ஜம்புலிங்கம் 3D @ விமர்சனம்

Jumbo 3D Movie Stills

MSG மூவிஸ் சார்பில் ஹரி   நாராயணன்  மற்றும் ஷங்கர் பிரதர்ஸ் தயாரிக்க ,  

கோகுல்நாத், அஞ்சனா  கீர்த்தி , ஈரோடு மகேஷ், ஜீவா, சுகன்யா , பேபி ஹம்சி ஆகியோர் நடிக்க , 

ஹரி -ஹரீஷ் இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜம்புலிங்கம் 3D. 
 
தியேட்டர் வேட்டையில் மற்ற  படத்தினருக்கு  ஈடு கொடுக்க முடியாத காரணத்தால்  மூச்சுத் திணறிப் போராடிக்  கொண்டு இருக்கும் இந்தப் படம்  எப்படி  இருக்கிறது ? பார்க்கலாம் 
ஜப்பானில்  தொயோமா என்ற  ஊரைச் சேர்ந்த  சிறுமி ஹம்சி ( ஹம்சி) . ஹம்சியின்  அம்மா  தமிழ்ப் பெண் (சுகன்யா) அப்பா ஜப்பானியர் . கடத்தல் பேர்வழிகளால் ஹம்சி பணத்துக்காகக் கடததப்படுகிறாள் .
ஹம்சியை  அவளது பெற்றோர் தேடுகின்றனர் . 
தமிழகத்தில்  மலை கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளைஞன் ஜம்போ  என்கிற  ஜம்புலிங்கம் (கோகுல்நாத்) . 
jambu 6
வாய் பேச முடியாத அம்மா ; சில  மலைவாழ்  நண்பர்கள் என்று வாழும் ஜம்புலிங்கம்  அங்கு வரும் மேஜிக் நிபுணர் ( யோக் ஜேபீ) ஒருவரின் மேஜிக்  திறமையால் கவரப்பட்டு அவரிடம் ,
மேஜிக் கற்றுக் கொள்ள  விரும்புகிறான். அவரும் சேர்த்துக் கொள்கிறார் 
அந்த சமயத்தில் மேஜிக் நிபுணர் ஜப்பானுக்கு மேஜிக்  ஷோ நடத்துவதற்கு வர,  அவரது பெண் உதவியாளருடன் (அஞ்சனா கீர்த்தி )  ஜம்புலிங்கமும் வருகிறான் . 
தொயோமாவில்  மேஜிக் நடக்க இருந்த சமயத்தில்  ,  மேஜிக் நிபுணருக்கு உடல்நிலை  சரி இல்லாமல் போக, ஜம்புலிங்கம் களம் இறங்கி செய்யும் மேஜிக் ஷோவுக்கு  நல்ல பாராட்டு .  
அங்கிருந்து  டோக்கியோவுக்கு வரும் வழியில்  ஜம்புலிங்கமும் , மேஜிக் நிபுணரின் உதவியாளப்  பெண்ணும் நள்ளிரவில் பஸ்ஸில் இருந்து  இறங்க , அவர்களை  விட்டு விட்டு பஸ்  கிளம்பிவிடுகிறது . 
Jumbo 3D Movie Stills
செல்போன் உட்பட  எதுவும் கையில்  இல்லாத நிலையில்,   மலைப்பாங்கான பகுதியில்,  மொழியும் புரியாத நிலையில்,  டோக்கியோவுக்கு  வழி கேட்டு இருவரும் தவிக்கிறார்கள் .
இதற்கிடையில் ஹம்சியைக் கடத்தியவர்கள்  பணம் கேட்க , அந்த  தொகையை  எடுத்துக்  கொண்டு  செல்லும் ஹம்சியின்  அப்பா , கடத்தல்கார்கள் சொன்னபடி சொன்ன இடத்தில் பணப் பெட்டியை  வைக்க,  
கடத்தல் விஷயமே  தெரியாத  ஜம்புலிங்கம் , குறுக்கே  விழூந்து  நல்ல பிள்ளையாக பணப் பெட்டியை எடுத்து  ஹம்சியின் அப்பா கையில் கொடுக்கிறான். 
தமிழ் தெரியாத  ஹம்சியின் அப்பாவால் ஜப்பானிய மொழி தெரியாத  ஜல்ம்புலிங்கத்துக்கு விசயத்தை  விளக்க  முடியாத நிலையில் , ஹம்சியை அவரால்  மீட்க   முடியாமல் போகிறது . 
மீண்டும் மீண்டும் இப்படியே  நடக்க , ஜம்புலிங்கத்தைப் பார்த்தாலே  மிரண்டு ஓடுகிறார்  ஹம்சியின் அப்பா . 
இந்த நிலையில்  ஹம்சி  அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை ஜம்புலிங்கம் அகஸ்மாத்தாகக் கண்டு பிடிக்கிறான் .மீட்கிறான் .  ஆனால்  ஹம்சியின் அப்பாவிடம் அவளை ஒப்படைக்க முடியவில்லை 
jambu 9
இன்னொரு பக்கம்   ஜம்புலிங்கம் மேல் கோபம் கொள்கிறார்  மேஜிக் நிபுணர் .  மற்றொரு பக்கம் சொந்த  ஊரில்  ஜம்புலிங்கத்தின் அம்மாவின் உடல்நிலை சீரியசாகிறது .. 
 
