ஜெயில் @ விமர்சனம்

கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார், அபர்நதி, ராதிகா சரத்குமார், நந்தன் ராம், பசங்க பாண்டி, ரவி மரியா நடிப்பில் வசந்த பாலன் இயக்கி இருக்கும் படம் ஜெயில் . 

மாநகரின் முக்கியப் பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும்  பண முதலைகளுக்கும்  தாரை வார்ப்பதற்காக,  காலகாலமாக அங்கே  வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வேரோடு பிடுங்கி அள்ளி  , அவர்களுக்குத்  தெரியாத – பழக்கமில்லாத பகுதிக்குக் கொண்டு போய்க் கொட்டிவிட்டு வருவது அரசுகளுக்கு சகஜம் ஆகி விட்டது. 
 
அவ்வாறு  கொட்டப்பட்டதால் படிப்பை இழந்து , வேலை இழந்து, உறவுகள் நட்புகளின் ஆதரவையும் அருகாமையையும் இழந்து திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விடப்பட்ட நிலைக்கு ஆளாகும் மனிதர்கள்,
 
ஒரு நிலையில்  வாழ்க்கையை நகர்த்துவதற்காக , விரும்பாத- தவறான – செயல்களைக் கூட செய்யவேண்டியதாகி விடுகிறது . பின்னர்  அதிலேயே சுகம் கண்டு ,  ஒரு நிலையில் எதிர் விளைவுகளில் சிக்கி சிதறிப் போவதும் உண்டு . 
 
 
இது அந்த மக்களின் குற்றம் மட்டும்தானா ?  அரசுகளின் அதிகாரவர்க்கத்தின் குற்றம் இல்லையா? இந்தக் கேள்விதான் படத்தின் அடி நாதம் . 
 
அது போன்ற  ஒரு சூழலுக்குள் சிக்கிக் கொண்ட  இளைய சமுதாயம்  மற்றும் அவர்களது குடும்பங்கள் ஆகியவற்றின்  பாசம் , உழைப்பு, விரக்தி, நேர்மை, நட்பு, காதல், காமம் . பகை  ஆகியவற்றைப்  பேசுகிறது ஜெயில். 
 
அப்படிப்பட்ட சூழலுக்கு ஆளான ஓர் இளைஞன் கர்ணா ( ஜி வி பிரகாஷ்குமார்), அவன் நண்பர்கள் கலை (பசங்க பாண்டி ),  ராக்கி ( நந்தன் ராம்) , கரணாவின் அம்மா பாப்பம்மா ( ராதிகா) , ராக்கியின் அக்கா மரியா புஷ்பம் ( ஜெனீஃபர்),  கலையின்  அம்மா வேலம்மாள் (மணிமேகலை)  காதலி ராணி (சரண்யா ரவிச்சந்திரன் ) ,  அரசுகளின் இரக்கமற்ற இடம் பெயர்த்தல்களை எதிர்த்துப் போராடும் முத்துக் கருப்பன் (பி டி செல்வகுமார்) 
 
மேலே சொன்ன  மூன்று  நண்பர்களின் எதிரிகளான  மாணிக் (கானா முத்து) கலியன் (கானா குணா) கொடுமைக்கார இன்ஸ்பெக்டர் பெருமாள் ( ரவி மரியா) ஆகியோருக்குள் நடக்கும் நிகழ்வுகளும் அதன் விளைவுகளுமே ஜெயில் . 
 
தான் சொல்ல நினைத்த கதையை யதார்த்தமான  படமாக்கல் மற்றும் சிறப்பான இயக்கம் மூலம் அழகாகச் சொல்லி  இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன் . 
 
லொக்கேஷன்கள் தேர்வு  அருமை 
 
 சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர்களைக் கூட  தோற்றப் பொருத்தம் அல்லது நடிப்பின் மூலமாக சிறப்பான பங்களிப்பைத் தரும்படி வேலை வாங்கி இருக்கிறார் வசந்தபாலன் 
 
ஜி வி பிரகாஷ் குமார் தோற்றப் பொருத்தம் நடிப்பு என்று எல்லா வகையிலும் சிறப்பாக நடித்துள்ளார். நடனம், சண்டை , ஆட்டம், ஓட்டம் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்துள்ளார். கண்கள் பேசுகின்றன. 
 
