நானெல்லாம் கிராமத்தில் பிறந்து டூரிங் டாக்கீஸில் படம் பார்த்து வளர்ந்தவன் . எனது ஆரம்ப கால சினிமாக்கள் என்பவை பொதுவில் எம் ஜிஆர் சிவாஜி , கமல் ரஜினி , கொஞ்சம் ஜெய் ஷங்கர் ஜெமினி கணேசன் என்றே போனது . உண்மையில் எனக்கு எங்க கிராமத்தில பாரதி ராஜா அறிமுகம் ஆனபோது கூட பாலச்சந்தரை பற்றி வார இதழ்கள்தான் பேசுமே தவிர, எங்க ஊர் டூரிங் டாக்கீஸ்கள் அவ்வளவாக பாலச்சந்தர் பற்றி பேசியது இல்லை.
சென்னை வந்த பிறகுதான் அவரது படங்களை அதிகம் தேடிப பிடித்து பார்க்கத் தொடங்கினேன் . முன்பே நான் ரஜினி கமல் படங்களாக மட்டுமே பார்த்திருந்த நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை மீண்டும் பாலச்சந்தர் படங்களாக பார்த்த போது கிடைத்த பிரம்மிப்பே பிரம்மாண்டமானது .
எத்தனை படங்கள் .. எத்தனை கதைகள் ….எத்தனை கேரக்டர்கள்… எத்தனை காட்சிகள்…. எத்தனை திருப்பங்கள் … எத்தனை நடிகர்கள் .. எத்தனை நடிகைகள் ….
ஒரு பெரிய கடல் சட்டென்று வற்றிப் போன மாதிரி இருக்கிறது .
இயக்குனர் சிகரமே ! மறக்க வேண்டிய அளவுக்கு நீங்களும் சாதரணமானவர் இல்லை . மறந்து விடும் அளவுக்கு நாங்களும் மோசமானவர்கள் இல்லை.
இதயத்தின் அடித்தளத்தில் இருந்து ஓர் இளகிய அஞ்சலி !
—-சு.செந்தில்குமரன்