படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிந்திக்க வைக்கும் ஒரு டிரைலரையும் மூன்று பாடல்களையும் திரையிட்டார்கள். அநியாயமாக மரம் வெட்டி காட்டை அழிக்கும் வரும் சமூக விரோதிகளையும் அரசு இயந்திரத்தையும் அந்த மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற ரீதியில் கதை போகும் என்பது டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது .
அதே நேரம் அழகான இளம் நாயகி சம்ஸ்க்ருதியின் காதல், இசையமைப்பாளர் கே மற்றும் கவிஞர் யுகபாரதி இணைவில் உருவான மண்வாசனைப் பாடல்கள் , பட்டையைக் கிளப்பும் சண்டைக் காட்சிகள், தாவிப் பாய்ந்து பாய்ந்து பறந்து செல்லும் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு, காசி விஸ்வநாதனின் நறுக்குத் தெறிக்கும் படத் தொகுப்பு போன்றவை முன்னோட்டத்திலேயே கவனம் கவர்ந்து, படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றன .
” நான் இதுவரை நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் இதுதான் ” என்று ஆரம்பித்த விதார்த் ” தயாரிப்பாளர் நந்து அவர்களை முதன் முதலில் சந்தித்த போது ஒரு தமிழனுக்கே உரிய மாண்போடு அவர் எனக்கு செய்த விருந்தோம்பல் அற்புதமானது . படத்தின் பட்ஜெட் ஒரு நிலையில் திட்டமிட்டதற்கு மேலாக போனபோது கூட, ‘இந்தப் படம் நினத்தது போல வரவேண்டும்’ என்று முடிவு செய்து அவர் பெரும் செலவு செய்தார் .
ஒரு சண்டைக் காட்சிக்கு ஒரு புதிய கருவி வேண்டும் என்று ஸ்டன்ட் மாஸ்டர் கூறியபோது , அது மும்பையில் மட்டுமே இருக்கிறது என்று அறிந்தும் அதை கொண்டு வர செய்து , ஒரு நாள் பயன்படுத்தியதற்கு போக்குவரத்து நாட்களையும் சேர்த்து மூன்று நாள் வாடகை கொடுத்து…அதற்காக ஒரு நாள் ஷூட்டிங்கையெ நிறுத்தி… கருவி வந்தபிறகு ஸ்டன்ட் மாஸ்டர் ஆசைப்படி காட்சியை எடுக்க வைத்து…. அடடா! இந்த மாதிரி தயாரிப்பாளர் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் ” என்று நந்துவை பாராட்டினார் .
ஒரு அரசியல்வாதிக்கே உரிய கம்பீரத்தோடு அழுத்தமான குரலில் தூய தமிழில் பிசிறின்றி ஒருமுகப்படுத்தும்படியாக கம்பீர உரையாற்றிய நந்து ” படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது வழக்கமாக காதல், கல்யாணம் என்று படம் எடுக்க நான் விரும்பவில்லை. சமுதாயத்துக்கு நல்ல விஷயம் சொல்லும் படங்களை வணிகரீதியாகவும் வெற்றி பெறும்படி எடுக்க வேண்டும் என்பதே என் லட்சியம் . அதற்கு ஏற்ப காடுகளின் அழிவு பற்றி ஸ்டாலின் ராமலிங்கம் சொன்ன கதை சிந்திக்க வைத்தது . படத்தின் முடிவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக அரசுக்கே ஆலோசனை சொல்லும்படி அவர் சொல்லி இருக்கும் விஷயம் என்னை மிகவும் கவரவே படமாக தயாரிக்க முடிவு செய்தேன் .