தமிழ் ரசிகர்கள் எப்போதுமே ‘சினிமாவில் புதுமையான களத்தில் கதைகளுக்கு வரவேற்பு கொடுப்போம்’என்று நிரூபித்து கொண்டே இருக்கிறார்கள்.
மிருதன் படத்தின் கதையை இயக்குநர் சக்தி செளந்திரராஜன் சொன்னபோது இது போன்ற ஒரு கதையை இதுவரை பண்ணவில்லையே என்று தோன்றியது
இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை அதிகமாக இருந்தது. புதுமையான களத்தில் இறங்கினால் தான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும் என்று இறங்கிவிட்டேன்.
நடமாடும் பிண மனிதகளைக் கொண்ட ஸோம்பி வகை படங்கள் உலகம் முழுக்க வந்துள்ளது என்றாலும், தமிழில் இதுதான் முதல் படம் என்று நினைக்கிறேன்.
பொதுவாக ஸோம்பி வகை படங்கள், 90 சதவிகிதம் வைரஸ் பற்றியதாக இருக்கும். பத்து சதவிகிதம் அமானுஷ்ய சக்தியைக் கொண்டதாக இருக்கும்.
அதாவது ஆக்ஷன், ஹாரர், திரில்லர் என மூன்றையும் இணைத்ததாக இருக்கும்.
இந்தப் படத்திலும் அப்படி ஒரு வைரஸ் வருகிறது. அது ஒரு தொற்று. யார் உடலில் அது புகுந்தாலும், அவர்கள் ஸோம்பி ஆகிவிடுவார்கள்.
அந்த ஸோம்பிகளிடம் இருந்து ஒரு டிராபிக் போலீஸ்காரர் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படம். நான் அந்த வேடத்தில் நடித்துள்ளேன்.
சுமார் 22 நாட்கள் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தினோம். ஊட்டி குளிரில் காலை 7 மணிக்கு முதல் காட்சியை படமாக்கிவிடுவார் இயக்குநர். காலை உணவு, மதிய உணவு, மாலை டீ இவை மட்டுமே ஓய்வுக்கான நேரம் .
மொத்தமாக 54 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். 54 நாட்களில் 100 நாட்களுக்கான வேலையைப் பார்த்திருக்கிறோம்.
ஒட்டுமொத்த படக்குழுவின் கடுமையான உழைப்பு இப்படத்துக்கு பின்னால் இருக்கிறது. 54 நாட்கள் படப்பிடிப்பில் 35 நாட்கள் சண்டைப் பயிற்சியாளர் கணேஷ் எங்க கூடவே இருப்பார்.
அவருடைய பங்களிப்பு இப்படத்துக்கு ரொம்ப முக்கியம்.
இப்படத்தில் எப்போதுமே ஒரு சேஸிங் இருக்கும், சின்ன காட்சியில் கூட ஒரு ஆக்ஷன் இருக்கும், எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்து என்ன தாக்கும் என்பது கூட தெரியாத மாதிரியான ஒரு பதைபதைப்பு இருக்கும்.
படத்தின் சில போட்டோக்களைப் பார்த்துவிட்டு, ‘டிராபிக் போலீஸ் கையில் எப்படி துப்பாக்கி இருக்கும்?’ என்றெல்லாம் கேள்விகள் வந்தது. படத்தில் அதற்கான காரணம் இருக்கிறது.
காதல் இருக்கும் .வழக்கமாக படங்களில் பார்க்கிற காதல் காட்சிகள் இருக்காது. ” என்கிறார் ஜெயம் ரவி