ஜோக்கர் @ விமர்சனம்

joker 5

குரு சோம சுந்தரம், மு.ராமசாமி , எழுத்தாளர் பவா  செல்லத்துரை ,  ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் 

குக்கூ புகழ் ராஜு முருகன்  இயக்கி இருக்கும் படம் ஜோக்கர்.
இந்த  ஜோக்கர் சிரிக்க வைக்கிறானா? சிந்திக்க வைக்கிறானா? பார்க்கலாம் .
நம் நாட்டில் மக்களுக்காக அரசு போடும் திட்டங்களில் அரசியல்வாதிகளும் , அதிகாரிகளும் சுரண்டியது போக, கால் பங்கு பலனாவது  மக்களுக்கு கிடைக்கிறதா என்பதே சந்தேகம்தான் . 
முன்னேறிய பகுதிகளில் இந்த சுரண்டல் என்பது மக்களில் சிலருக்கு கொசுக்கடி போல தெரிகிறது  
ஆனால் பின்தங்கிய பகுதிகளில் அந்த சுரண்டல் மக்களில் பலருக்கு கொடிய  பாம்பின் விஷக் கடியாக மாறி அவர்கள் வாழ்வையே காவு  வாங்கி  விடுகிறது . 
அப்படி ஒரு,  மனம் நெகிழ்த்தும் ஏழ்மை மனிதர்களின் ரத்தக் கண்ணீராக வந்துள்ள படம்  ஜோக்கர் . 
தருமபுரி  பகுதியில் வாழும் ஏழை மக்களின் வாழ்வில் பொருளாதாரம் படுத்தும் பாடும் அதன் பொருட்டு அவர்களை அரசியலும் அரசு இயந்திரமும் படுத்தும் பாடுமே இந்தப் படம் 
joker 4
நூறு ரூபாயும் பிரியாணி பொட்டலமும் வாங்கிக் கொண்டு  அரசியல் கூட்டங்களுக்கு வருவது முதல் எல்லா வகையிலும்  ஏழ்மையை விரட்டப் போராடும்,
 பாட்டாளி மக்களின் பிரதிநிதிகள் மன்னர்  மன்னன் ( குரு சோமசுந்தரம்) மற்றும் மல்லிகா (ரம்யா பாண்டியன்) ஆகியோர் . 
மல்லிகா மீது மன்னர் மன்னனுக்கு காதல் .  ஒரு நிலையில் அவளுக்கும் அவனை பிடிக்க , அவன் வீடு எப்படி இருக்கிறது என்று பார்க்க வருகிறாள். 
பிறந்தது முதல் ஒழுங்கான கழிப்பறை வசதி இல்லாமல் பொது வெளியில் மலம் கழிக்கும் ஒரு இளம் பெண்ணின் அவஸ்தையில் நொந்து கிடக்கும் அவள்,  
மன்னர் மன்னனிடம் ” நீ  வீட்டில் ஒரு கழிப்பறை கட்டினால் திருமணம் செய்து கொள்கிறேன்” என்கிறாள் 
ஆம் . அவளுக்கு  தாலி கட்ட,  மாப்பிள்ளை வீட்டில் கழிப்பறை கட்டி இருந்தாலே போதும் என்னும் அளவுக்கு,  வறிய வாழ்க்கை அவளுடையது . 
Joker Movie Stills
மன்னர் மன்னன் அவளது ஆசைப்படி வீட்டில் கழிப்பறை கட்ட முயல்கிறான் . அப்போது  நாடு  முழுதும் கழிப்பறை கட்ட திட்டமிடும் மத்திய அரசு,
 தமிழ் நாட்டில் அதற்கான முன் மாதிரி கிராமமாக இவர்களது ஊரை தேர்ந்தெடுக்கிறது . 
எல்லோருக்கும்  கழிப்பறை கட்ட  அரசு பணம் தர, அதில் அரசியலாதிகள் அதிகாரிகள் , காண்ட்ராக்டர்கள் கொள்ளை அடித்து போக மிச்சம் உள்ள காசுக்கு  கழிவறை  பீங்கானை  மட்டும் கொடுக்கிறது . 
மன்னர் மன்னனால் அதை தரையில்  பதிக்க மட்டுமே முடிகிறது . சுவர் வைக்க முடியவில்லை . 
மன்னர் மன்னனுக்கும் மல்லிகாவுக்கும் திருமணமும் ஆகிறது . மல்லிகா கர்ப்பிணி ஆகிறாள். 
இந்த நிலையில் எல்லோருக்கும் கழிவறை திட்ட  துவக்க விழாவுக்கு  அவர்கள் ஊருக்கு ஜனாதிபதி வர  திட்டமிட ,
அவரை வரவேற்று கூட்டம் நடத்த வசதியான இடம்  மன்னர்  மன்னன்  வீட்டின்  அருகில்தான் இருக்கிறது என்பதால் , ஜனாதிபதி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வசதியாக ,
கட்சிக்காரர்களே மன்னர் மன்னன் வீட்டு கழிப்பறையை  கட்டித் தர முடிவு செய்கின்றனர் . 
joker 6
சுவர் வைத்துக் கொண்டு இருக்கும்போது வரும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் படையினர்,  மன்னன் மன்னன் வீடு உள்ள பகுதி பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்று கூற ,
கட்டிக் கொண்டு இருக்கும் கழிப்பறை சுவரை பாதியிலேடே விட்டு விட்டுப் போய் விடுகின்றனர். 
இரவு மழை பெய்ய, வயிற்றுப் பிள்ளைக்காரியான மல்லிகா  சிறு நீர் கழிக்க அந்த கட்டி முடிக்கப் படாத கழிவறைக்குள் போக , மழை நீரில்  சுவர் கரைந்து இடிந்து  மல்லிகா மேல் விழுந்து …..
மனைவியை மருத்துவமனை கொண்டு போக மன்னர் மன்னன் முயல , ஜனாதிபதி  வந்து போகும் வரை அதற்கு அனுமதிக்க  மறுக்கும் காவல்துறை,
 மன்னர் மன்னனையும் உயிருக்குப் போராடும் மல்லிகாவையும்  அவர்கள் வீட்டிலேயே சிறை வைக்கிறது . 
எல்லாம் முடிந்த பிறகு மருத்துவ மனைக்கு மல்லிகாவை கொண்டு போக….
ஒரு நிலையில் தன்னை இந்தியாவின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொள்ளும் மன்னர் மன்னன் மக்கள் பிரச்னைகளுக்காக விதம் விதமாக போராடுகிறான் . 
joker 2
அதன் பிறகு அவனுக்கும்  மல்லிகாவுக்கும் , நியாயத்துக்கும் நீதிக்கும் , நேர்மைக்கும் , இந்த நாட்டில்   வாழும் ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்கும் என்ன ஆனது என்பதே இந்த ஜோக்கர் . 
ஒரு படத்தில் சில காட்சிகள் மட்டும் நன்றாக இருந்தால் அதை சொல்லி பாராட்டலாம் . எல்லா காட்சிகளும் நன்றாக இருந்தால் எப்படி பிரித்துப் பாரட்ட?
எடுத்துக் கொண்ட கதை , அதற்கான திரைக்கதை , இரண்டுக்குமான வித்தியாசமான பார்வை,  இவை மூன்றுக்குமான களம் ,
அந்தக் களத்தை  மிக ஆழமாக ஆராய்ந்து யதார்த்தத்தை  திரையில் கொண்டு வந்த விதம் , நெருப்பும் தெறிப்புமான வசனங்கள் , ஒரு ஷாட்டை எந்த நீளத்தில்  வைக்க வேண்டும் என்பதில்  மிக தெளிவான ஐடியா, 
நடிக நடிகையரை  பயன்படுத்திய விதம் , காட்சி அமைப்பு என்று எல்லா விதத்திலும் மிக சிறப்பான படைப்ப்பாளியாக ஜொலிக்கிறார் இயக்குனர் ராஜு முருகன் .  வாழ்த்துகள்  பாராட்டுகள்  !
தருமபுரி பகுதியில் உள்ள  குடி தண்ணீரின் தூய்மை இன்மை மற்றும் உப்புகள் காரணமாக தருமபுரி பகுதி மக்களின் பற்கள் மஞ்சள் கரையாக இருப்பது ….
joker 7
ஃபுளோரைடு பிரச்னை காரணமாக அவர்களின் பற்கள் தேய்ந்து இருப்பதை படத்தில் கொண்டு வந்து இருப்பது வரை படமெங்கும் அநியாயத்துக்கு  பர்ஃபக்ஷன். 
எழுத்தாளர் பவா செல்லதுரை நடித்து இருக்கும் கேரக்டரின் இறந்து  போன மனைவி கேரக்டரின் போட்டோவுக்கு  ,
பவா செல்லத்துரையின்  நிஜ மனைவி  சைலஜாவின் போட்டோவையே,   பொட்டு வைத்துப் பயன்படுத்தும் அளவுக்கு அராஜக  பர்ஃபக்ஷன்.. 
கிரேட்  ராஜு முருகன் … கிரேட் !
படத்தின் மிகப் பெரும் பலம்  ஒளிப்பதிவு . சும்மா சொல்லக் கூடாது . வாழ்ந்து இருக்கிறார் செழியன் . அப்படி ஒரு காவிய ஒளிப்பதிவு . காட்சிகளை இயல்பாகவும் ஒரு வித கவிதைத் தன்மையோடும் படமாக்கி  இருக்கிறார் 
 
சான் ரோல்டனின் பின்னணி இசை  ஜொலிக்கிறது.
 Joker 1
பாடல்கள் இனிமை என்றால் பாடல் வரிகள் மூலம் தங்கள் பங்குக்கு படத்தை  தூக்கி நிறுத்துகிறார்கள் , பாடலாசிரியர்களான  யுகபாரதியும் ரமேஷ் வைத்யாவும்
(நீ  ரெட்டப் புள்ள பெத்துகிட்டா பிரசவ செலவு மிச்சம் ” என்ற வரி , ஏழ்மையின் வலிமையை– வலியை– சொல்கிறது ) 
யதார்த்தமான களத்தில் யதார்த்தமில்லாதது போல தோன்றுகிற — ஆனால் மிக  யதார்த்தமான முறையில்  ராஜு முருகனால்  படைக்கப்பட்டு இருக்கும் மன்னர் மன்னன் கதாபாத்திரத்தை, 
அப்படி அழகாக  உள்வாங்கி அதன் தன்மை  உணர்ந்து , தனது  தனித் தன்மையையும் சேர்த்து ஒரு ரிதம் செட் பண்ணி , கடைசியரை அந்த ரிதம் மாறாமல் மிக அழகாக  நடித்துள்ளார் குரு சோம சுந்தரம். 
குரல் நடிப்பு மேனரிசம் எல்லாம் மிக அருமை . 
மல்லிகாவாக வரும் ரம்யா பாண்டியன் , மிலிட்டரி என்ற பெயரில் மன்னர் மன்னனின் பாசமுள்ள உறவாக  வரும்  பவா  செல்லத்துரை,
joker 8
மன்னர் மன்னனுக்கு போராட்ட உணர்வை அறிமுகப் படுத்தும்  பொன்னெழிலாக வரும்  மு.ராமசாமி,   
டாஸ்மாக்கால் இளம் விதவையாகி மன்னன் மன்னனின் போராட்டக் குழுவில் தன்னை  இணைத்துக் கொள்ளும் இசையாக வரும் காயத்ரி கிருஷ்ணா  என்று…..
 அனைவரும் கதாபாத்திரங்களுக்காக தங்களை  செதுக்கிக் கொண்டு  வாழ்ந்து இருக்கிறார்கள் . பாராட்டுகள் . 
சக  கதாபாத்திரங்களிடம்  மன்னர்  மன்னன் வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் நமது அரசுகளிடம் , ஆள்வோரிடம் , அரசு  இயந்திரத்திடம், இந்த  சிஸ்டத்திடம்  ராஜு முருகன் என்ற படைப்பாளி  முன் வைக்கும் கேள்விகளே !
இந்த புரிதலோடு  படம் பார்த்தால் இந்த படத்தின் வீரியம் விஸ்வரூபமாய் விளங்கும் . 
கிளைமாக்சில்  பொன்னெழில் பேசும் விசயங்களில் இருக்கிறது இந்தப் படத்தின் ஜீவன் . “யாருக்காகக்  போராடுகிறோமோ ,அவர்களே  நம்மை கேவலமாகப் பார்க்கிறார்கள் என்ற  வசனம்,
ராஜு முருகன்
ராஜு முருகன்

வலி மிகுந்த உண்மை .  சமூக அக்கறை உள்ள ஒவ்வொரு இளைஞனும் உணர்ந்த — உணரும் வலி அது. 

மிக அவலமான சூழலிலும் தன்னம்பிக்கையோடு படத்தை முடித்த விதம் போற்றுதலுக்குரியது . 
ஜோக்கர் …. சூப்பர்  ஹீரோ . 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
———————————————–
ராஜு முருகன், செழியன், குரு சோமசுந்தரம், யுக பாரதி, சான் ரோல்டன், பவா  செல்லத்துரை, மு.ராமசாமி, ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *