ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கவுரி கான் மற்றும் கவுரவ் வர்மா தயாரிக்க, ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியா மணி நடிப்பில் ரமணகிரி வாசனோடு சேர்ந்து திரைக்கதை எழுதி, அட்லி இயக்கி இருக்கும் படம்.
இந்தியாவின் எல்லைப் புற மலைக்கிராமம் ஒன்றின் நீர்நிலையில் மிதந்து வந்து அந்த மக்களால் குற்றுயிராக மீட்கப்படும் ஒருவர் ( ஷாருக்கான்)
அவர்களால் காப்பற்றப்பட்டாலும் அவருக்கு தான் யார் என்பதே மறந்து விட்டிருக்கிறது .
அதே நேரம் அந்த மக்களுக்கு அந்நிய நாட்டினரால் ஆபத்து வரும்போது எதிரிகளைக் கொன்று அவர்களைக் காப்பாற்றுகிறார்.
முப்பது வருடங்கள் கழித்து மும்பை மெட்ரோ ரயில் ஒன்று அவரால் கடத்தப்படுகிறது . அவர் தலைமையில் சில பெண்கள் சேர்ந்து நடத்தும் செயல் அது .
ஒரு விவசாயி சில ஆயிரங்கள் கடன் வாங்கினால் அவர்களை அடித்து உதைத்து ஜப்தி செய்யும் அரசு , ஒரு பெரிய தொழில் அதிபரின் ( விஜய்சேதுபதி) நாற்பதாயிரம் கோடி கடனை ரத்து செய்திருக்க, அந்த தொழில் அதிபரின் மகளும் அந்த ரயிலில் இருக்கிறார் .
அந்தப் பெண்ணை கொல்லப் போவதாக மிரட்டும் பெரியவர் , நாற்பதாயிரம் கோடி ரூபாயை ஒரு அக்கவுண்டுக்கு போட்டால் ரயிலில் உள்ள அனைவரையும் விடுவிக்கிறேன் என்கிறார் . பணம் அக்கவுண்ட் மாற , அந்தப் பணம் ஏழை விவசாயிகளின் அக்கவுண்டில் போடப்பட்டு அவர்களது விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய பயன்படுகிறது .
அரசால் பாதிக்கப்பட்டு செத்துப் போன ஓர் ஏழை விவசாயியின் மகளும் அந்த முதியவர் தலைமையிலான ரயில் கடத்தல் கும்பலில் இருக்கிறார் . இப்படி அங்கு உள்ள மற்ற பெண்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள்
இந்த நிலையில் ரயிலைக் கடத்திய முதியவர் மற்றும் அவரது அணியைப் பிடிக்க ஒரு பெண் போலீஸ் (நயன்தாரா) அதிகாரி வருகிறார் . இந்த நிலையில் ரயில் கடத்தல்,கும்பலின் தலைவன் முதியவர் அல்ல இளைஞன் என்பது சொல்லப்படுகிறது
அந்த இளைஞனுக்கும் பெண் போலீஸ் அதிகாரிக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது . திருமணம் முடிந்த பிறகுதான் , தான் பிடிக்க வேண்டிய நபர்தான் கணவன் ஆகி இருக்கிறான் என்பது பெண் அதிகாரிக்கு தெரிகிறது .
கணவனையே கொல்ல அவர் முயல , அதன் ஒரு அங்கமாக அதிகாரி ஜெயிலுக்குப் போக, அங்கே தன் கணவன் நல்லவன் என்பது அதிகாரிக்குத் தெரிய , அவர்கள் இருவரையும் கைப்பற்றும் வில்லன் இருவரையும் கொல்ல முயல், ஒரு அதிரடி திருப்பம் .
ஒரு பக்கம் அரசாங்கமும் இன்னொரு பக்கம் வில்லனும் கணவன் -மனைவியை வேட்டையாட முயல, நாயகன் தன் பாணியில் விவசாயிகள் மட்டுமல்லாது மற்ற தரப்பு மக்களுக்கும் உதவப் போக , நடந்தது என்ன என்பதே படம் .
பெருமுதலாளிகளுக்குத் துணை போய் நடுத்தர எளிய மக்களை வதைக்கும் அரசின் குறைகளுக்கு எதிராக துப்பாக்கி தூக்கும் ஜவான் மூலம் , கடைசியில் மக்கள் அறிவுப் பூர்வமாக ஓட்டுப் போட்டால் மோசமான அரசு வராது என்று சொல்லும் ஒரு விழிப்புணர்வுப் படத்தை பிரம்மாண்டமாக ஆக்ஷன் செண்டிமெண்ட் கலந்து கொடுத்து இருக்கிறார் அட்லீ.
வழக்கமான அவரது மற்ற படங்களைப் போலவே பல வெற்றிகரமான தமிழ்ப் படங்களை பிசைந்து கொடுக்கும் கதம்பச் சோறாகவும் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளோடும் இந்தப் படமும் இருந்தாலும் சுவையான சூடான சாப்பாடுதான் .
துப்பாக்கியில் தரத்தை ஜவான் மேலதிகாரிகளுக்கு நிரூபிக்கும் காட்சி அட்டகாசம் என்றால் அம்மாவுக்கு ஏற்ற கணவனை சிறுமியான மகள் கேள்வி கேட்கும் காட்சி கவிதை
ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு, அனிருத் இசை, ரூபன் படத் தொகுப்பு மூன்றும் படத்துக்கு பெரிய பலம்
நடிப்பு, ஆக்ஷன் , நடனம் என்று வழக்கம் போல அசத்துகிறார் ஷாரூக் கான். வில்லன் ரோலில் கொடூரம் , பந்தா , கேலி, குறும்புக் கண்கள் என்று ரகளை செய்து இருக்கிறார் விஜய் சேதுபதி .
பெண் போலீஸ் அதிகாரியாக ( டூப் ஷாட்கள் நிறைய இருந்தாலும்) ஸ்டைலாக சண்டை போட்டு இருப்பதோடு , அம்மாவாக செண்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார் நயன்தாரா .
பிளாஷ்பேக்கில் வரும் தீபிகா படுகோனே காட்சிகள் கம்பீரமான கண்ணீர் கவிதை.., ஜெயிலில் குழந்தை வளரும் காட்சிகள் பழசு என்றாலும் கனம்
பிரியா மணிக்கும் பொருத்தமான கேரக்டர் .
ஒரு காட்சியில் யோகிபாபு கல கல .
இவர்களோடு சாய் தீனா உட்பட பல தமிழ் நடிகர்களையும் டெக்னீஷியன்கள்களையும் இந்திக்கு கொண்டு போயிருக்கும் விதத்தில் அட்லீ பாராட்டப்பட வேண்டியவர் .
விழிப்புணர்வு அரசியல் பேசும் அதிரடி சினிமா ஜவான்