திருப்பதி பிரதர்ஸ் சார்பில் என்.லிங்குசாமி மற்றும் ராகுல் பிலிம்ஸ் வழங்க சுபாஷ் சந்திர போஸ் மற்றும் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில் விஜய் வசந்த், சானியா தாரா , ஸ்ரீதேவி நடிப்பில் நடிப்பில் ரவி நந்தா பெரியசாமி இயக்கி இருக்கும் படம் வண்ண ஜிகினா .
எவ்வளவு பளபளப்பு இருக்கு? பார்க்கலாம் .
பாவாடை என்ற பெயர் கொண்ட –
அட்டக் கருப்பான-
விதம் விதமான வெள்ளைக்கலர் பெண்களுடன் சுற்றும் ஐ டி கம்பெனி இளைஞர்கள் நால்வருக்கு ஒப்பந்த அடிப்படையில் கால் டாக்சி ஓட்டுகிற-
அந்த இளைஞனுக்கு (விஜய் வசந்த் ) , இதுவரை சொல்லப்பட்ட விசயங்கள்தான் பிரச்னையே .
பாவாடை உண்மையில் மிக அழகிய தமிழ்ப் பெயராகவும் (பா + ஆடை= பாவாடை. பா என்பது நூல் என்றும் பாடல் என்றும் பொருள்படும்) அதே நேரம் சாமியின் பெயராக இருந்தாலும் அதை சொன்னால் எல்லாரும் சிரிப்பது , தனது கருப்பு நிறம் காரணமாக எந்தப் பெண்ணும் திரும்பிப் பார்க்காதது , அதே நேரம் அவன் பணிச் சூழலில் உள்ளவர்களின் பெண் சகவாச சந்தோஷங்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து மனம் குமைவது…..
— என்று தவிக்கும் அவன் , ஒரு நிலையில் தன் மனநிலையை ஐ டி கம்பெனி ஊழிய நண்பர்களிடம் பொங்கிச் சொல்கிறான் .
1ஃபேஸ்புக்கில் உனக்கு ஒரு பெண்ணைப் ‘பிடித்து’ விடலாம்’ என்று சொல்லும் அவர்கள், அதற்கேற்ப பாவாடைக்கு ஒரு ஃபேக் ஐடி உருவாக்குகின்றனர் . பாவாடையின் முகத்தைப் போட்டால் எந்தப் பெண்ணும் கண்டு கொள்ள மாட்டாள் என்கின்றனர்.
பாவடைக்கு எதிர்பாராத விதமாக பழக்கமான கிஷோர் குமார் (சுகு வெங்கட்) என்ற ஓர் அழகான புகைப்படக்காரனின் போட்டோவைப் போடுகின்றனர் . அந்த புகைப்படக்காரனின் விவரங்களையே பாவாடைக்கான புரஃபைலில் நிரப்புகின்றனர் .
அந்தப் பெயரில் புழங்கும் பாவாடை, ஏஞ்சல் பிரியா (சானியா தாரா) என்ற ஓர் அழகான பெண்ணின் புரஃபைலுக்கு நட்புக் கோரிக்கை கொடுக்கிறான் . கோரிக்கை ஏற்கப்படுகிறது. இன்பாக்ஸ் மூலமாக வாய்ஸ் சாட்டிங் செய்து ஆன் லைன் பழக்கம் தொடர்கிறது.
அதே நேரம் பாவாடையின் கால் டாக்சிக்கு வாடிக்கையாளராக வருகிறாள் பிரியா . அது பாவாடைக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் , கிஷோர் குமார் என்ற பெயரில் பேசுவது தான்தான் என்று பிரியாவுக்கு தெரிந்தால் நட்பையே துண்டித்து விடுவாள் என்று இவனாகவே பயந்து, உண்மையைச் சொல்லாமல் மறைக்கிறான் .
கோரஸ் பாடிக் கொண்டிருந்த பிரியா , பாவாடை கொடுத்த உந்துதலால் தனியாக பாடும் அளவுக்கு உயர்கிறாள் . அவன் மீது மதிப்பான அன்பும் கொள்கிறாள் பிரியா . ஆனாலும் தான்தான் கிஷோர் குமார் என்ற பெயரில் சாட் செய்கிறேன் என்று சொல்ல பயப்படுகிறான் பாவாடை .
இந்த கத்தரிக்காய் முத்தி கடைக்கு வரும்போது ஏஞ்சல் பிரியாவின் ஃபேஸ்புக் விவகாரத்தில் ஒரு திருப்பம்
இதற்கிடையே ஃபேஸ்புக்கில் பெண்களை நட்புப் பிடித்து படுக்கைக்கு பயன்படுத்திக் கொள்ளும் ஜார்ஜ் (ஆன்சன் பால் ) என்பவன் ஏஞ்சல் பிரியாவுக்கும் குறி வைக்கிறான் . ஆனால் அவன் நட்புக் கோரிக்கை மறுக்கப்படும் நிலையில் கொந்தளிக்கும் அவன், பிரியாவை ‘படத்தில் பாட வைப்பதற்கு’ என்று வரச் சொல்லி, கற்பழிக்க முயல்கிறான் .