அபர்நதி … கேரக்டருக்கு ஏற்ற தோற்றம் , நடை உடை பாவனைகள் . குரல் நடிப்பும் நன்று . 
 
நந்தன் ராம், பசங்க பாண்டி , ஜெனீபர் கானா முத்து, குணா , ரவி மரியா, சரண்யா ரவிச்சந்திரன்  என்று பலரும்  நன்றாக நடித்துள்ளனர் 
 
அட்டகாசமான பாடல்கள், பின்னணி இசை என்று பிரம்மதப்படுத்தி இருக்கிறார் இசைஅமைப்பாளர் பிரகாஷ் குமார் . மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள் 
 
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு , சுரேஷ் கல்லேரியின் கலை இயக்கம், ரேமன்ட் டெரிக் கிராஸ்டாவின் படத் தொகுப்பு இவையும் நேர்த்தி . 
 
அன்பறிவ் அமைத்திருக்கும் சண்டை மற்றும் துரத்தல் காட்சிகள் அதிரடிக்கின்றன .  அரசு கொடுத்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை   தலையில் போட்டுக் கொலை செய்ய முயலும் ஆக்ஷன் காட்சி விதிர்விதிர்க்க வைக்கிறது . ( இலவச டி வி பெட்டிகள் விசயத்தில் குறியீடு எதுவும் இருக்கோ இயக்குனரே ?) 
 
அறியாமல் பயன்படுத்தியபோதை மருந்தால் கர்ணாவுக்கு நிகழும் சம்பவங்கள் மனம்  கனக்க வைக்கின்றன. 
 
வசந்த பாலனோடு, எஸ், ராமகிருஷ்ணன் , பாக்கியம் சங்கர் என்று பல எழுத்தாளர்கள் இருந்தும் வசனங்களில்  தெளிவில்லை . ஒரு இடத்தில் , “இன்ஸ்பெக்டர் கரப்டட்தான் . ஆனா டெர்ரர் ” என்கிறது  வசந்தபாலனின் குரல் . கரப்டட் ஆட்கள் டெர்ரர்  ஆக இருப்பது இயல்புதானே, அங்கே எதுக்கு அந்த ஆனா ? கரப்டட் என்பதே ஒரு டெர்ரரிசம்தானே ?
 
ஐம்பதாயிரம் ரூபாய் செல்போனை பெண்ணின் சட்டென்று திருடிக் கொண்டு வருபவனை, ” இது மாதிரி  சின்னத் திருட்டுகள்….” என்று வகைப்படுத்துகிறது ஒரு வசனம்,  அதை விட பெரிய திருட்டு எதுவும் அதுவரை படத்தில் காட்டப்படாத நிலையில் !
 
வேறு யாரும் இல்லாத இடத்தில் ரெண்டு கைகளிலும் விலங்கு மாட்டப்பட்டு இருக்கும் கைதியின் வாயில் நட்போடு சிகரெட்டை வைக்கிறார் ஒரு போலீஸ்காரர்,  அவன் உரிமையோடு பற்ற வைக்கவும் சொல்ல , “அதையும் நான்தான் பண்ணனுமாடா?” என்று சலித்துக் கொள்கிறார் அவர் . வேணும்மா அதுக்கு  கமிஷனரை கூப்பிடலாமா போலீஸ்கார்?
 
இடம் பெயர்த்தல் முடிந்து  புதிய இயல்பு வாழ்க்கைக்கு வந்தவர்களின் பிரச்னைகளுக்கு மட்டும் இப்படி முழு முக்கியம் கொடுத்து இருக்காமல், தொடர்ந்து இடம் பெயர்த்தலுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கும் புதிய மனிதர்களின் உடனடிப் பிரச்னைகள், அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளின்  வலி ஆகியவற்றையும் இன்னொரு பக்கம் சூடு குறைவதற்குள் சேர்த்துப் பேசி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் . 
 
ஆனாலும் என்ன .. . 
 
கடைசிக் காட்சியில் வழியும் ரத்தத்தின் மீது ஒலிக்கும் குழந்தையின் அழுகுரல் – அந்த வசந்தபால முத்திரை– நம்மை நொறுக்கி விடுகிறது 
 
பேசாப் பொருளை பேசத் துணிந்த இயக்குனர் வசந்தபாலனைப் பாராட்டுவோம்
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *