ஜிப்பா ஜிமிக்கி @ விமர்சனம்

jibba 5
3 பிரண்ட்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் திவாகர் ஜி வி தயாரிக்க , அவரது மகன் கிருஷ் திவாகர் நாயகனாக நடிக்க ,  ஜோடியாக புதுமுகம் குஷ்பூ பிரசாத் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி  அறிமுக இயக்குனர் ரா. ராஜ சேகர்இயக்கி இருக்கும் படம் ‘ஜிப்பா ஜிமிக்கி’ . எவ்வளவு டால் அடிக்கும் இந்த ஜிப்பா ஜிமிக்கி ? பார்க்காலாம் .

கிருஷிக்கும் (கிருஷிக் திவாகர்) ஸ்ருதியும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தாலும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவர்கள் . வேலை செய்யும் அலுவலகப் பருவம் வரை அது தொடர்கிறது. ஆனால் கிருஷிக்கின் தந்தையும் (ஆடுகளம் நரேன்) ஸ்ருதியின் தந்தையும் (தாயுமானவன் மதி)  நெருங்கிப் பழகும் ஆத்மார்த்தமான  நண்பர்கள்.

அவர்கள் இருவருக்கும் கிருஷிக் – சுருதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து , சம்மந்திகளாக ஆக்கிக் கொள்ள ஆசை .

இந்த நிலையில் கிருஷிக் –  சுருதி இருவரும் பணி புரியும் அலுவலக நண்பன் ஒருவனுக்கு இப்போது கர்நாடக மாநிலத்தோடு இருக்கும்  குடகு  பகுதியில் திருமணம் நடக்கிறது.

jibba 4

அந்தத் திருமணத்துக்காக கோவையில் இருந்து குடகுவரை ஒன்றாகப் பயணிக்கும் கிருஷிக் – சுருதி இருவரும்,  அந்தப் பயணத்துக்குள் ஏதாவது திட்டமிட்டு , இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என்பதை  பெற்றோருக்கு – மனம் கோணாமல் – புரிய வைக்கலாம் என்று முடிவு செய்து பயணிக்கின்றனர் .
அவர்கள் திட்டம் நிறைவேறியதா? இல்லை அவர்களை ஒருவருக்கொருவர் பிடித்ததா ? பெற்றோர் ஆசைப்படி அவர்கள் வாழ்வில் இணைந்தார்களா?

– என்பதே இந்த ஜிப்பா ஜிமிக்கி .

குடகுப் பகுதியின் கொள்ளை கொள்ளையான இயற்கை அழகே இந்தப் படத்தின் பெரும் பலம் .

இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட காலத்தில் இந்தப் பகுதி மக்கள் “மொழியாலும் இனத்தாலும் நாங்கள் கன்னடத்தை விட தமிழுக்குத்தான் நெருக்கமானவர்கள் . எனவே எங்களை தமிழ்நாட்டோடு இணையுங்கள் ” என்று கூறினார்கள் . காரணம் குடகு என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மேற்கு என்று பொருள். (கிழக்குக்கு குணக்கு என்ற சொல் பழந்தமிழில் உண்டு )

 நியாயமாக அப்படி குடகுப் பகுதி தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்திருந்தால்  காவிரி உருவாகும் பகுதி முதற்கொண்டு காவிரி பாயும் பல பகுதிகள் தமிழ் நாட்டுக்குள்தான் இருந்திருக்கும் . ஆனால் அப்போதைய நமது தலைவர்கள் தங்களது  இல்லாத போலியான மாயையான அரசியல் சித்தாந்த சுயநலத்தால் ,குடகு வாழ் மக்களின் அந்தக் குரலை, கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

குடகு மக்களின் விருப்பத்துக்கு மாறாக , அந்தப் பகுதிகளை வலுக்கட்டாயமாக கர்நாடகாவோடு இணைத்துக் கொண்டனர் கன்னடர்கள். மத்திய அரசும் அதற்குத் துணை போனது . இதற்கு மூல காரணமாக இருந்தவர் விஸ்வேஸ்வரய்யா என்ற கன்னட என்ஜினீயர் . அதானல்தான் தமிழகத்துக்கு காவிரி பிரச்னையே வந்தது

எவ்வளவு அழகான பூமியை தமிழ்நாடு இழந்திருக்கிறது என்பது…

jibba 3
இந்தப் படத்தைப் பார்க்கும்போது புரிகிறது. சரவண நடராஜனின் ஒளிப்பதிவு குடகின் அழகை அள்ளி அள்ளிக் கொடுக்கிறது.

குடித்து விட்டு கொடுமைப்படுத்தியே மனைவியைக் கொன்று விட்டு அவள் இறந்த பிறகு அவளைக் காதலிக்கும் லாரி டிரைவர் (இளவரசு)…

 கன்னட அப்பாவுக்கும் தமிழ் அம்மாவுக்கும் மகனாகப் பிறந்து , அம்மாவின் அண்ணன் மகளான வாய் பேச முடியாத பெண்ணை மணந்து அன்புடன் வாழும் குடகு விவசாயி (நான் கடவுள் ராஜேந்திரன் )….

ஆகிய பாத்திரப் படைப்புகளில் இயக்குனர் ராஜசேகர் கவனம் ஈர்க்கிறார் .

jibba 2

தூக்கத்தில் எழுப்பி அப்படியே ஷேவிங் பிளேடு விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம் என்கிற மாதிரியான தோற்றத்தில் இருக்கிறார் நாயகன் கிருஷிக் . சற்றே அகன்ற லைலா மாதிரி இருக்கிறார் குஷ்பூ பிரசாத் .
பாடல்கள் பிரம்மாதப்படுத்தவும் இல்லை . படுத்தவும் இல்லை .
திரைக்கதையிலும் காட்சிகளிலும் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் .

ஜிப்பா ஜிமிக்கி… டால் கொஞ்சம் ‘டல்’தான்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →