சிறப்பான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் ஆர் பி சவுத்ரியின் மகன் ரமேஷ் ஹீரோவாக நடிக்க,
வித்தியாசமான கதை திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் உருவாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஜித்தன். இந்தப் படத்துக்கு பிறகு இன்று வரை ரமேஷ், ஜித்தன் ரமேஷ் என்றே அழைக்கப்படுகிறார் .
இந் நிலையில் இப்போது ஆர் பி எம் சினிமாஸ் தயாரிப்பில் ஜித்தன் ரமேஷ், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்க , இயக்குனர் வின்சென்ட் செல்வாவின் கதை திரைக்கதை வசனத்தில்,
ராகுல் என்பவர் இயக்கி இருக்கும் படம் ஜித்தன் -2.
படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது . ரமேஷின் தோற்றம் வித்தியாசமாக இருந்தது . ஒளிப்பதிவு நன்றாக இருந்தது . ஒலி நன்றாக இருந்தது .
”ஆசை நிறைவேறாமல் இறந்து போனவர்களின் ஆன்மா பூமியிலேயே சுற்றி ஆசையை நிறைவேற்றிக் கொள்ளூம்” என்ற வசனம் இந்தப் படத்தின் முன்னோட்டத்திலும் வந்தது .
பத்திரிக்கையாளர் சந்திப்பின் சென்டர் ஃபிகரே இயக்குனர் வின்சென்ட் செல்வாதான் . (நிகழ்ச்சிக்கு கதாநாயகி சிருஷ்டி டாங்கே வராத நிலையில் வேறு யாரை சொல்வது ?)
படத்துக்கு இசை அமைத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா படம் பற்றிப் பேசும்போது ” வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வந்த ஜித்தன் எனக்கு மூணாவது படம் . அந்தப் படத்தில் வந்த ஆ முதல் ஃ தானடா பாடல் செம ஹிட் ஆனது .
இன்றும் எதாவது ஆடல் பாடல் நிகழ்ச்சி என்றால் தவறாமல் ஒலிக்கும் பாடல் அது . எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்தது அந்தப் பாடல் .
இப்போது அதே வின்சென்ட் செல்வாவின் கதை திரைக்கதை வசனத்தில் ஜித்தன் பார்ட் 2 வருகிறது . படத்தில் ஒரே ஒரு பாடல்தான் வருகிறது . அது இன்னொரு ஆ முதல் ஃ தானடா பாடல் அளவுக்கு இருக்கும் .
படத்துக்கான ஒரு முக்கிய இசை டிராக்கை ஹாலிவுட்டில் இருந்து காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம் ” என்றார்
இயக்குனர் வின்சென்ட் செல்வா தன் பேச்சில் ” ஜித்தன் படம் முடிந்த பிறகு கொஞ்ச நாள் கழித்து ரமேஷ் என்னிடம் ‘ஜித்தன் பார்ட் 2 பண்ணலாம் சார் . கதை ரெடி பண்ணுங்க ‘ என்றார் .
ஜித்தன் படத்தில் ரமேஷ் கேரக்டர் இறந்து விடும் நிலையில் அது எனக்குன் சவாலாகவே இருந்தது . ஒரு வித்தியாசமான பாணியில் ஜித்தன் கேரக்டருக்கு உயிர் கொடுத்தேன் . ஒரு கதை ரெடி செய்தேன் .
ரமேஷ் ரொம்ப ஹேப்பி .
அப்போது என் உதவியாளர் ராகுல் என்னிடம் ‘ சார் .. நான் இந்த கதையை டைரக்ட் பண்ண விரும்பறேன் எனக்கு கொடுங்க’ என்றார் . தவிர அவரே தயாரிக்கவும் முன் வந்தார் . சரி என்று அவரிடம் கொடுத்தேன் .
கதை திரைக்கதை வசனம் முழுக்க எழுதிக் கொடுத்தேன் . தவிர ரமேஷ் மற்றும் ராகுல் இருவரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க , நான் படப்படிப்பு முழுக்க உடன் இருந்தேன் .
படத்தில் ரமேஷ் கேரக்டருக்கு எப்படி உயிர் வருகிறது . அவருக்கு பேயுடன் ஏற்படும் அனுபவங்கள் என்ன என்பது உங்களுக்கு சுவாரஸ்யமானதாக இருக்கும் ” என்று சொல்லி ஆர்வம் தூண்டினார் .
படத்தை இயக்கி இருக்கும் ராகுல் பேசும்போது
” இது ஒரு ஹாரர் காமெடி படம் . விஜய் மில்டனிடம் பணியாற்றிய மிச்செல் ஒளிப்பதிவு செய்கிறார்.
எடிட்டர் லெனினின் உதவியாளர் மாருதி கிருஷ் படத் தொகுப்பு செய்துள்ளார் . தான் இயக்க வேண்டிய கதையை எனக்கு விட்டுக் கொடுத்த வின்சென்ட் செல்வா சாருக்கு நன்றி. ” என்றார்
நாயகன் ரமேஷ் பேசும்போது
” ஜித்தன் படம்தான் எனது அடையாளம் . பத்து வருடம் கழித்து பார்ட் டூ வருகிறது . படத்தை இயக்கப் போவது ராகுல் என்று முடிவான உடனே ,
எனது தந்தை ஆர் பி சவுத்ரியிடம் பணமோ உதவியோ கேட்டுப் போய் நிற்கக் கூடாது என்று உறுதியாக சொல்லி விட்டேன் அதற்கேற்ப ராகுலே தயாரித்து விட்டார் ” என்றார்
சபாஷ் !