ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், ஃ பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரிக்க, ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, நவீன் சந்திரா, சத்யன், சஞ்சனா நடராஜன் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம்.
பிரதமர் ஆகவும் வாய்ப்புள்ள பெண் முதல்வரின் கட்சியில் ஒரு நடிகரும் (ஷைன் டாம் சாக்கோ) , ஓர் இலக்கியவாதியும் (இளவரசு) எதிர் எதிராகக் களம் ஆடுபவர்கள். அடுத்த முதல்வர் பதவி யாருக்கு என்பதில் போட்டி போடுபவர்கள். நடிகரின் தம்பி (நவீன் சந்திரா) கொடுமையான வனக் காவல் உயர் அதிகாரி.
இலக்கியவாதிக்கு தென் மாவட்டங்கள் முழுக்க உள்ளூர் பெருந்தலைகள் ஆதரவு உண்டு. அவர்களில் ஒருவன் மதுரை வாழ் தாதாவும் கிளின்ட் ஈஸ்ட் வுட் ரசிகனுமான அல்லியஸ் சீசர் ( ராகவா லாரன்ஸ்) ஜூலியஸ் சீசர் படம் மீது கொண்ட பிரேமையால் அல்லியன் என்ற பெயரை அல்லியஸ் சீசர் என்று மாற்றிக் கொண்டவன். அடிப்படையில் பழங்குடி வம்சத்தில் வந்தவன். அவன் மனைவி மலையரசி ( நிமிஷா சஜயன்) இன்னும் அந்த வன மகள் உணர்வில் இருப்பவள்.
இலக்கியவாதி அரசியல்வாதிக்கு ஆதரவாக இருக்கும் அல்லியஸ் சீசர் உட்பட்ட நான்கு பேர்களைக் கொன்றால் இலக்கியவாதியின் பலம் குறையும் நடிகனின் அரசியல் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்ற நிலையில்,
குற்றம் செய்யாமல் சிறையில் இருக்கும் நான்கு பேரை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவரையும் கொல்ல அனுப்புகிறான் வணக்காவல் உயர் அதிகாரி
அல்லியசைக் கொல்ல அனுப்பப்படும் கிருபை என்கிற ரே தாஸ் ( எஸ் ஜே சூர்யா), இன்ஸ்பெக்டர் வேலைக்கு போக வேண்டிய சூழலில் , அல்லியஸ் செய்த ஒரு கொலையில் குற்றவாளியாக்கப்பட்டு ஜெயிலுக்கு வந்தவன் .
அல்லியசை கொன்று விட்டால் கேசை முடித்து கிருபையை போலீஸ் ஆக்குவதாக வாக்குக் கொடுக்கிறான் வனக் காவல் உயர் அதிகாரி.
சினிமா ரசிகனான அல்லியஸ் சீசர் தமிழ்நாட்டின் முதல் கருப்பு ஹீரோவாக வர ஆசைப்பட, தனது உதவி இயக்குனர் நண்பனுடன் (சத்யன்) கிருபை கதை சொல்லப் போய் இயக்குனர் ஆக, அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்.
மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் . பின்புல உருவாக்கம் பிரம்மாதம் . காட்சிகளின் விவரணைகள், அடையாளப் படுத்துதல் , சின்னச் சின்ன நகாசு வேலைகள் யாவும் அருமை .
வழக்கம் போல மற்ற படங்களில் செய்யும் எல்லா வேலைகளும் இந்தப் படத்திலும் செய்கிறார் லாரன்ஸ் . முன்பே பல வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்தை நினைவுபடுத்தும்படி இருக்கிறது இந்தப் படம்
தனது பாணி நடிப்புக்கு கம்மியாக வேலை இருந்தாலும் கேரக்டருக்குத் தேவையானதை செய்து இருக்கிறார் எஸ்ஜே சூர்யா
குறைவான காட்சிகள் என்றாலும் அற்புதமாக நடித்துள்ளார் நிமிஜா சஜயன்.
மிருகங்களின் பாஷை அறிந்த – கொஞ்சம் மிருகமாகவே வாழ்கிற யானைகளைக் கொடூரமாக வேட்டையாடும் செட்டாணி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விது . பிரம்மிப்பு
சந்தோஷ் நாராயணனின் இசை, எஸ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு, சந்தானத்தின் தயாரிப்பு வடிவமைப்பு , பால சுப்பிரமணியத்தின் கலை இயக்கம், குணால் ராஜன் மற்றும் சுரேன் ஜி யின் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக்கலவை , பிரவீன் ராஜாவின் ஆடை வடிவமைப்பு, , மோனேஷின் காட்சி மெருகூட்டல், ரங்காவின் வண்ணம் யாவும் சிறப்பு . இவர்களிடம் வேலை வாங்கிய வகையில் ஜொலிக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
ஆனால் கதை திரைக்கதையில்தான் படம் பலவீனமாகி நிற்கிறது .
பிய்ந்து போன தோசையை குவித்து வைத்து சாப்பிட சொல்வது போல ஆரம்பக் காட்சிகள் இருக்கின்றன.
இந்தப் படத்துக்கு இவ்வளவு நீளம் என்பது தேவையற்ற ஒன்றே .
பொதுவாக இப்போது பல தென்னிந்தியப் படங்களிலேயே சந்தன வீரப்பன் போன்ற ஒரு கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து விட்டு , ஆனால் இன்னொரு கதாபாத்திரம் மூலம், சந்தன வீரப்பனையே கெட்டவனாக சித்தரிக்கும் அயோக்கியத்தனம் தொடர்ந்து செய்யப்படுகிறது . இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை .
”நீ செய்ய நினைக்கிறதைதான்டா நான் செஞ்சேன் . ஆனா எனக்கு கெட்டவன்னு ஒரு பேரு . இப்போ நீ என்ன செய்யப் போற/” என்று அல்லியஸ் சீசரைப் பார்த்து செட்டாணி கேரக்டர் கேட்டு இருந்தால், இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு .
ஆனால் ‘மகள் தாலியறுத்தாலும் பரவால்ல . மருமகன் சாகணும்’ என்று நினைக்கும் கொடூர மாமியார் போல , படம் நல்லா வராட்டியும் பரவால்ல. அதை மட்டும் சொல்லவே கூடாது என்பதில்அதி அதி அதீத கவனமாக இருந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஜிகிர்தண்டா முதல் பாகத்தில் ஊரே நடுங்கும் ஒரு ரவுடிக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வர, அவனை ஒரு டைரக்டர் நடிப்பு சொல்லித் தருகிறேன் என்ற பெயரில் அடி வெளுக்க, அதில் சினிமாவின் சக்தி தெரிந்தது . நாமும் படத்தைக் கொண்டாடினோம்.
ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில்?
ஒரு வன கிராமத்தை வெறி பிடித்த வனக் காவல் துறை சுட்டுப் பொசுக்கி அழிப்பதை வீடியோ கேமராவில் படம் பிடித்து ஒட்டிக் கோர்த்து ஓட்டிக் காட்டுவதற்கு சினிமா டைரக்டர் எதுக்கு? ஒரு வீடியோ ஜர்னலிஸ்ட் போதுமே பாஸ் . இதுல என்ன சினிமாவின் சக்தி வெளிப்படுது?
இப்படியாக படத்தின் ஜிகிர் (இதயம் — அதாவது கதை திரைக்கதை ) சரி இல்லை என்றாலும், தண்டாவை ( குளிர்ச்சி — அதாவது மேக்கிங் ) வைத்து தப்பிக்கிறது படம்.