட்ட  சிறந்த படைப்பு 

மொத்தத்தில் ஜெ பீம் … அம்பேத்கர் கண்ட கனவின் சரியான ஆழ அகல பரிமாணம் 

மகுடம் சூடும் கலைஞர்கள்

***************************************

சூர்யா,  த.செஞானவேல், மணிகண்டன், எஸ் ஆர் கதிர், லிஜா, அன்பறிவ்,  , அக்காவாக நடித்தவர், சான் ரோல்டன் , ராஜேந்திரன், பிலோமின் ராஜ், கே. கதிர் , பட்டணம் ரஷீத், ராஜ கிருஷ்ணன், அழகிய கூத்தன் , சுரேன் , 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *