பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிக்க, சசிகுமார், பார்வதி அருண், ஜே டி சக்ரவர்த்தி, ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல், ராம்குமார் சிவாஜி நடிப்பில் அறிமுக இயக்குனர் ஹேமந்த் குமார் இயக்கி இருக்கும் படம்.
முன்னொரு காலத்தில் முகவை மாவட்டத்தில் கொடிய வறட்சியில் பஞ்சம் பிழைக்கப் போன ஒரு கூட்டம், ஓரிடத்தில் காட்டு மாடாக ஒரு காரிக் காளை (கருப்பு நிற காளை மாடு) இருப்பதைப் பார்த்து அது வளமான பகுதி என்று உணர்ந்து அங்கேயே தங்க ஆரம்பித்ததோடு அந்தக் காரிக் காளையை தெய்வமாக வணங்க ஆரம்பித்தனர் .
அதன் வழியே அருகருகே இரண்டு கிராமங்கள் உருவாயின . இரண்டு ஊருக்கும் ஒரு கோவில் உருவாக, ஒரு நிலையில் பொதுக் கோவிலாக இருந்த அதை மொத்தமாக பாத்தியதை செய்து கொள்ள ஓர் ஊர் முரண்டு பிடிக்கிறது. பாத்தியதைக்கு ஆசைப்படும் ஊரைச் சேர்ந்த பதினெட்டு காளைகளை மற்ற ஊர் ஆட்கள் பிடித்து விட்டால் ஊரை விட்டுக் கொடுப்பதாக இன்னொரு ஊர் பஞ்சாயத்தில் சம்மதம் தருகிறது
ஆசைப்படும் ஊரின் பதினெட்டு குடும்பங்களைச் சேர்ந்த பதினெட்டு மாடுகளை இந்த ஊரின் பதினெட்டு குடும்பங்களைச் சேர்ந்த வீரர்கள் கூட்டாகக் களம் கண்டு, மாடு பிடித்தால்தான் போட்டி நிறைவுறும் . ஆனால் மாடு பிடிக்க வேண்டிய ஊரின் ஒரு குடும்பம் சார்பில் ஊரில் யாரும் இல்லை .
அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் (ஆடுகளம் நரேன்) சென்னையில் குதிரைப் பந்தயத்தில் ஒரு குதிரை முதலாளியின் (ராம்குமார் சிவாஜி) ஊழியராக, குதிரைகளை அன்போடு பேணிப் பாதுகாப்பவராகவும் , மிருகங்கள் மேல் அன்பு செலுத்துபவராகவும் நகரின் நடக்கும் சுற்றுச் சூழல் சிதைவுகள் மற்றும் ஆரோக்கியக்கேடான செயல்களை எதிர்த்துப் போராடுபவர்கவும் இருக்கிறார் . அவர் மகனும் யதார்த்தம் உணர்ந்த நபருமான குதிரை ரேஸ் ஜாக்கிக்கு ( சசிகுமாருக்கு) அப்பாவைக் காப்பாற்றுவதே பெரிய வேலையாக இருக்கிறது . நண்பன் ஒருவன் தன் மனைவியின் மருத்துவ செலவுக்குப் பணம் வேண்டும் என்று சொல்ல அதற்காக நாயகன் ஒரு ரேசில் தன் குதிரையை இழுத்துப் பிடித்து தடுத்து நண்பனின் குதிரையை ஜெயிக்க வைக்க, கோபம் கொண்ட நாயகனின் குதிரையின் உரிமையாளர் அதை சுட்டுக் கொன்று விடுகிறார் . அதைப் பார்த்து தன் மகனால் ஓர் உயிர் போய்விட்டதே என்று மனம் உடைந்து, அப்பா இறக்கிறார் .
ஊர்க்காரர்கள் வந்து நாயகனை சந்தித்து ஊர்ப் பிரச்னையை சொல்லி அழைத்துச் செல்கின்றனர் . மாடு விடும் எதிர் ஊரில் வாழும் ஒரு குடிகார நபரிடம் ( பாலாஜி சக்திவேல்) இருக்கும் காரிக்களை இதுவரை யாராலும் அடக்க முடியாத ஒன்று . அந்த நபரின் மகள் ( பார்வதி அருண்) அதை உயிரெனப் போற்றி வளர்க்கிறாள். அவளுக்கும் நாயகனுக்கும் அரும்புக் காதல்.
பெரும்பணக்கார நபர் ஒருவன் ( ஜே டி சக்ரவர்த்தி) யாராலும் அடக்க முடியாத காளைகளை வாங்கி அதன் விந்தணுவை அயல் நாட்டு மாடுகளுக்கு தரக் கூட்டல் செய்யப் பெரும் விலைக்கு விற்று விட்டு அந்த மாட்டை கொன்று சமைத்து சாப்பிடும் குணம் உள்ளவன் . அவனும் அந்த காரிக்காளைக்கு குறி வைக்கிறான்
குடிகார நபர் மகளுக்குத் தெரியாமலே மகளின் திருமணச் செலவுக்காக அதை விற்க , அதை வாங்கிய கேரள அடிமாட்டு மலையாளி மூலம் அது அந்தப் பணக்காரனை அடைகிறது .
அப்பா மாட்டை விற்று விட்டதை அறிந்த கதாநாயகி கத்திக் கதறி உடைந்து நொறுங்கி அழ, அவளுக்குள் தன் தந்தையைப் பார்க்கிறான் நாயகன். போராடி அவன் மாட்டை மீட்டுக் கொண்டு வர, விற்கப்பட்டதற்கான அத்தாட்சியுடன் வருகிறான் சைக்கோ பணக்காரன். பேச்சு வார்த்தை நடக்கிறது .
”ஜல்லிக்கட்டுப் போட்டியில் அந்த மாட்டை நீ அடக்கி விட்டால் நான் மாட்டை விட்டு விட்டுப் போய்விடுகிறேன் .பிடிபட்ட மாடு எனக்கு வேண்டாம். அடக்காவிட்டால் கொண்டு போய் விடுவேன்” என்கிறான் சைக்கோ . அதாவது மாட்டை நாயகன் அடக்கி விட்டால் மாடும் பிழைக்கும் . நாயகனின் ஊரும் போட்டியில் ஜெயிக்கும். மாட்டை அடக்க முடியாவிட்டால் மாடும் கொல்லப்படும் . நாயகனின் ஊரும் தோற்கும் .
ஆனால் மாட்டை வளர்த்த நாயகி “தொழுவத்தில்தான் அது என் காளை. வாடி வாசல் போனால் அது சிவன் காளை. அங்கே நான் சொன்னாலும் கேட்காது . குதிரை ஓட்டிக் கொண்டு இருந்த உன்னால் அதை அடக்க முடியாது . ” என்று கதறுகிறாள்.
மாட்டுக்குத் தெரியுமா , நம்மைக் காப்பாற்றத்தான் நம்மை அடக்க வருகிறான் என்று?
நடந்தது என்ன என்பதே இந்த காரி .
முதலில் எழுதி இயக்கி இருக்கும் ஹேமந்த் குமாருக்கு மலையளவு பாராட்டுக்கள் . பசப்பலான – வஞ்சகமான சுயநலமான வேசித்தனமான காரணங்களைக் கூறி ஜல்லிக்கட்டை முடக்க நினைக்கும் PETA அமைப்பின் முகரையில் சட் சடீர், சொத், சொட்டேர் என்று செருப்படிகளைக் கொடுக்கும் படமாக வந்துள்ளது காரி .
கொல்லேறு எனப்படும் காட்டு விலங்காக இருந்த காளைகள் இந்தத் தமிழ் இனத்தின் தோழனாக மாறிய வரலாற்றில் ஆரம்பித்து , காளைகளுக்கும் தமிழனுக்கும் இருக்கும் பாசம், பந்தம் , உயிருறவு…
ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் குழந்தைகள் எல்லோருமே மாடுகளை போற்றி பாதுகாத்து கண்ணெனப் பராமரித்து வளர்க்கும் விதம்…
அந்த மாடுகளை தங்கள் உயிருக்கு இணையாக சில சமயம் அதற்கும் மேலாக மதிக்கும் பாங்கு…
வயது தளர்ந்தாலும் வீரம் தளராத பாட்டிகள் , பெண்களின் ஒழுக்க நெறி, குடும்பப் பாசம் , அந்த பாசத்தைக் கூட அதட்டலோடு காட்டும் உரிமை , தமிழர்களின் காலம் வென்ற இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் அறிவு . இன்னும்… இன்னும் …
இவை மட்டுமின்றி இப்படிப்பட்ட தமிழன் குடிப்பழக்கத்தால் வைரக் கட்டியை உப்புக்கட்டி விலைக்கு விற்கும் அவலத்துக்குப் போய் அடிமாடு வாங்குபவனிடம் எல்லாம் அடிஉதை வாங்கும் அவலம் ..
எல்லாவற்றையும் ஒரே படத்தில் அதுவும் முதல் படத்தில் கொடுத்திருக்கும் இயக்குனர் ஹேமந்த் குமாரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது .
அதுவும் அடக்கப்பட்டால்தான் மாடு பிழைக்கும் என்ற அந்த கதைப் போக்கும் அதையும் மிஞ்சிய கிளைமாக்சும் அபாரம் .
ஜல்லிக்கட்டுக் காட்சிகளை இதுவரை எந்தப் படத்திலும் பார்க்க முடியாத அளவுக்கு சிலிர்ப்பூட்டும் வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் . ஒவ்வொரு ஷாட்டும் நூறு ஷாட்டுக்கு சமம் . அது மட்டுமின்றி அந்த மண், மலை, வானம், இயற்கை , மக்கள், முகங்கள் , சிக்கல்கள் தீர்வுகள் என்று அவர் சொல்லி இருக்கும் விதமும் அதை படமாக்கி இருக்கும் விதமும் அற்புதம் . சிறந்த கதை சொல்லி மற்றும் இயக்குனராக ஹேமந்த் குமாரைக் கொண்டாடலாம் .
ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜல்லிக்கட்டுக் காளையாக சீறிப் பாய்ந்திருக்கிறார் சசிகுமார் . இந்தப் படத்துக்கு சசிகுமாரைத் தவிர இன்னொரு நடிகரை யோசிக்கக் கூட முடியவில்லை . கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தல், நகரில் ஒரு விதம், கிராமத்தில் ஒரு விதம் , கண்களின் மின்னல் , பேசும் தன்மை, அர்த்தமுள்ள மவுனங்கள் என்று இந்த படத்துக்காகவே செஞ்சு வச்ச சிங்கமாக இருக்கிறார் சசிகுமார் .நேசிக்கும் பெண்ணிடம் அப்பாவின் குணத்தைப் பார்த்த உடன் உறைந்து நிற்கும் விதம் கவிதை. அடக்க முடியாத காளையாக தொடரட்டும் அவரது திரைப் பயணம்.
பார்வதி அருண் .. இப்படி ஒரு அடர்த்தியான கதையில் கதாநாயகி பாத்திரம் ஒரு ஓரமாக நிற்கத்தான் முடியும் என்று பார்த்தால் நேர்மாறாக இருக்க, அதைதன் நடிப்பின் மூலம் பிரம்மிக்க வைத்துள்ளார் . மாட்டை அப்பா விற்று விட்டு வந்தது அறிந்து அவர் கத்திக் கதறி உருண்டு புரண்டு அழும்போதும் அப்போது அவர் பேசும் வசனங்களும்…. அது ஒரு சினிமாப் படத்தின் காட்சி என்று நம்பவே முடியாத அளவுக்கு நாமும் திரைக்குள் ஓர் ஆளாக நிற்க ஆரம்பித்து விடுகிறோம்.
அசத்தல் ஜே டி சக்ரவர்த்தி. சசிகுமார் அவர் அலுவலகத்தில் புகுந்து அடிக்கும் காட்சியில் ”யார்றா இவன் .. நம்மகிட்டயே வந்து…” என்ற அலட்சிய ஆத்திரத்தோடு தோள்களைக் குலுக்கிக் கொண்டு படியில் இறங்கும் இடம் அட்டகாசம் . மாட்டைப் பார்த்ததும் சமையல்காரன் அதை எப்படி எல்லாம் சமைக்கலாம் என்று சொல்ல ஆரம்பிக்க, அவனைத் திட்டி விட்டு , கொஞ்சம் ரசிக்க விடுறா என்று சொல்லும் இடம் .. சும்மா தெறிக்கிறது மற்றவர்களும் தோற்ற ரீதியாக சிறப்பு .
பாடல்களில் போதாமை இருந்தாலும் பின்னணி இசையில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் இமான்.
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு இயக்குனரின் கனவுக்குத் தன்னையே அர்ப்பணித்து இருக்கிறது . நெகிழ்வான கை குலுக்கல்.
பல கிளைகளில் பிரிந்து சேர்ந்து விலகி நெருங்கிப் பயணிக்கும் திரைக்கதையை அழகாகக் கோர்த்துக் கொடுத்திருக்கிறது சிவ நந்தீஸ்வரனின் படத் தொகுப்பு .
ஊர்ப் பிரச்னை , அடக்கப்பட்டால்தான் மாடு பிழைக்கும் இந்த இரண்டு விசயங்களையும் மட்டும் வைத்துக் கொண்டு இந்தக் கதையை இன்னும் சிறப்பாக அழுத்தமாக சொல்லி இருக்க வேண்டும். குதிரை பந்தய விவகாரமே கூட தேவை இல்லை எனினும் அது ஒரு சிறப்பான காட்சியில் முடிவதால் ஒகே.
ஆனால் நண்பனின் வக்கிர குணம், அது தொடர்பான காட்சிகள் தேவை இல்லை .
அது போல நாயகியின் அப்பாவே மாட்டை விற்றார் என்பது ஒரு பலவீனம். என்னதான் குடி போதையில் இருந்தாலும் பணம் தேவை என்றாலும் மாடு என்ற உடன் கொந்தளித்துகொடுக்க மறுத்து விட்டவரை மேலும் போதைக்கு அடிமையாக்கி, பத்திரம் திருடி ஏமாற்றிக் கையெழுத்து வாங்கி மாட்டைக் கொண்டு போனார்கள் என்று சொன்னால்தானே நாயகன் பக்கம் இன்னும் வலு ஏறும் ?
இப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும் இந்த இனத்தின் மண்ணின் பெருமையை சொல்லும் உயர்ந்த படைப்பாக வந்திருக்கிறது காரி.
இப்படி ஒரு அற்புதமான படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷமன் குமாருக்கு வாழ்த்துகள்
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————————-
ஹேமந்த், சசிகுமார், பார்வதி அருண், ஜே டி சக்ரவர்த்தி , கணேஷ் சந்திரா, தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் , மற்றும் அந்த காரிக் காளை