தமிழ்க் கொடி பிலிம்ஸ் சார்பில் வெப்படை ஜி செல்வராஜ் தயாரிக்க, சந்துரு மற்றும் நித்யா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் ஜி.ஏ.சோமசுந்தரா எழுதி இயக்கி இருக்கும் படம் காதல் காலம்
ஜெயானந்தன் என்பவர் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட அவரது சிஷ்யர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார். காதல் காலம் படத்தை இயக்கிய சோமசுந்தராவும் பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்தான். .
கமல்ஹாசன் இந்தப் படக் குழுவினரை தமது அலுவலகத்துக்கே வரவழைத்து படத்தின் டிரைலரை வெளியிட்டிருந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழா நடந்தது
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாண்டியராஜன் , “இந்த விழா பல நாட்கள் தள்ளிப்போய் இன்று நடைபெறுகிறது… தாமதமும் நல்லதுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நானே சாட்சி.
நான் இயக்குனரிடம் (பாக்யராஜிடம்) உதவியாளராகப் பணியாற்றிய போது அவரது எல்லாப் படங்களையும் பார்க்க எம் ஜி ஆர் வந்துவிடுவார்… அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள மிகவும் ஆசைப்பட்டேன் … கடைசியில் ஒரு வழியாக எடுத்து விட்டேன்….
எனக்கு இந்தப் பக்கம் எம் ஜி ஆர் அந்தப் பக்கம் டைரக்டர்.! எல்லோரும் பார்த்துப் பார்த்துப் பொறாமைப்பட்ட அந்தப் புகைப்படத்தை கடைசியில் யாரோ திருடி விட்டாரகள். அதன் பிறகு , நான் இயக்கிய கன்னிராசி படவிழாவில் கலந்து கொண்டதோடு எனது திருமணத்துக்கும் எம்ஜிஆர் வந்திருந்தார். எனது கையப்பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்த வீடியோ எல்லாம் இருக்கு…
போட்டோவைத்தான் மிஸ் பண்ணினேன் ஆனால் வீடியோவே கிடைத்து.. அதுபோல் இந்தப் படத்தை இயக்கிய சோமசுந்தராவும் மிகவும் தாமதமாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்…. மிகப் பெரிய வெற்றி பெறுவார்…” என்று பேசினார்.
ஆடியோவை வெளியிட்டுப் பேசிய கே.பாக்யராஜ், “ பாரதி சோமு என்று அழைக்கப்படும் சோமசுந்தரா மிகக் கடினமான உழைப்பாளி. எழுத்தாளராக இருந்து பத்திரிக்கையாளராக மாறி இன்று இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பாக்யராஜ் படத்தை பார்த்தது மாதிரியே இருக்கிறது என்று சொன்னார்களாம். அது தான் குருவுக்கும் பெருமை.
பல வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் எனது படப்பிடிப்பில் எனது அனுமதி இல்லாமலேயே முதல் நாள் கிளாப் போர்டைத் தூக்கிட்டு வந்த பாண்டியராஜனை நான் திட்டி ஓரமாக நிற்க வைத்தேன் … அன்று முழுவதும் ஓரமாகவே நின்று கொண்டிருந்தவரைப பின்பு உதவியாளராகச் சேர்த்துக் கொண்டேன். இன்று நிகழ்ச்சிக்கு அவர் வரும்வரை நான் காத்திருக்க வேண்டியதாகிப் போய்விட்டது.
எதற்குச் சொல்கிறேன் என்றால் எனது உதவியாளர்கள் வளர்வதில் எனக்குப் பெருமைதான். எனது காம்பவுண்டுக்குள் வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் இயக்குநராகி விட்டார்கள் …
வயல்வெளிகள் சூழ்ந்த் கோபிச் செட்டிப் பாளையத்தில் நான்தான் முதன் முதலில் கேமராவை வைத்தேன்…. அதே இடத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள்… பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது…
அதேமாதிரி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோபிச் செட்டிப்பாளையம் அருகே உள்ள குக்கிராமமான சிறுவலூரில் இருந்து வந்து, தான் சம்பாதித்த பணத்தை தனது நண்பரான சோமசுந்தராவுக்காக முதலீடு செய்திருக்கிறார்… நான் டூரிங் கொட்டகையில் படம் பார்த்த ஊரிலிருந்து ஒரு தயாரிப்பாளர் வந்திருப்பதில் மகிழ்ச்சி…” என்றார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் கூறியபோது, “ஒருவன் என்னதான் சொத்து பத்து வைத்திருந்தாலும், கல்யாணத்திற்குப் பொண்ணு கேட்டுப் போனால் , பையன் என்ன பண்ணுகிறான் என்று கேட்பார்கள். அந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதைதான் இந்தப் படம். காதல், சென்டிமென்ட் , நல்ல இசை, பாடல்கள் என்று விறுவிறுப்பாக படம் வளர்ந்திருக்கிறது…” என்றார்.
காதலுடன் அட்டகாசமான கருத்தையும் இன்றைய இன்றைய இளைஞர்களுக்குஸ் சொல்லும் காதல் காலம் நிச்சயமாக ஒட்டுமொத்த திரை ரசிகர்களுக்கும் கொண்டாட்ட காலமாக இருக்கும் என்கிறது படக்குழு.
காலாகாலத்துல ரிலீஸ் பண்ணுங்க .