நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில்,
நடிகர் ஜெய் , ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம் மலையாளப் படத்தில் நடித்த ரெபா மோனிகா இணையராக நடிக்க,
ரோபோ ஷங்கர், டேனி, இளவரசு நடிப்பில் அறிமுக இயக்குனர் பிச்சுமணி இயக்கி இருக்கும் படம் ஜருகண்டி .
எஸ் ! திருப்பதி பெருமாளை வணங்கியபடியே நெருங்கும் நிலையில் , பக்தர்களின் காதில் சத்தமாக ஒலிக்கும் அதே சொல்!
”நிக்காம நகர்ந்து கொண்டே இருங்க” என்று அர்த்தம் (இப்போதெல்லாம் அந்த ‘அண்டி’ குறைந்து விட்டது என்பது வேறு விசயம் )
இந்தப் பெயரை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு . எப்படி என்ற விவரம் போகப் போக வரும்
படத்தின் இயக்குனர் பிச்சுமணி , சென்னை – 28 காலம் முதல் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து பின்பு இணை இயக்குனராக உயர்ந்தவர் .
வெங்கட் பிரபுவின் படங்களில் நிதின் நடிக்கும்போது, பிச்சுமணியோடு ஏற்பட்ட பழக்கம் அவரது திறமையை உணரவும் நட்பை வளர்க்கவும் வாய்ப்புத் தர,
இப்போது பிச்சுமணியின் முதல் படத்தை தயாரித்து இருக்கிறார் நிதின் சத்யா . ஆனால் இந்தப் படத்தில் நிதின் சத்யா நடிக்கவில்லை . ஏன் என்பதும் போகப் போக வரும்
படத்தின் முன்னோட்டத்தை முதன் முதலாக பத்திரிகையாளர்களிடம் போட்டுக் காட்டினார்கள் நிதின் சத்யாவும் பிச்சுமணியும் .
நியாயமாக சுய தொழில் செய்ய விரும்பும் ஒருவனுக்கு முறைப்படி கடன் கொடுக்க வங்கிகள் மறுக்க,
அவன் எப்படியாவது கடன் பெற முயலும் நிலையில் நடந்தது என்ன என்பது கதையின் ஒரு முக்கிய பகுதி என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது . மற்ற விவரங்கள் ?
அவையும் இதே கட்டுரையில் போகப் போக வரும் .
படமாக்கலில் இயக்குனர் அசத்தி இருக்கிறார் . ஜெய் , ரோபோ ஷங்கர், டேனி உட்பட பலரும் நன்றாக நடித்துள்ளார்கள் .
இவை எல்லாம் முன்னோட்டம் உணர்த்தும் விஷயங்கள் .
முன்னோட்டத்தில் ஒரு முத்தான சுவாரஸ்யம் !
எதிர்பாராத விதமாக ஒரு முக்கிய விஷயம் கண்ணில் படுவதை, குறிப்பிட்ட அந்த கதாபாத்திரம் சாதாரணமாக பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையில்,
திடீரென கூர்ந்து பார்ப்பது போலவே பெரும்பாலும் காட்டுவார்கள் . ஆனால் இயக்குனர் பிச்சுமணி ஒரு நல்ல டைரக்டோரியல் உத்தியை கையாண்டு,
அப்படி ஒரு காட்சி வைத்துள்ளார் . (என்ன என்பதை முன்னோட்டம் பார்க்கும்போது கண்டு பிடியுங்கள் )
படுவேகமாக பரபரப்பாக செல்லும் ஒரு முன்னோட்டத்தில் இப்படி அழகியலான காட்சிகளும் இடம் பெற்று இருப்பது,
இயக்குனரின் ரசனை மற்றும் திறமை இரண்டுக்கும் ஃபோகஸ் லைட் அடிக்கிறது . அட்வான்ஸ் வாழ்த்துகள் அறிமுக இயக்குனர் பிச்சுமணிக்கு !
முன்னோட்டம் திரையிடப்பட்ட பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் (நடிகர்) நிதின் சத்யா ,
” தயாரிப்பாளராக ஆனதற்கான காரணத்தை பற்றி நிதின் சத்யா கூறும்போது, “நான் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே திரைப்பட தயாரிப்பிலும் ஒரு மயக்கமான ஆர்வம் இருந்தது.
அதை பற்றிய நுணுக்கங்களை தெரிந்து கொள்ள நான் நடிக்கும் படங்களில் தயாரிப்பு பக்கத்திலும் அவ்வப்போது எட்டி பார்ப்பேன்.
எனக்குள் இந்த விருப்பம் படிப்படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் தயாரிப்பில் இறங்க முயற்சி செய்து பார்க்க இது தான் சரியான நேரம் என உணர்ந்தேன்.
இந்த முயற்சியில் என்னோடு இணைந்த பத்ரி கஸ்தூரிக்கு நன்றி. பத்ரி இந்த செயல்முறையில் எனக்கு வழங்கிய ஆதரவு அசாதாரணமானது
வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் பிச்சுமணி இயக்க இருந்த வேறு ஒரு கதைக்கு வைக்கப்பட்டிருந்த பெயர்தான் ஜருகண்டி .
வெங்கட் பிரபுவே வைத்த பெயர் அது . இடையில் இந்தக் கதையை பிச்சுமணி எனக்கு சொல்ல நான் உடனே இதை தயாரிக்க முன் வந்தேன் .
இந்தப் படத்துக்கும் இது பொருத்தமான பெயர் என்பதால் வெங்கட் பிரபுவின் அனுமதி பெற்று ஜருகண்டி என்ற பெயரை வைத்தோம் .
இந்தப் படத்தில் நான் நடித்து இருக்கலாம் . ஆனால் எனக்குள் நடிகனுக்கும் அப்பாற்பட்டு தயாரிப்பில் ஆர்வம் , அக்கறை , உள்ள ஓர் ஆளும் உண்டு .
அவன் தொடர்ந்து புரடக்ஷன் பற்றிய பாடங்களைப் படித்துக் கொண்டே வந்திருக்கிறான் . இந்தப் படத்தில் அவனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்தேன் .
தயாரிப்பாளராகவும் இருந்து நாம் நடிக்கப் போனால் நமக்கான முக்கியத்துவம வளரும் . அது திரைக்கதையின் இயல்பை பாதிக்கலாம் என்பதால் நான் நடிக்கவில்லை .
ஆனால் இயக்குனர் பிச்சுமணி என்னை வற்புறுத்தி சுமார் அரை நிமிடக் காட்சி ஒன்றில் நடிக்க வைத்து விட்டார் .
அப்புறம்… எங்கள் நட்பிற்காக இதை நான் சொல்லவில்லை, உண்மையிலேயே ஜெய்யின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு மொத்த படப்பிடிப்பிலும் இருந்தது.
சொன்ன நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே படப்பிடிப்புக்கு வரும் ஜெய், அவரது காட்சிகள் எடுத்து முடித்த பின்னரும் அங்கேயே இருப்பார்.
மேலும் அவரது சகோதரர் போபோ சசி தான் இந்த படத்தின் இசையமைப்பாளர். பாடல் காம்போஸிங்கின் போதும் கூடவே இருந்தார் ஜெய்.
ஜெய், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு ஒத்துழைப்பால் 46 நாட்களில் மொத்த படத்தையும் முடித்து விட்டேன் ” என்றார் , அர்த்தமுள்ள புன்னகையோடு .
என்ன சொல்கிறார் அறிமுக இயக்குனர் பிச்சுமணி ?
“விண்டேஜ் கார்களை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கி இருந்த ஒரு படத்துக்கான பெயர்தான் ஜருகண்டி .
பரபரப்பாக நகரும் நிகழ்வுகளை கதாபாத்திரங்களை கொண்ட இந்தக் கதைக்கும் அது பொருத்தமான பெயர் என்பதால் , வைத்து விட்டோம் .
அடிப்படையில் ஜருகண்டி என்பது தெலுங்குப் பெயராக இருந்தாலும் உலகம் முழுக்க உள்ள பெருமாள் பக்தர்கள் அறிந்த வார்த்தை என்பதால்,
எல்லோருக்கும் தெரிந்த அந்த பெயரே படத்துக்கு இப்போது பலமாக இருக்கிறது
முன்னோட்டத்தில் பார்த்த கடன் விவகாரம் மட்டும் கதை அல்ல . அது நாயகனின் விஷயம் .
இது தவிர கதாநாயகி, ரோபோ ஷங்கர் கதாபாத்திரம் இப்படி ஒவ்வொருவருக்கும் படத்தில் ஒரு கதை இருக்கிறது .
அவைகள் ஒன்று சேரும்போது நடக்கும் நிகழ்வுகளே படம்.
நமக்கு என்று வரும்போதோ, அல்லது வேறு சிலர் இயல்பாக தவறு செய்வதை பார்க்கும்போதோ பலரும் தங்கள் பங்குக்கு தவறு செய்ய துணிந்து விடுகிறார்கள் .
உதாரணமாக திருட்டு வி சி டி பார்ப்பது குற்றம் . ஆனால் அதற்காக ஒருவரை கைது செய்தால் ,அந்த கைது நியாயமில்லை என்பதே மக்களின் மன நிலை .
குற்றத்துக்கு துணை போவது நியாயமா என்பது பற்றி பெரும்பாலும் பலரும் யோசிப்பது இல்லை .
இப்படி, அநியாயமாக அனுமதிக்கப்பட்ட தவறுகளால் ஏற்படும் விளைவுகள்தான் இந்தப் படம்
பிரபல எடிட்டர் பிரவீன்தான் படத்துக்கு எடிட்டர் . ஆரம்பம் முதல் அவர் போட்டிருக்கும் உழைப்பும் ஆர்வமும் எங்களுக்கு மிகப் பெரிய பலம்.
கங்கை அமரன் அவர்கள் எழுதி இருக்கும் பாடல் எங்களுக்கு ஓர் ஆசீர்வாதம் போல. அவர் மட்டுமல்லாது உமா தேவி பாடல் எழுத , நானும் பாடல் எழுதி இருக்கிறேன்
மிகச் சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார் ஆர் டி ராஜசேகர் . போபோ ஷஷியின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன .
ரெமியனின் கலை இயக்கம் , டான் அசோக்கின் ஆக்ஷன் காட்சிகள், அஜய் ராஜ் மற்றும் சதீஷின் நடன காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன .
ஒரு இயல்பான வாழ்வியல் விஷயத்தை எடுத்துக் கொண்டு , எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்துள்ளோம் .
விரைவில் திரைக்கும் ஜருகண்டி படத்துக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். ” என்றார் இயக்குனர் பிச்சுமணி .
விண்டேஜ் கார்கள் பற்றிய கதை என்ற அந்த ஒன் லைனே சூப்பரா இருக்கே? அதுக்கு ஜருகண்டி என்று பெயர் என்றால் அது என்ன காமெடி கதையா ?
அடுத்து அந்தப் படத்தைதான் இயகுவீங்களா ? அப்போ அதுக்கு என்ன பேரு வைப்பீங்க ?
சொல்லுங்க டைரக்டர் .. சொல்லுங்க !