ஹம்சியை அவளது பெற்றோருடன் ஜம்புலிங்கம் ஒப்படைத்தானா ? ஜம்புலிங்கம்- மேஜிக் நிபுணர் கோபத்தின் விளைவு என்ன ? ஜம்புலிங்கத்தின்  அம்மாவுக்கு  என்ன ஆச்சு ?
இறுதியில்  ஜம்போ என்கிற  ஜம்புலிங்கத்தின்  நிலை  என்ன என்பதே இந்தப் படம் .  
அம்புலி  என்ற  அசத்தலான  3D படத்தைக்  கொடுத்து  விட்டு , அடுத்து  ஆ  என்ற  திகில், பேய் படத்தின் மூலம் மிரட்டிய  இயக்குனர்கள் ஹரி – ஹரீஷ்   இருவரும், \
 இந்தப் படத்தில் மீண்டும்  3D யைக் கையில் எடுத்து இருக்கிறார்கள் . ஆனால் இங்கே இவர்கள் நோக்கம் பயமுறுத்துவது அல்ல . குழந்தைகளை  குதூகலிக்க  வைப்பது !
யெஸ்! குழந்தைகளை  முதன்மை ரசிகர்களாகவும் மற்றவர்களை  துணை ரசிகர்களாகவும் குறிவைத்து  எடுக்கப்பட்ட  படம் இது  
jambu 7
அதற்கு உதவியாக  பொருத்தமான பல விசயங்களைக் கொடுத்து இருக்கிறது ஜம்புலிங்கமாக நடித்து இருக்கும் கோகுல்நாத்தின் பங்களிப்பு.  
குறிப்பாக  அவரது மைம் கலை  குழந்தைகளை வியக்கவும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும் . 
அதற்கு ஏற்றவாறு  , கிராமத்தில் யோக  ஜேபி மேஜிக் செய்யும் காட்சியைப்  படமாக்கி, குழந்தைகளைத் தயார் செய்து வைக்கிறார்கள் இயக்குனர்கள் . 
படத்தில் வரும் 3D எஃபெக்ட் காட்சிகள் கூட குழந்தைகளைத் திடுக்கிட வைக்காமல் ரசிக்கும்படி அமைத்து இருக்கிறார்கள் .
கன்னத்தை தொடுவது போல வரும் சுகன்யாவின் பரதநாட்டிய  முத்திரை , மின்மினிப் பூச்சிகள் , நட்சத்திரங்கள் இறைத்த வானம்…
இப்படி பல சுவையான 3D எஃபெக்ட் காட்சிகளை குழந்தைகள் கொண்டாடுவார்கள் . (சபாஷ் ஒளிப்பதிவாளர்  சதீஷ் !)
jam bu 6
இது தவிர படததில் வரும் ஒற்றை சக்கர சைக்கிள் , குட்டி ஸ்கூட்டி, வண்ணக் குடைகள், பேசும் பொம்மைகள் என்று குழந்தைகளைக் கவரும் பல  விஷயங்கள் படத்தில் இருக்கின்றன .
படத்தின் 95 சதவீதம் ஜப்பானிலேயே எடுக்கப்பட்டு  இருப்பதாலும்  படத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானியர்களே  இருப்பதாலும் , மொழிப் பிரச்னையே  இல்லாமல், 
ஒரு  அயல்நாட்டுப் படத்தைப்  பார்ப்பது போலவே  இருப்பது  பெரியவர்களைக் கவரும் விஷயம்.  ஓரிரு இடங்களில்  சப் டைட்டில் மற்றும் மொழி மாற்று என்று சகல விதங்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் . 
இசையமைப்பாளர்  ஸ்ரீவித்யாவின் இசையில் ‘விசில் போடு…’ பாடல்  செம் டப்பாங் குத்து , ‘சின்னச் சின்னதாய்.. ‘ பாடல்  கிளாசிக் விருந்து . 
‘நானே நானா … ‘ ஆகா ! மீண்டும் மீண்டும் முணுமுணுக்கத் தோன்றும் படு சுகமான மெலடி .  இந்தப் பாடலில் ஹரீஷ்  ராகவேந்தரின் வரிகள் கண்ணியக் கவிதை . 
Jumbo 3D Movie Stills
வெங்கட் பிரபு சங்கரின் பின்னணி இசை  குழந்தைகளின் இடத்தில் நின்று படத்துக்கு சுறுசுறுப்புக் கூட்டுகிறது . ஜிகு ஜிகு ஜம்போ தீம் மியூசிக் குழந்தைகளைக் கவரும் . 
சில காட்சிகளில் முப்பரிமாணத்தில் பின்னணிக்கும் உருவத் தோற்றத்துக்கும் இடையே உள்ள அளவு விகிதாச்சார வேறுபாடு காரணமாக,   உருவங்கள் ரொம்பவும் சிறிதாகத் தோன்றுவது போல இருந்தாலும், 
 பொதுவில் ஒளிப்பதிவு சிறப்பு . அதுவும் மிகக் குறைந்த வசதிகளோடு ஒரு 3D  படம் கொடுத்து இருக்கும் ஒளிப்பதிவாளர் ஜி. சதீஷ் பாராட்டுக்குரியவர் . 
இயக்குனர்களில் ஒருவரான ஹரியின் படத் தொகுப்பு , படத்தை அலுப்பு ஏற்படாமல் வேகமாகக் கொண்டு போனாலும்,
 சில இடங்களில் காட்சிகளில் போதுமான டீட்டெயில் குறைகிறது . அம்மா  எபிசொட் கொஞ்சம் சுரத்துக் குறைந்ததற்கு இதுவே காரணம் . 
 
jambu 2
முன்னரே சொன்னது போல குழந்தைகளைக் கவரும் பல பொருட்களை படத்தில் கொண்டு வந்து சேர்த்த வகையில் கவனம் கவர்கிறார்   கலை இயக்குனர் ரெமியன் .
 
விழுந்து புரண்டு  நடித்தார் என்று  சொல்வோம் இல்லையா ? நிஜமாகவே  ஏராளமான முறை விழுந்து புரண்டு  கஷ்டப்பட்டு , தன்னை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்ற வெறியில் நடித்து இருக்கிறார் கோகுல்நாத் . 
 
பார்க்கும்போது காமெடியாகத் தெரியும் பல காட்சிகள் உண்மையில் ரொம்ப ரிஸ்க் ஆனவை . சபாஷ் கோகுல்நாத் . 
சுமோ வீரருடன் இவர் சண்டை போடுவது உள்ளிட்ட பல காட்சிகள் குழ்னதைகளை  கொண்டாட வைக்கும் 
 
இவரது மைம் கலை உத்திகள் , படத்துக்கு ஒரு புதிய  வண்ணம் கொடுத்து இருப்பதை ஒரு முறை கூறுவதோடு நிறுத்திக் கொள்ள முடியாது . கோகுல்நாத்தின் பெயர் சொல்லும் படமாக இது இருக்கும் 
jambu 1
கவர்ச்சிப் பதுமையாக (பெரியவர்களுக்கு மட்டும் புரியும் அளவுக்கு ) வரும்  அஞ்சனா கீர்த்தி  குறை வைக்கவில்லை .
குரல் அவருக்கு பெரிய  பிளஸ் பாயின்ட் . தவிர  பொம்மை போல நடிக்கும் ஒரு காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்  அஞ்சனா . 
ஈரோடு மகேஷின் நகைச்சுவை வாய் விட்டு சிரிக்க வைக்கிறது . ரோபோ சிட்டியை  ஞாபகப்படுத்தும் ஜீவாவின் காட்சியும் ரகளை 
ரஜினி ரசிகர்களாக உள்ள ஜப்பானியர்கள் பலரை படத்தில் நடிக்க வைத்து ரஜினியின் பஞ்ச வசனங்களையும் பேச வைத்துள்ளனர் . 
இப்படி  ஒரு படத்துக்கு தண்ணீருக்குள்  அந்த  தாயத்து தேடும் காட்சி தேவையா ?
Jumbo 3D Movie Stills
அதே போல மிக இலகுவான அந்த கிளைமாக்ஸ் காரணமாக, ஜஸ்ட் லைக் தட்  முடிகிற உணர்வை தருகிறது  படம்  .
இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு அல்லது நகைச்சுவை அல்லது குழந்தைகளுக்கான  பிரம்மிப்பு என்று   முயன்று இருக்கலாம் . 
அதே நேரம் ஹம்சி உட்பட எல்லோரின் பாராட்டுக்கும் ஜம்புலிங்கம் ஆளாகும் அந்த ஆண்டி கிளைமாக்ஸ் காட்சியில் ,
அன்புதான் உண்மையான மேஜிக் என்று  மறைமுகமாகச  சொல்லும் அந்த டைரக்டோரியல் மெசேஜ் அபாரம !
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கூட,   புதுமையான ஒரு உற்சாக உணர்வைத் தரும் வகையில் வந்திருக்கிறது ஜம்புலிங்கம் 3D 
jamp
மொத்தத்தில் …
ஜம்புலிங்கம்  3D….  குழந்தைகளுக்கான  கொண்டாட்டத் திருவிழா .!
ஆனாலும் ஒரு  வருத்தம் …
குழந்தைகளுக்கான படம் என்பது ஒரு அற்புத விசயம் . நம்ம  ஊரில் அப்படி ஒரு விஷயம் இல்லாமலே  போய்விட்ட நிலையில் அந்த அற்புதத்துக்கு விசயத்துக்கு உயிர் கொடுத்துள்ள படம்  இது . 
 
இந்தக் கோடை விடுமுறையில் தமிழில் ஜங்கிள் புக், கேப்டன் அமெரிக்கா  ஆகிய ஆங்கில  3D படங்கள் ஏகப்பட்ட தியேட்டர் கிடைத்து சக்கைப் போடு போடுகின்றன. 
 
ஆனால் ஜம்புலிங்கம் ஜப்பானில் எடுக்கப்பட்ட ஒரிஜினல் தமிழ்  3D படம் 
இருந்தும்  இந்தப் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது என்று வேதனைப்படுகிறது படக் குழு . இது என்ன நியாயம்? இதை எல்லாம் சரி செய்வது யார் ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →