ஜீவா @ விமர்சனம்

jeeva review
jeeva review
பள்ளிக் கூட உரசல்

பத்து வருடம் முன்பு வந்திருக்க வேண்டிய படம் . இட்ஸ் toooooooooooooooooo லேட் சுசீந்திரன்!

சரி , எடுத்ததுதான் எடுத்தார்கள். எடுத்துக் கொண்ட பிரச்னையின் இப்போதைய விளைவு என்ன ? என்பதை சொல்லி இருந்தாலாவது கொண்டாடி இருக்கலாம் . அதுவும் இல்லாமல்,  சொந்த கிரவுண்டில் நூறு ரன்களுக்குள் இன்னிங்ஸ் இழக்கும் இந்திய அணி மாதிரி இருக்கிறது ஜீவா.

டோனி மட்டும் தமிழ் நாட்டில் பிறந்து இருந்தால் ,  இந்திய கிரிக்கெட் அணியில் ஆடும் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு போகும் வேலை கூட அவருக்கு கிடைத்திருக்காது . காரணம் அவர் பிராமணர் இல்லை. இதுதான் அவர்கள் சொல்ல நினைத்த படம் . இதை விவியன் ரிச்சர்டின் சிக்சர்கள்  மாதிரி வீரியமாக சொல்ல வேண்டாமா ? ஒன்டே மேட்ச்சில் கட்டை போடும் டிராவிட் மாதிரி  சொல்கிறது படம்

தமிழ் நாட்டில் கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருக்கும் பிராமணர்களின் ஜாதி துவேஷத்தால் கிரிக்கெட்டை உண்மையாக காதலித்தும் எவ்வளவோ திறமை இருந்தும் இந்திய அணியில் இடம் பெற முடியாமல், பிராமணர் அல்லாத தமிழர்களின் வாழ்க்கை திட்டமிட்டு அழிக்கப்பட்டதையும் அவர்கள் பலரின் குடும்பத்தினரின் கனவுகள் மருகி  உருகி கருகி அருகி அழிந்து போனதையும்  சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் சொன்ன விதத்தில்தான் நோ பால்கலாக  போட்டுத் தள்ளும் பவுலிங் அணியாக பல்லிளிக்கிறது படம் 

அப்படிப்பட்ட  இரண்டு பிராமணரல்லாத தமிழர்களில்  ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் . இன்னொருவனான ஜீவா  (விஷ்ணு விஷால்)சினிமாத்தனமான ஜெயிக்கிறான் .  இதில் நாயகன் ஜீவாவுக்கு முதல் காதல் தோல்வி என்று ஒரு தனிக்கதை. அதிலும் கூட   இன்னொரு பெண் தன்னை காதலிப்பதாக சொல்லும்போது,  முதல் காதல் ஞாபகம் வந்து மீண்டும் அவளை பார்க்கப் போய் காதலிப்பது போன்ற ஸ்ரீசாந்த்தனங்கள் படம் முழுக்க கொட்டிக் கிடக்கின்றன.

சிறுவயதில் அம்மா இறந்த நிலையில் பக்கத்தில் உள்ள கிறிஸ்தவக் குடும்பத்தில் ஒருவனாக ஜீவா வளர்கிறான் என்பதும் அந்தக் குடும்பத் தலைவர் (சார்லி)க்கும் சொந்த அப்பா(மாரிமுத்து)வுக்கும்  நெருங்கிய நட்பு கூட இல்லாத இயல்பான பழக்க வழக்கமும் எவ்வளவு நல்ல கிரவுண்ட்? ஆனால் பேட்டிங் பிட்ச்சில் சிங்கிள் மட்டுமே எடுப்பேன் என்று அடம் பிடிக்கிறது திரைக்கதை.

jeeva review
அண்ணான்னு சொல்லி லவ் பண்ணும் நாயகி

கிறிஸ்தவக் குடும்பத்து  நாயகியின்(ஸ்ரீதிவ்யா) அப்பா “ஜீவா மதம் மாறினால்தான் பெண் கொடுப்பேன்” என்று சொல்லும்போது அவனது சொந்த அப்பா ” மூணு வயசுல இருந்து அவன் கிறிஸ்தவக் குடும்பத்தில்தான் வளர்றான் . எனக்கு ஆட்சேபனை இல்லை ” என்று சொல்லி இருக்க வேண்டும்.  ஆனால் அவனை வளர்க்கும் அந்த கிறிஸ்தவக் குடும்பம் ” இத்தன வருஷமா அவனை நாங்க வளர்க்க தடையா இல்லாத மதம் கல்யாணத்துக்கு மட்டும் எப்படி தடையா வரும் ? ஜீவா இனிமேலும் இந்துவாதான் இருப்பான் ” என்று பெண்ணின் அப்பாவிடம் சொல்வது போல ஒரு ஓவர் போட வைத்து , அந்த  ஓவரின் ஆறு பந்திலும் சிக்சர்கள்  அடித்து சிலுப்பி இருக்க வேண்டாமா ? அட போங்கப்பா!

எதிரே வரும் பந்தை பார்க்காமல் கும்பலை  வேடிக்கை பார்க்கும் பேட்ஸ் மேன் கணக்காக,  படத்தின் பல காட்சிகளில்  எல்லாருமே கடமைக்கு வசனம் பேசுகிறார்கள் . நடிகர்களிடம் வேலை வாங்கும் விசயத்தில் பிராக்டீஸ் இல்லாமல் கேட்சை கோட்டை விடும் ஃபீல்டர் மாதிரி இருக்கிறார் இயக்குனர்.

ஸ்லிப் , சில்லி , மிடான், மிட் விக்கெட் என்று எல்லா இடத்திலும் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகும் அமெச்சூர் அணி,  மாதிரி படத்தின் முதல் பாதி இருக்கிறது.

” ஒரு நல்ல டீமுக்கு அடையாளம் என்ன தெரியுமா? பத்தாவது ஆட்டக்காரனை பேட்ஸ் மேனா களம் இறக்காம பாத்துக்க வேண்டியதுதான் ” போன்ற இடங்களில் அட்டகாசமாக சிக்சர் அடிக்கிறது சந்தோஷின் வசனங்கள் . ஆனால் படம் அதே தப்பைதான் செய்கிறது.

jeeva review
லவ் மேட்ச்

“லவ் பண்ணிட்டு அப்புறம் அண்ணான்னு சொல்ற பொண்ணுகளை விட அண்ணான்னு சொல்லிட்டு அப்புறம் லவ் பண்ற பொண்ணுக எவ்வளவோ மேல் ” என்ற கை தட்டல் வசனம் இருக்கும் தைரியத்தில் ,

கதாநாயகி  அண்ணா என்று சொல்லிக் கொண்டே கதாநாயகனை லவ் பண்ணுவது… சீச்சி  அசிங்கம்!

அதே போல்  பள்ளிக்கூட மாணவியான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கதாநாயகி,  தனது அப்பா வைத்திருக்கும் ஒயினை திருடி தங்கையோடு சேர்ந்து குடிக்கிறாள் என்று காட்சி வைத்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.

ஆக்ஷன் ரீப்ளேயில் அவுட் என்று அகிலத்துக்கே தெரிந்தும்,  அவுட் இல்லை என்று அநியாய முடிவு கூறும் அயோக்கிய தேர்டு அம்பயரை எப்படி திட்டுவோமோ அப்படியே இந்தக் காட்சிகளுக்காக இவர்களையும் திட்டலாம்.

விஷ்ணு விஷாலின் உழைப்பு செறிந்த நடிப்பு அருமை . நண்பராக வரும் இளம் நடிகர் ஈர்க்கிறார். குறிப்பாக சோகக் காட்சிகளில் அவரது குரல் கலங்கடிக்கிறது . (சாரி நண்பா …மக்களோடு மக்களாக திரையரங்கில் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்ததால் படம் போட்டும்  ரசிகர்கள் நடமாட்டம் காரணமாக  உங்கள் பெயரை டைட்டிலில் சரியாக படிக்க முடியவில்லை .) சார்லி , மாரிமுத்து இருவரின் கேமரா உணர்வு இல்லாத  நடிப்பும் அருமை.

எப்படி ஒரு தயாரிப்பாளராக இருந்து ஜெயப்பிரகாஷ் இன்று மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராக வளர்ந்திருக்கிறாரோ அப்படி இந்தப் படத்திள் இருந்தும் ஒருவர் கிடைக்கும் வாய்ப்பு தெரிகிறது . நாயகியின் அப்பாவாக நடித்து இருக்கும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாதான் அந்த தயாரிப்பாளர். அறிமுக ஆட்டம் ஒகே. அடுத்த அடுத்த ஆட்டங்களில்  செஞ்சுரி அடிக்கணும் ஒகே வா?

முதல் பாதியின் ஒளிப்பதிவு  டோன் சென்னையின் முக்கிய திரையரங்கிலேயே மங்கலாக தெரிகிறது என்றால் மற்ற ஊர்களில் எப்படி இருக்குதோ தெரியல . பாடல்கள் ‘ரன் அவுட் ‘ஆகின்றன

ஐ பி எல் வந்து விட்டதால் ஆதிக்க சாதி உணர்வையும் மீறி ஜீவாவுக்கு ஆட வாய்ப்பு கிடைத்துவிட்டதாம். சூரி .. இந்தக் காமடி முன்னாடி உங்க காமெடி எல்லாம் வேஸ்ட் .

இன்று ஐ பி எல்,  சி சி எல் அணிகளில்  எத்தனை பிராமணர் அல்லாத தமிழர்கள் இருக்கிறார்கள்? அங்கே எந்த ஜீவாக்களையும் காணோமே ? காரணம் என்ன ?

அதில்தான் அடங்கி இருக்கிறது இந்தப் படத்தின் கதையை இன்றைய நிலையில் எப்படி கையாண்டு இருக்க வேண்டும் என்ற உண்மை .

தமிழக கிரிக்கெட் தேர்வுக் குழுவின் ஜாதி ஆதிக்க உணர்வு காரணமாக பிராமணர் அல்லாத தமிழர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டார்கள் . திறமை இருந்தும் தடுக்கப்பட்டார்கள் . சிலர் விரக்தியில் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி அழிந்தார்கள் . சிலர் மிக சாதரணமான வாழ்வில் தங்களை புதைத்துக் கொண்டார்கள்.

jeeva review
“ஏன் டார்லிங் பொங்கு ஆட்டம் ஆடுனீங்க?”

இன்று ஐ பி எல் சி சி எல் எல்லாம் வந்தும் தமிழ் நாட்டில் பிராமணர் அல்லாத தமிழர்கள் கிரிக்கெட்டை தங்கள் வாழ்க்கையாக முன்னெடுக்கும் பழக்கமே இல்லாமல் போய் விட்டது. எத்தனையோ அணிகளுக்கு இன்று வீரர்கள் தேவைப்பட்டும்  தமிழ் நாட்டில் பிராமணர் அல்லாத தமிழர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது தாங்கள் எல்லாம் ஆடும் விளையாட்டு அல்ல ; பார்க்கும் விளையாட்டு என்று எண்ணம் கெட்டிப்பட்டு விட்டது.எனவே அவர்களுக்கான பாதையே மூடப்பட்டு விட்டது . படத்தில் இதை அழுத்தமாக சொல்லாமல்,  எந்த புண்ணாக்குக் கோப்பையை வெல்ல இந்த சினிமா மேட்ச் ?

 ஒரு சமூக உண்மையை கதையாக வைத்துக் கொண்டு படம் எடுக்கும்போது அதற்கான நியாயம் செய்ய தில் இல்லாமல்  லகான் படத்தின் கிளைமாக்சை மனதில் வைத்து மேஜிக் காட்டி படத்தை முடிப்பது …. howwwwzzzzzaattttttttttttt??????

இந்தப் படத்தின்  உள்ள ஒரு காட்சியை வைத்தே இந்தப் படத்தை அழுத்தமாக முடித்து இருக்க முடியும் ?எப்படி?

சிறுவர்களின் கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு பையன் தீவிரமாக விளையாடுவதைக் காட்டி , “நான் ஒரு பெரிய  கிரிக்கெட் வீரனாக ஆக விரும்புகிறேன் ” என்று அவன் சொல்வதாக காட்ட வேண்டும். அப்போது இன்னொருவன் அவனது தோள் பட்டையை தடவிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டு ” ம்ஹும் ! நீயெல்லாம் எவ்வளவு நல்லா ஆடினாலும் கிரிக்கெட் வீரனாக ஆக முடியாது . மீறிப் போன அழிஞ்சு போயிடுவ ” என்று சொல்லி தடுத்து அழைத்துப் போவது போல படத்தை கனமான சோகத்தோடு முடித்து இருக்க வேண்டும் .

இப்படியெல்லாம் பிரச்னையை ஆழமாக நிகழ் காலத்தை ஒட்டி கையாளாமல் நுனிப்புல் மேய்ந்திருகிறார்கள்
விளைவு? ஒழுங்காக ஆடாவிட்டாலும் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அநியாயமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் அணி போல இருக்கிறது படம்

ஜீவா .. சேப்பாக்கம் மைதானத்தில் கோலி குண்டு ஆட்டம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →