ரைட் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ரமீஸ் மற்றும் சதீஷ் சந்திர சேகரனின் கதைகள் நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரசேகரன்….. இருவரும் இணைந்து தயாரிக்க,
மெட்ராஸ் படப் புகழ் கலையரசன் , தயாரிப்பாளர் ரமீஸ், காளி வெங்கட், முண்டாசுப்பட்டி முனீஸ் காந்த் மற்றும் அர்ஜுனன் பிரீத்தி ஆகியோர் நடிப்பில் அதே சதீஷ் சந்திரசேகரன் இயக்கி இருக்கும் படம் ஜின் .
ஜின் என்பது அரேபியப் பேய்களைக் குறிக்கும் சொல் . அதிலும் நல்ல ஜின் , கெட்ட ஜின் , பெண் பேய்க்கு ஜீனியா என்ற பெயர் .. இப்படி பல பிரிவுகள் உண்டு .
எஸ் மக்கா .. இது ஒரு பேய்ப்படம்!
“எவ்வளவோ பேய்ப் படங்கள் வரும் காலத்தில் இன்னும் ஒரு பேய்ப்படம் என்பதைத் தவிர உங்கள் படத்தில் என்ன புதுமை?” என்று இயக்குனரிடம் கேட்டேன் .
“பொதுவாக பேய்ப் படங்களில் யாரவது சிலர் ஏதாவது ஒரு ஆபத்தான இடத்துக்குப் போவார்கள் . அங்கே அவர்களுக்கு பேய் பிடிக்கும் . ஆனால் இந்தப் படத்தில் ஒரு நண்பனுக்கு முன்னரே பேய் பிடித்திருப்பது யாருக்குமே தெரியாது ” என்கிறார் இயக்குனர் .
கதை?
சில நண்பர்கள் ஒரு ஹாலிடே ரிசார்ட்டுக்கு போகிறார்கள் . அங்கே ஒவ்வொருவருக்கும் பேய் அனுபவம் ஏற்படுகிறது . சொன்னால் மற்றவர்கள் சிரிப்பார்கள் என்று பயந்து கொண்டே ஒரு நிலைவரை சொல்லாமல் இருக்க , உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்போது நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தப் படமாம் .
“படத்தில் காதல் மற்றும் நட்பு காட்சிகள் உண்டு . மற்றபடி பேயுடன் நாங்கள் காமெடியை கலக்கவில்லை. இது சீரியஸ் பேய்ப்படம். ஊட்டி, கேரளா , வால்பாறை போன்ற இடங்களில் படம் பிடித்துள்ளோம்” என்கிறார் சதீஷ் சந்திரசேகரன்.
அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி . வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்து, அப்புறம் சினிமா மீது ஆசை வந்து குறும்படங்கள் இயக்க ஆரம்பித்து இப்போது , தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் ஆகிவிட்டார் . அவரது வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் இந்தப் படமே எடுக்கப்படுகிறதாம் .
ஒரு நிலையில் சதீஷ் சந்திர சேகரன் , ரமீஸ் இருவராலும் படத்தை முடிக்க முடியாமல் போக, கிரவுட் ஃபண்டிங் முறையில் காசு சேர்த்து படத்தை முடித்துள்ளனர் .
படத்தின் இசையமைப்பாளர் ரதன். இவர் அண்டால ராட்சஷி, எவடே சுப்பிரமணியம் போன்ற தெலுங்குப் படங்களுக்கு இசை அமைத்தவர். அண்டால ராட்சஷி படத்துக்காக மா டி வி மற்றும் ரேடியோ மிர்ச்சி விருது பெற்றவர் . சந்தானம் நடிக்கும் வாலிப ராஜா படத்துக்கும் இசை அமைத்திருப்பவர் .
படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் , ஏ ஆர் ரகுமான் இசை அமைத்த ஜெய் ஹோ பாட்டுக்கு ஒளிப்பதிவு செய்தவராம் . இந்த ஜெய் ஹோ பாடல் அமெரிக்க ஜனாதிபதியின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் திரையிடப்பட்டதாம் .
“ஜின் பேயைக் காட்டினால் அது தொடர்பாக தர்கா சம்மந்தமான காட்சிகள் வர வேண்டுமே. அப்படி எதுவும் இருக்கா ?” என்றேன் . திடுக்கிட்டுப் போய் “அடடா! சஸ்பென்ஸ் உடைஞ்சு போச்சே” என்பது போலப் பார்த்தார் சதீஷ் சந்திரசேகரன். அதுவே டெர்ரராக இருந்தது .
கிண்ணென்று வரட்டும் ஜின் !