இன்க்ரிடிபிள் புரடக்ஷன், தினா ஸ்டுடியோஸ் , லீப் ஹார்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் சார்பாக மணி தினகரன், சிவ நேசன், பார்கவி தயாரிப்பில் பரத், அன் ஷீத்தல், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கி இருக்கும் படம் .
நகரில் மூன்று சிற்றிளம் மற்றும் பேரிளம் பெண்கள் தத்தம் அப்பார்ட்மென்ட் மொட்டை மாடியில் இருந்து தள்ளி விடப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.
விசாரிக்கும் பொறுப்பு காவல் துறை அதிகாரி காளிதாஸ் ( பரத்) வசம் வருகிறது . அவரது மனைவி வித்யா( ஆன் ஷீத்தல்) கணவன் எப்போதும் வேலை வேலை என்று அலைவதால் கோபப் பட்டு ஒரு அவர்களுக்குள் சண்டை மிகுகிறது .
காளிதாசுடன் சிறப்பு உயர் அதிகாரி ஒருவரும் (சுரேஷ் மேனன்) விசாரணையில் இறங்குகிறார் .
விசாரணை நூல் பிடித்துப் போகும் இடமெல்லாம் ஒரு இடத்தில் நின்று விடுகிறது .
வித்யாவுக்கு இளைஞன் ஒருவனோடு(ஆதவ் கண்ணதாசன்) நெருங்கிய நட்பு என்று….
ஒரு நிலையில் விசாரணை பயணத்தில் வித்யாவும் இடற அப்புறம் என்ன என்பதே இந்த காளிதாஸ் .
மிக சிறப்பான அழகான நேர்த்தியான படமாக்கலில் கவனம் கவர்கிறார் இயக்குனர் ஸ்ரீ செந்தில் . அருமையான டீடெயிலிங். சபாஷ். திரைக்கதையில் பல வித்தியாசமான சூழல்களை கொடுத்து பாராட்டுப் பெறுகிறார் . ஜெயவேல் நடித்து இருக்கும் ஹெட் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் அருமை.
காளிதாசின் மனைவி கதாபாத்திரமும் புதிய இளைஞன் கதாபாத்திரம் பேசிக் கொள்ளும் வசனங்கள் ரசனை ரசனை ரசனை .
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு ஃபிரேமிங் எல்லாம் சிறப்பாகவும் இயக்குனருக்குப் பேருதவியாகவும் இருக்கிறது
விஷால் சந்திர சேகரின் பின்னணி இசை நேர்த்தி . புவன் சீனிவாசனின் படத் தொகுப்பும் நன்று .
காளிதாஸ் ஆக சிறப்பாக நடித்திருக்கிறார் பரத். அவரும் சுரேஷ் மேனனும் பாத்திரங்களில் அப்படி பொருந்தி இருக்கிறார்கள் , நாயகி ஷீத்தல் அழகு நடிப்பு இரண்டிலும் ஜஸ்ட் லைக் தட் பாஸ் ஆகிறார் .
அட என்று ஆச்சர்யப்படும்படி அசத்தலாக நடித்து இருக்கிறார் ஆதவ் கண்ணதாசன் . சூப்பர் .
சிறப்பாக போய்க் கொண்டிருந்த படத்தை கிளைமாக்ஸ் பகுதியில் வித்தியாசமாக திருப்பம் சொல்கிறேன் என்ற பெயரில் தலை குப்புற கவிழ்த்து இருக்கிறார்கள் .
ஆத்துத் தண்ணீர் பாய்ச்சி ஆழ உழுது அழகான வயல் கட்டி கடைசியில் அவிச்ச நெல்லை நாத்து விட்ட கதையாக ஆகிறது கிளைமாக்ஸ் .
அந்த கிளைமாக்ஸ் ஏரியாவை லைவ் ஆக கொண்டு போய், சிலருக்கு சில படிப்பினைகளை சொல்லி கொலைகள் கதைக்கு சுவாரஸ்யமான முடிவு கொடுத்து,
கடமை உணர்ச்சியுடன் பணி செய்பவர்களின் குடும்பத்துக்கு அந்தப் பணியின் அவசியத்தைப் புரியவைத்து சமூகத்துக்கு சில கேள்விகளை கேட்டு யதார்த்ததோடு கனெக்ட் செய்து இருந்தால் படம் சும்மா பட்டையை கிளப்பி இருக்கும்
ஆனால் அதற்குள் நம்மை அதிர வைத்து விட்ட காரணத்தால் தட்டுத் தடுமாறி கரை ஏறி விடுகிறது படம் .
காளிதாஸ் … மஹாகவி இல்லை என்றாலும் பொற்கிழிக்குப் பதில் வெண்கிழி பெறுகிறான்