ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை @ விமர்சனம்

jk 1

இயக்குனர் சேரன் தனது டிரீம் தியேட்டர்ஸ் சார்பில் தயாரித்து எழுதி இயக்க, சர்வானனந்த், நித்யா மற்றும்  சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் படம் ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை .

பார்ப்பவர்களோடு படம் நட்பாக இருக்குமா ? பார்க்கலாம்

ஜெயக்குமார் (சர்வானந்த்) — நித்யா (நித்யா) இருவரும் நெருங்கிய  நண்பர்கள் . இந்த நட்பு வட்டத்தில் தோத்தாத்ரி (சந்தானம்) உட்பட வேறு சிலரும்  உண்டு .

படிப்பு முடித்து வாழ்வின் ஒரு நிலைவரை ஜாலியாக பார்ட்டி , தண்ணி என்று சுத்தும் ஜெயகுமார், ஒரு முக்கியமான சம்பவத்துக்குப் பிறகு ,  தன் அப்பா அம்மா , தம்பி தங்கை இவர்களை வசதியாக வாழ வைக்க சீக்கிரம் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான் .

அந்த சம்பவம் ஒரு  கொடூர விபத்து . தண்ணி அடித்து விட்டு நடு இரவில் பைக்கில் வரும்போது நடந்த அந்த விபத்தில் நண்பன் ஒருவன் இறந்து விட , அவனையே மலை போல நம்பி இருந்த அவனது அப்பாவி விவசாயி அப்பா அம்மா மூன்று தங்கைகள் எல்லாம் கஷ்டப்பட அவர்களுக்கும் கூட உதவ  வேண்டிய நிலைமை வேறு .

ஜெயகுமார் தனது குடும்பத்தின் நன்மைக்காக சீக்கிரம் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதில் இந்த விபத்துக்கு ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது.

jk 3

எதிலும் திட்டவட்டமான தோழி நித்யா , துணை இருக்கும் மற்ற நண்பர்கள் இவர்களுடன் பேச்சு மாற்றுத் திறனாளி ஓவியர் ஒருவர் (மனோபாலா) இவர்களைக் கொண்டு  ஒரு கம்பெனி ஆரம்பித்து கிரியேட்டிவ் ஆக, பல தொழில்கள் செய்து முன்னேறுகிறான் ஜெயகுமார் .

இதனால் பிரபல தொழில் அதிபர் ருத்ராட்சகனின் (பிரகாஷ்ராஜ்) கோபத்துக்கு ஆளாகி  பணத்தை இழக்கிறான் . ஆனால் துவளாமல் தொடர்ந்து உழைக்கிறான் .

ஜெயகுமார்  ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டே இருப்பது, அவன் மீது  அதிக அன்பு காட்டும் தோழி  நித்யாவை உறுத்துகிறது . அதற்கான காரணம் தெரிய வரும்போது நித்யா நொறுங்கிப் போகிறாள்.

அந்தக்  காரணத்தை வேறு யாருக்கும் சொல்லாத ஜெயக்குமார் , தனது குடும்பம் , நண்பர்கள் , இறந்து போன நண்பனின் குடும்பம் எல்லோருக்கும் தேவையான  பணத்தை சம்பாதித்துக் கொடுத்து விட்டு , கம்பெனியை நித்யாவின் பெயரில் எழுதி வைத்து விடு , நண்பர்களையும் பங்குதாரர்கள் ஆக்கி விட்டு ,  வேலைக்குப் போவதாக மற்ற எல்லாரிடமும் சொல்லி விட்டு வெளிநாடு போகிறான் .

இனி அவன் திரும்பி  வரவே மாட்டான் என்பது நித்யாவுக்கு மட்டுமே தெரியும். ‘ நல்ல காதலனை அல்லது கணவனை இழந்தால் கூட அந்த இடத்தை நிரப்ப , இன்னொருவன் வர முடியும் . ஆனால்  ஒரு நல்ல நண்பனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’  என்று நித்யா  உணர்கிறாள் .

இதுவே ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை .

மீண்டும் ஒரு முறை காதல் அல்லாத ஆண் பெண் நட்பை கையில் எடுத்து இருக்கிறார் சேரன் .

jk 2

திறமை இருந்து வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மூன்று வித்தியாசமான – கிரியேட்டிவ் ஆன — ஆக்கப் பூர்வமான மூன்று தொழில்களை இந்தப் படத்தில் சேரன் சொல்கிறார் . அதற்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம் .

அந்த கிளீன் அண்ட் கிரீன் , பொக்கே, சட்டை ஐடியாக்கள் அருமை . இதன் மூலம் திறமை உள்ளவர்கள்  சும்மா இருக்கத் தேவை இல்லை என்பதையும் சொல்கிறார் சேரன் .

அந்த விபத்துக் காட்சியை , மனம்  பதைக்கும்படி  எடுத்த விதம் அபாரம் .

சர்வானந்த் , நித்யா இருவரும் கேரக்டரை நன்றாக உள்வாங்கி ஆழமாக  நடித்து இருக்கிறார்கள் . கடைசி காட்சிகளில் இருவரும்  கனக்க வைக்கிறார்கள்.

காமெடி நடிகரான சந்தானம்,  காமெடி கொஞ்சம் கேரக்டர் கொஞ்சம் என்று கலந்து அடிக்க,  மனோபாலாவை  துளி கூட காமெடியே இல்லாத நெகிழ்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இருப்பது சிறப்பு.

சித்தார்த்தின் ஒளிப்பதிவும் ராஜீவன் — செல்வகுமாரின் கலை இயக்கமும் படம் முழுக்க கட்டிப் பிடித்து கானம் பாடிக் காதலிக்கிறது . கிளீன் அண்ட் கிரீன் காட்சிகள் மூலம் அதை வெகுஜன ரசிகரும் உணர முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது (ஆனால் பாடல்களும் பின்னணி ஜஸ்ட் ஓகே ரகம்தான் )

மிக சிறப்பான கதை . ஆனால் திரைக்கதையில் நிகழும்  உணர்வு பூர்வமான சம்பவங்களில் இன்னும் அழுத்தம் தேவைப்படுகிறது. 

பறவைகள் மட்டும் தனது மரணத்தை உணரும்போது தனிமையில் அமைதியாக அதை எதிர்கொள்ளும் என்ற விஷயத்தை வைத்து உணர்வுகளை புரிய வைத்த விதம் அருமை .

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை  … உணர்வின் வேட்கை ;  கமர்ஷியல் எனும் கத்தியால் காவு வாங்கப்பட்ட கவிதை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →