இந்த சூழலில் போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்றின் தலைவனான தெய்வநாயகத்துக்கு (ஆர்.அமரேந்திரன்) பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
கடைசியாக கையிருப்பில் இருப்பது 4 கிலோ கொக்கைன் போதை மருந்து மட்டுமே. அதை ஐதராபாத்தில் உள்ள சீன மாஃபியாவிடம் விற்க முடிவு செய்கிறான் அவன்
அதை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, மருந்து என்ற பெயர் கொண்ட விஞ்ஞானி (பகவதி பெருமாள் ) உதவியுடன்,
போதை மருந்தை சில ரசாயனப் பொருட்களுடன் சேர்த்து காரின் பெயின்ட் ஆக மாற்றி , அதை ஒரு காருக்கு அடித்து தயார் செய்கிறான்.
அதாவது போதை மருந்தை காரில் கடத்துவது அல்ல… காராகவே கடத்துவது !
அந்த காரை குறிப்பிட்ட நேரத்தில் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க,
நாஞ்’ஜில்’ சிவாஜி (சித்தார்த்) , ‘ஜங்’குலிங்கம் (அவினாஷ் ரகுதேவன்), ஜாகுவார் ‘ஜக்’(+அ)ன் (சனந்த்) என்ற மூன்று இளைஞர்களை அமர்த்துகிறான்.
மூன்று இளைஞர்களும் காரை ஓட்டிச் செல்ல, தெய்வநாயகத்தின் உதவியாளன் பைந்தமிழும் (பிபின்) மருந்தும் ஓன்று சேர்ந்து, நரசிம்மன் (நாகா) என்பவன் மூலம்,
அந்தக் காரை ரகசியமாக கைப்பற்ற பிளான் பண்ணி செயல்பட, ஜில் ஜங் ஜக் மூவரும் போதைக் காரை இழைக்கிறார்கள்.
‘விஷயம் தெய்வநாயகத்துக்கு தெரிந்தால் நமக்கு மரணம் நிச்சயம்’ என்று எண்ணும் ஜில், தெய்வநாயகத்தின் பரம எதிரியான ரோலக்ஸ் ராவுத்தரை (ராதாரவி) சீனுக்குள் கொண்டு வந்து,
இருவருக்கும் முட்டிக் கொள்ள வைக்கிறான் .இடையில் அட்டாக் ஆல்பர்ட் (எம் ஜி சாய் தீனா) என்ற டெர்ரர் தாதாவும் குறுக்கிடுகிறான் .
இத்தனை டகால்ட்டிகளுக்கு மத்தியில் சுள்ளான் டகால்ட்டிகலான ஜில் ஜங் ஜக் மூவருக்கும் என்ன ஆனது என்பதே இந்த படம் .
இது ஒரு காமிக்ஸ் தன்மை நிறைந்த அப்நார்மல் ஃபேண்டசி திரில்லர் படம் . தசாவதாரம் படம் அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்தப் படமும் கேயாஸ் தியரியை பட்டாம்பூச்சியோடு சேர்த்து சொல்கிறது.
சித்தார்த்தின் கேரியரில், இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் நிச்சயம் தனியான ஒரு இடத்தைப் பிடிக்கும்.
கிளப்பில் சீட்டு ஆடுவதில் தன் அப்பாவோடு (நாசர்) சேர்ந்து பித்தலாட்டம் செய்வதில் ஆரம்பித்து கடத்தல் வேலை செய்ய பொறுப்பேற்கும் ஜில் கதாபாத்திரத்தில் சும்மா ஜங் என்று பொருந்துகிறார் சித்தார்த்
வித்தியாசமான தோற்றம், சென்னை தமிழை மிக அசால்ட்டாக படபடவெனப் பேசும் அந்த கெத்து, உடல் மொழி எல்லாம் அடடே போட வைக்கிறது.
ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய முகபாவனைகள் மிகவும் ரசிக்க வைக்கிறது. நடிப்பை வெளிப்படுத்த படத்தில் நிறையவே வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
அவினாஷ் ரகுதேவன், சனந்த் ரெட்டி இருவரும் சித்தார்த்துடன் போட்டி போட்டு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ராதாரவி, அமரேந்திரன், நாகா, சாய்தீனா, பிபின், பகவதி பெருமாள், சோனு ஸாவந்தாக நடித்திருக்கும் ஜாஸ்மின் பாஸின், அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோரும்,
படத்தின் அப்நார்மல் தன்மையை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளனர் .
கதை என்ற ஒற்றை வரி வழக்கமான ஒன்றுதான் என்பதால் படத்தில் மற்ற எதுவுமே வழக்கமானதாக இருந்து விடக் கூடாது என்பது படக் குழுவின் தீர்மானம் போல,
அதற்கு ஏற்ப பிங்க் கலர் கார் , சித்தார்த்தின் நீல கலர் தலைச்சாயம் , கௌபாய் கணக்கான பார் செட், மூவருக்குமான உடைகள் , 60 களின் ஹீரோக்கள் மாதிரியான நறுக்கு பென்சில் மீசை ,
பழுப்பு கலர் ஜெர்க்கின்கள் என்று… வித்தியாசங்கள் ஏராளம்.
ஏரியல் ஷாட் வைக்கும்போது தரையும் பூமியும் கூட வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, பய புள்ளைக ரொம்பவே மெனக்கெட்டு இருக்குக.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். கொஞ்சம் மிஸ் ஆனாலும் கந்தர கோலம் ஆகி விடும்
”ஒரு பெரிய வேலைய செய்யறதுக்கு முன்னாடி ஒன்பது சின்ன வேலையை யோசிக்காம முடிக்கணும் ”
“பரம பதம் தெரியுமா? அதுல எல்லாரும் ஏணியை புடிச்சு ஏறுவாங்க . ஆனா நான் பாம்போட வால புடிச்சு ஏறி மேல வர்றவன் “
— போன்ற இடங்களில் மோகன் ராம கிருஷ்ணன் , தீரஜ் வைத்தியின் வசனங்கள் சிறப்பு .
(பதிலுக்கு ” பாம்போட வாலை புடிச்சு ஏறும் வரைக்கும் ஒண்ணும் தெரியாது . ஆனால் பாம்போட தலைக்கிட்ட வருவா இல்ல . அப்போ பொட்டுன்னு ஒரே போடு ” என்று சித்தார்த்தை வச்சு கவுண்ட்டர் கொடுத்திருக்க வேணாமா ? என்னப்பா நீங்க !)
ஹரஹர மஹ்ஹா தேவஹிய ஸ்ஸ்ஸினிமாவுக்கு கொண்டு வன்த்திருக்கேள்ழ்ள்.. புரின்ஸ்ச்சவா நினஸ்ச்சு நினஸ்ச்சு சிரிப்பாஆஆஆஹ்ஹ்ஹ்..
ஆனாஹ் , அதுஹ்காஹ்ஹாஹ , அன்த்த் ‘காட்டேர்ரீஹ் காஹ்ட்டு எர்ரும ..” டையலாஹ் கொன்ஸ்ச்சம் ஜ்ஜாஸ்ஸ்ஸ்த்திடா அம்பி !
சிவ சங்கரின் கலை இயக்கம், ஷெரீப்பின் நடனம் , சதீஷ் ரமேஷின் விசுவல் எஃபெக்ட்ஸ் இயக்கம் , சுரேஷ் ரவியின் டிஜிட்டல் இமேஜிங் மற்றும் வண்ணம் ,
ரிவா டிஜிட்டலின் டைட்டில் அனிமேஷன் ஆகியவையும் பாராட்டுக்குரியன .
விஷால் சந்திரசேகரின் இசை பாடல்களில் மிக சிறப்பு . ஆனா ரெட் ரோடு பாடல் தவிர படத்திலம் எதுவுமே இல்லையே .
அட , ‘ஆகா.. ஆகா… ஆககா….’ என்று பேர் வாங்கிய அகா உகா பாடலான ‘ஷூட் தி குருவி” பாடல் கூட எங்கோ பின் பாட்டுப் பாடப் போயிருச்சே ஏன் ?
முதல் பாதி முழுக்க பரபரப்பாக விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக செல்லும் திரைக்கதையும் இரண்டாம் பாதியில் மரத்தில் முட்டி நிற்பதைத் தவிர்த்து இருக்கலாம் .
இரண்டாம் பகுதி ஸ்கிரிப்டை எடுத்து மொட்டை மாடியில் நின்று நன்றாக உதறி தேவை இல்லாத எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை எல்லாம் உதிர்த்து விட்டு ,
இலகுவாக்கி சுமை குறைத்து ரசிகனுக்கு விரித்துப் போட்டு இருந்தால் இன்னும் சந்தோஷமாக உட்கார்ந்து இருப்பான் .
எனினும்….
ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் நாயகியே இல்லாத ஒரு வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்குரிய ஸ்டைலில் படமாக்கத் துணிந்த சித்தார்த்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மொத்தத்தில் …..
ஜில் ஜங் ஜக் … ஜிவ்வ்வ்வ்!