அவனிடம் இருந்து தப்பிக்கும் பிரியா, பாவாடையின் கால் டாக்சியில் ஏறி கொடைக்கானல் போகிறாள் . அங்கே கிஷோர் குமார் விவகாரத்தில் ஒரு திருப்பம் .
ஏஞ்சல் பிரியாவை துரத்திக் கொண்டு ஜார்ஜும் கொடைக்கானல் வர , அப்புறம் என்ன நடந்தது என்பதே வண்ண ஜிகினா .
விஜய் வசந்த் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . இயல்பாக நடிக்கிறார் . சானியாதாரா அழகாக காட்டிக் கொள்கிறார் . 1980களில் வந்த தமிழ்ப் படங்களின் கதாநாயகிகள் போல கஷ்டப்பட்டு கலகலவென சிரிப்பதை மட்டும் சானியாதாரா தவிர்த்து இருக்கலாம் . கருகமணியாக நடித்து இருக்கும் ஸ்ரீதேவி நன்றாக நடித்து இருக்கிறார் .
பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி . ஜான் பீட்டர்ஸ் இசையில் பாடல்கள் அருமை . கொஞ்சம் பழைய பாணி என்றாலும் பின்னணி இசை சுகமாகவே இருக்கிறது.
கே.பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தில் , ஒரு விட்டேத்தியான பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயலட்சுமி என்ற நடிகை அந்தப் படத்தில் பல இடங்களில் ஃபடாஃபட் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பார். அதானாலேயே அவர் ஃபடாஃபட் ஜெயலட்சுமி என்றே அழைக்கப்பட்டார் . அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்’ என்ற பாடலில் கூட அந்த பெயர் அடிக்கடி வரும் .
அதை இந்தப் படத்தில் நாயகன் அடிக்கடி பயன்படுத்துகிறார் . கிளைமாக்ஸ் வரை அந்த வார்த்தை வருவது குறிப்பிடத்தக்கது. (ஃபடாஃபட் என்றால் பின் விளைவுகளை யோசிக்காமல் மான அவமானம் பார்க்காமல் நியாயமா அநியாயமா என்று கவலைப்படாமல் நினைத்ததை உடனே உடனே செய்வது என்று பொருள் )
வசனம் இன்னும் பக்குவமாக இருந்திருக்கலாம் .
படித்தவர் படிக்காதவர் பக்குவம் உடையவர இல்லாதவர் யாராக இருந்தாலும் சரி .. காதலில் தோற்றால் தற்கொலைதான் என்று இல்லாமல் வேறு ஏதாவது தன்னம்பிக்கையான விதத்தில் யோசித்து இருக்கலாம் .
கருப்பு நிறத்தை கம்பீரப்படுத்தி இருக்கலாம் .
அழகு என்பது உடல் சம்மந்தமான விசயம் இல்லை . மனம் சம்மந்தமான விஷயம் . வயசுக்கும் அழகுக்கும் சம்மந்தம் இல்லை என்று நிறுவி இருக்கலாம் .
முக நூல் நட்பு , சாட்டிங் , பழக்கம் , காதல் , அதன் விளைவுகள் இவற்றின் இன்றைய போக்கு என்ன என்பதை இன்னும் நவீனத் தன்மையோடு காட்டி இருக்கலாம் .
வேறொருவரின் போட்டோ மற்றும் விவரங்களை வைத்து பேஸ் புக்கில் பொய் புரஃபைல் உருவாக்கும் ஃபேக் ஐடி அயோக்கியத்தனத்தை செய்பவர்கள் பேஸ்புக்கில் நடந்து கொள்ளும் விதத்தால் …
போட்டோ மற்றும் விவரங்களுக்கு சொந்தமான – விசயமே தெரியாத அந்த நிஜமான அப்பாவி நபர் எப்படி எதிர்ப்புகளுக்கு ஆளாகிறார்; பாதிக்கப்படுகிறார் என்ற ஒரு ட்ராக்கில் இந்தப் படத்தின் கதை போய் இருந்தால் இன்னும் சிறப்பான படமாக கொண்டு வந்திருக்கலாம்
இன்று எல்லோருக்கும் பழக்கமான ட்ரெண்டிங் ஆன பேஸ்புக் பின்னணியில் வந்திருக்கிறது படம் .
மொத்தத்தில் ஜிகினா …. what on your mind is !