ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி , அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் நடிப்பில் ஜெயப்பிரகாஷ் திருமலைசாமியோடு சேர்ந்து கதையும் , முருகேஷ் பாபுவோடு சேர்ந்து வசனமும் எழுதி ராஜு முருகன் இயக்கி இருக்கும் படம்.
அமைச்சர் , அரசியல்வாதிகள் என்று பலரின் கறுப்புப் பணத்தில் இயங்கும் ஒரு நகைக்கடையில் கொள்ளை நடக்கிறது.
இது போன்ற நகைக்கடை கொள்ளைகளில் கில்லி.. நடிகன்… நடிகைகளின் கிங் மேக்கர்.. என்று வாழும் ஜப்பான் ( கார்த்தி) என்பவன்தான் அந்த கொள்ளையை நடத்தி இருப்பதாக போலீஸ் சந்தேகிக்கிறது
நகை செய்யப்படும் இடத்தில் சிதறும் தங்கச் சீவல் துணுக்குகளைத் தேடி அந்த இடங்களின் குப்பை மற்றும் சாக்கடைக் கழிவுகளை அள்ளி கை வைத்து கழுவி அரக்கி அரைத்து உரசி அதிசயமாய் கிடைக்கும் தங்கச் சீவல் துணுக்குகளைச் சேகரித்து வாழும் ஓர் ஏழையை அந்த வழக்கில் கைது செய்கிறது போலீஸ் .
ஜப்பானிடம் பல அரசியல்வாதிகள் அதிகாரிகளின் அந்தரங்க வீடியோ இருப்பதால் அவனுக்குப் பதில் அந்த ஏழை அப்பாவியை குற்றவாளியாக்கி என்கவுண்டரில் போட்டுத்தள்ளி வழக்கை முடிக்க எல்லோரும் திட்டமிட
இரக்கமில்லாத எகத்தாளமான ஜப்பானும் அந்த அப்பாவியும் சந்திக்கும் போது என்ன நடந்தது என்பதே படம்.
தங்கச் சீவல் துணுக்குகளை சேகரித்து வாழும் ஏழைகள் என்ற விஷயம் அட்டகாசம். அவர்கள் குடும்பம் , பிரச்னை , சிக்கல், என்று அந்த ஏரியா படத்தில் அருமை. ஒருவன் நல்லவனாக அதிலும் ஏழையாக இருந்தால் என்ன ஆகும் என்ற கதைப் போக்கு சிறப்பு . .
மிக தைரியமாக எய்ட்ஸ் நோயாளியாக நடித்து இருக்கிறார் கார்த்தி . இமேஜ் பார்க்காத ஏற்புக்கு பாராட்டுகள்
வசனங்கள் சில இடங்களில் அருமை .
ரவி வர்மனின் ஒளிப்பதிவு, ஜி வி பிரகாஷ் குமாரின் இசை ஆகியவையும் தரம்.
திரைக்கதைதான் படுத்தி விட்டது
படத்தில் கார்த்தியின் கேரக்டர் அலட்சியமானது என்பதற்காக திரைக்கதையையும் அதே அலட்சியத்தோடு எழுதினால் எப்படி ?
ஜப்பானுக்கு எய்ட்ஸ் எனும்போதே படத்தின் முடிவு புரிந்து விடுவது ஒரு பலவீனம் . அந்த விஷயம் இல்லாமலே முடிவை நியாயப்படுத்தி இருக்க முடியும் . முடியணும். அதான் ஸ்கிரீன் ரைட்டிங் .
இப்போ…
ஆட்டோ ஏறுகிறார் ஒரு பயணி. தலை போகிற அவசரம் எல்லாம் இல்லை என்றே வைத்துக் கொள்வோம்
அதற்காக அந்த ஆட்டோ டிரைவர் , தனது டைம் பாசுக்காக, பணத்துக்காக , அட.. இயற்கையை ரசிப்பதற்காக தென்றலைத் தீண்டுவதற்காக என்று கூட இருக்கட்டும்….
அந்த ஆட்டோ டிரைவர் ரொம்ப ரொம்ப ரொம்ப சுற்றிக் கொண்டு சுத்தலோ சுத்து சுத்திக் கொண்டு அங்கங்கே நிறுத்தி ஆவாரம் பூவை எடுத்து சூடி ஆட்டம் போட்டுக் கொண்டு ஆட்டோ ஓட்டினால் பயணி என்ன செய்வார் ?
பயணி ரசிகன்
படம் ஆட்டோ டிரைவர் .