லார்ட்ஸ் பி இன்டர்நேஷனல், வி வி கே என்டர்டைன்மென்ட் சார்பில் பிரதீப் ஜோஸ் உடன் சேர்ந்து தயாரித்து இருப்பதோடு, எழுதி இயக்கி கதாநாயகர்களில் ஒருவராக அறன் வி நடிக்க,
ஷாரிக், ஆஷிக், அம்மு அபிராமி, சிவம் , சரத் நடிப்பில் வந்திருக்கும் படம்.
மூன்று நண்பர்களில் ஒருவனுக்கு (ஷாரிக் பாலா ) அவனது காதலி ( அம்மு அபிராமி) சினிமாவில் நடிக்க ஆடிஷனில் கலந்து கொள்ள நேரம் குறித்து விட்டுக் காத்திருக்க,
அவனின் நண்பன் ஒருவன் (அறன் வி ) உருவாக்கிய – ஐநூறு அடி ஆரத்தில் இயக்கப்படும் எந்த டெலிபோன்களையும் ஒட்டுக் கேட்கும் திறன் கொண்ட டெரரிஸ்ட் டிராக்கர் என்ற புதிய கண்டுபிடிப்பை ,
மேட்டுக்குடி ஆசிரியர் ஒருவர் ஜாதி ஆணவம் காரணமாக புறக்கணிக்க- அதனால் அவன் மனம் ஒடிந்து போய் விட ,
தண்ணி அடித்து அவனைத் தேற்றுவதற்கு நடிப்பு ஆசை உள்ளவனை – ஜாலியான இன்னொரு நண்பன் (ஆஷிக்) அழைக்கிறான் .
காரில் மகாபலிபுரம் செல்லும் வழியில் , இளம்பெண் ஒருத்தி ஒரு தாதாவால் கடத்தப்படுவதை அவர்கள் பார்க்க, அந்தக் காரைப் பின் தொடர்ந்து பயணிப்பதன் மூலம் , தனது டெரரிஸ்ட் டிராக்கரை இயக்கி, கடத்தல் செய்யும் நபருக்கு வரும் போன்களை பதிவு செய்து போலீசுக்கு அனுப்பி கடத்தப்படும் பெண்ணை காப்பாற்ற இந்த நண்பர்கள் முயல,
தாதா, அரசியல்வாதி, போலீஸ், ரவுடிகள், போதைப்பொருள் விற்பவர்கள், துறைமுக அதிகாரி, தேசியப் புலனாய்வு முகமை என்று கடத்தகாரர்கள் தரப்பு நீள
நடந்தது என்ன என்பதே இந்த ஜிகிரி தோஸ்து. ஜிகிரி தோஸ்து என்றால் நெருங்கிய நண்பர் என்று பொருள் .
சற்றே வித்தியாசமான ஐடியா கொண்ட கதையை மிக எளிமையாக இயல்பாக அவர்கள் ஆசைப்படி எடுத்து இருக்கிறார்கள் .
சின்னச் சின்ன ஐடியாக்கள் , சில நேரம் கொஞ்சம் காமெடி ஆகியவை ஈர்க்கின்றன .டெரரிஸ்ட் டிராக்கர் என்று ஒரு நல்ல ஐடியா பிடித்தவர்கள் மற்ற விஷயங்களில் லாஜிக் தவற விட்டு இருக்கிறார்கள் .
முக்கியக் கதாபாத்திரங்களான மூன்று நண்பர்களும் நடிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வசனம் மட்டுமே பேசி இருக்கிறார்கள்.
பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் ரொம்ப மோசம் எல்லாம் இல்லை
இளையவர்களின் முயற்சியைப் பாராட்டலாம் .