காற்றின் மொழி @ விமர்சனம்

BOFTA மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் சார்பில் தனஞ்செயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகியோர்  தயாரிக்க,

ஜோதிகா, விதார்த், லக்ஷ்மி மஞ்சு, மாஸ்டர் தேஜஸ் கிருஷ்ணா,  எம் எஸ் பாஸ்கர், குமாரவேல், மயில் சாமி, உமா பத்மநாபன், நடிப்பில் சுரேஷ் திரிவேனி கதைக்கு 

ராதா மோகன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் காற்றின் மொழி. 
 
இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் ஹிட் அடித்த துமாரி சுலு படத்தின் தமிழ் மறு உருவாக்கம் .
 
 காற்றின் மொழியின் வளம் எப்படி? பார்க்கலாம் . 
 
சின்ன வயசு முதலே அப்பா ( மோகன் ராம்) மற்றும் தமக்கைகளால் மட்டம் தட்டப்பட்டு பனிரெண்டாம் வகுப்பில் தோற்று……
 
ஒரு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருக்கும் பால கிருஷ்ணனுக்கு (விதார்த்)  வாழ்க்கைப் பட்டு….. 
 
 மகன் சித்தார்த் ( மாஸ்டர் தேஜஸ் கிருஷ்ணா), வீட்டு வேலைகள் , சமையல் அறைச் சிறை என வாழ்ந்து கொண்டிருக்கும் விஜயலட்சுமிக்கு (ஜோதிகா), சிறப்பான சமையல் குறித்த அனைவரின் பாராட்டும் , குடியிருப்பில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில், 
 
லெமன் அண்ட் ஸ்பூன் ரேசில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவதும்தான் தன்னை நிரூபிக்கும்  வாய்ப்புகள் 
 
கரண்ட் பில் கட்ட வருவதே வெளி உலகத் தொடர்பு. 
 
பிடித்த வேலையை ரசித்து செய்யும் பக்கத்து வீட்டு விமானப் பணிப்பெண்கள், கணவன் இறந்த பின்னும் ,
 
உணவுப் பொருட்கள் தயாரித்து விற்கும் மாமி ( உமா பத்மநாபன்) ஆகியோர் விஜயலக்ஷ்மிக்கு , ஏக்கம் தரும் வெற்றிகரமான பெண்கள் ! 
 
ஹலோ பண்பலை வானொலி நடத்தும் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறும் விஜிக்கு வானொலி நிகழ்ச்சி நடத்துனராகும் ஆசை வருகிறது . 
 
தனக்கு பிடித்த வானொலி நிகழ்ச்சி நடத்துனர் அஞ்சலி (சாண்ட்ரா) மூலம் நிறுவன உயர் அதிகாரி மரியாவை (லக்ஷ்மி மஞ்சு) சந்தித்து , அங்கு பணியாற்றும் 
கவிஞர் மற்றும் நிகழ்ச்சி இய்க்குனர் கும்கி என்கிற கும்பக்கரை கிருஷ்ணனின் ( குமாரவேல்)
 
கிண்டல் மற்றும் புறக்கணிப்பை மீறி வானொலி நிகழ்ச்சி நடத்துனராக தேர்வாகிறாள். 
 
ஆனால், இரவு நேரத்தில் நெருக்கமாக கிளுகிளுப்பாக பேசும் நிகழ்ச்சி!
 
பலரின் வக்கிரங்களுக்கு தீனி போடும் நிகழ்ச்சியாக வானொலி நிலையம் அதை நடத்த விரும்புகிறது .
 
ஆனால் விஜியோ, ஹலோ என்று கிசுகிசுப்பாக ஆரம்பித்து கிளர்ச்சியூட்டும் குரலில் 
பேசினாலும் கூட, 
 
வக்கிரங்களை மாற்றும் மன நல சிகிச்சையாக , பிரச்னைகளுக்கு ஆலோசனையும் ஆறுதலும் கூறும் உயர்ந்த சேவையாக அந்த நிகழ்ச்சியை  மாற்றுகிறாள் . விளைவு ?
 
நள்ளிரவு நிகழ்ச்சிகளின் முகத்தையே மாற்றும்  நல்லிரவு நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி பெரும்புகழ் பெறுவதோடு  வானொலி நிலையத்துக்கும் மகுடமாக மாறுகிறது . 
 
ஆனால் ஒவ்வொரு நேயரும்  ஆரம்பத்தில் விஜயலட்சுமியிடம் ஆபாசமாக பேசும் விதத்தால் மனம் உடைகிறான் பாலு . வேலை செய்யும் இடத்தில் புதிதாக வந்திருக்கும் முதலாளி அவனை நடத்தும் விதம்  வேறு மோசமாகிறது . 
 
விஜய லட்சுமிக்கும் பாலுவுக்கும் மனப்பிளவு ஏற்படுகிறது . பையனை கவனிக்க முடியாத காரணத்தால் அவன் தவறான வழிகளுக்குப் போகிறான் . 
 
ஒரு பக்கம்  குடியிருப்பின் கடுகடு நபர் ( எம் எஸ் பாஸ்கர்) , அலட்சியப் படுத்திய கவிஞர் கும்கி முதல் நடிகர் சிம்புவரை, 
 
விஜயலக்ஷ்மியின் ரசிகராகி பிரமித்து நெகிழ்ந்து பார்த்தாலும் , குடும்ப வாழ்க்கை மோசமாகிறது . 
 
இந்த நிலையில் மகன் காணாமல் போக, எல்லோரும் விஜியையே குற்றம் சொல்கின்றனர் . 
 
பையன் என்ன ஆனான் ? கணவன் மனைவி உறவு என்ன ஆனது ? விஜியின் சிறப்பான நிகழ்ச்சி நடத்துனர் பணியை அவளால் தொடர முடிந்ததா என்பதே இந்த காற்றின் மொழி . 
 
அருமை! சிறப்பு ! நேர்த்தி . அற்புதம் !
துமாரி சுலு படத்தின் எலும்புக் கூட்டை மட்டும் எடுத்துக் கொண்டு ,அற்புதமான உறுப்புக்கள் , நாடி , நரம்பு , ரத்தம் சேர்த்து, 
 
காற்றின் மொழி படத்தை , துமாரி சுலுவை விட சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் ராதாமோகன் . 
 
முக்கியமாக துமாரி சுலு வில் வித்யாபாலன் நேயர்களுடன் பேசும் விஷயங்கள் எல்லாம் பெரிதாக ஈர்ப்பாக இருக்காது . 
 
ஆனால் காற்றின் மொழியில்  விஜய லக்ஷ்மி பேசும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும், ஆறு ரன்களுக்கு பறக்க விடும் பந்தாக பயன்படுத்தி இருக்கிறார் ராதா மோகன் . 
 
பெண்கள் உள்ளாடை நிறுவனத்தில் பணியாற்றுவதால் அனைத்து பெண்களையும்  மார்பகங்களாகவே பார்க்கும் நபரின் அழைப்பு, 
 
திடீரென மனைவி இறந்து விட்ட நிலையில் , அவள் மீது காட்ட விரும்பும் கோபத்தை எல்லோர் மீதும் ஒரே குடியிருப்புக்கார நீலகண்டனின் ( எம் எஸ் பாஸ்கர்) அழைப்பு, ரயில் முன் பாயும் நபர்களை காப்பாற்ற வண்டியை நிறுத்த முடியாத டிரைவரின் குற்ற உணர்ச்சி குறித்த அழைப்பு ( இயக்குனர் ராதா மோகனே பேசி இருக்கிறார் )
 
இவற்றுக்கு விஜய லக்ஷ்மி சொல்லும் பதில்கள் வெகு ஜன வாழ்வில் பலருக்கும் மருந்தாக இருப்பதுதான் இந்தப் படத்தின் மாபெரும் அற்புதம் . 
 
இது தவிர தொலை பேசியில் யோகி பாபு அழைக்கும் அழைப்புகள்  நகைச்சுவை  விருந்து படைக்கின்றன . 
 
திரைக்கதையோடு கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கிறது பொன் பார்த்திபனின் வசனங்கள் .
 
பெயரிலேயே பொன் இருப்பதாலோ என்னவோ தங்க வசனங்களால் படத்தை இழைத்து இருக்கிறார் பொன் பார்த்திபன் 
 
“நான் தனியா இருக்கேன் அவன் தனிமையில் இருக்கான்”என்ற  ஆழமான வார்த்தைகள் ஆகட்டும் …
 
“இப்ப என் வண்டி மேல வத்தக் குழம்பு பாட்டிலை வைப்ப; நாளைக்கு பாத்திரம் கொண்டு வந்து வத்தக் குழம்பே வைப்ப ..” என்ற நகைச்சுவை வசனம் ஆகட்டும் .. 
” இவனாச்சும் போன்லதான் உளர்றான்…ஆனா இப்ப எல்லாம் பல பேரு பிரஸ் மீட்லையே உளர்றானுங்க” என்ற அரசியல் சரவெடி ஆகட்டும் ..
 
கதையின் நிகழ்வுகளை , மன உணர்வுகளை விளக்கும் வசனங்கள் ஆகட்டும் … பின்னிப் பெடல் எடுக்கிறார் பொன் பார்த்திபன். அட்டகாசம் 
 
“நேத்து ராத்திரி யம்மா … மத்தவங்களுக்குத்தான் ஐட்டம் சாங் . எங்களுக்கு அது வேற. அவளுக்கு அது புரியும்……” போன்ற வசனங்களின் ஆழம் பிரமிக்க வைக்கிறது . 
 
(விஜயலட்சுமியின் சமையலை சாப்பிட்டு நெகிழும் கும்கி “பதினெட்டு வருஷம் கழிச்சு கண்ணீர் வருது ”என்று சொல்வதற்கு பதில் ,
 
பதினெட்டு வருஷம் கழிச்சு எங்க அம்மா சமையலை சாப்பிடறேன்”என்று சொல்லி இருந்தால் இன்னும் கனமாக இருந்து இருக்கும் )
 
இது இப்படி இருக்க , ஒரு காட்சியில் வசனமே இல்லாமல் நகைச்சுவை அணுகுண்டு போடுகிறார் மயில்சாமி
 
( என்ன ஒண்ணு… முந்திரி பருப்புக்கு பதில்… பாதாம் பருப்பை  பிரபலப்படுத்தி இருக்கலாம். உடம்புக்கும் நல்லது )
ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சி .. அதில் ஒரு வசனம் … அதில் இருந்து இன்னொரு காட்சி என்ற ராதாமோகனின் ஸ்டைல் மிக சிறப்பாக வந்திருக்கிறது படத்தில் . 
சில சமயம் அடுத்து வரும் காட்சியை ஊகிக்க முடிகிறது என்றாலும் அது வரும் போது நம்மை முழுசாகக் கவர்ந்து விடுகிறது .
 
அங்கேதான் ஜொலிக்கிறது ராதா மோகனின் இயக்கம் . 
 
ஜோதிகா ..ஆ .ஆ …ஆ ! வியப்பூட்டும் விஸ்வரூபம் .. மீண்டும் !
 
ஆரம்பத்தில் விஜயலட்சுமி கணவனோடு வாழும் அன்னியோன்ய வாழ்க்கையை ஜோதிகா ஒரு நடிகையாக கையாண்டிருக்கும் விதம் ,
 
அது உடையக் கூடாது என்ற போராட்டம் … உடையும் போது சிதறுவது… பணி மகளிரை பார்த்து வியப்பது …
 
அப்பா அக்காவை ஆரம்பத்தில்  ஜீரணித்து , முடியாத சமயத்தில் வெடிப்பது … 
 
கடைசி முறையாக ஹலோ சொல்ல முடியாமல் வெடித்து அழுவது, பையன் குரல் கேட்ட உடன் உள்ளுக்குள் குதிப்பது … 
 
என்று பெரிய பெரிய காட்சிகள் முதல் சின்னச் சின்ன முக பாவனைகள் வரை …. இந்தப் படம் ஜோதிகாயணம் என்றே சொல்லலாம் . 
ஆரம்பத்தில் சற்றே மிகை நடிப்பு இருந்தாலும் பின்னால் வரும் கனமான காட்சிகளுக்கு அந்த அஸ்திவாரம் தேவை என்பதை திட்ட மிட்டு கதாபாத்திரத்தை கையாண்டு அசத்தி இருக்கிறார் ஜோதிகா . 
 
படத்தின் மிகப் பெரிய ஆச்சர்யம் விதார்த் !
 
ஜோதிகாவின் நடிப்போடு இயல்பாக ஆரம்பத்தில் நடித்து வரும் விதார்த், அதே இயல்பான நடிப்போடு இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுக்கிறார் .
 
மனைவியோடு பண்பலை மூலம் தொலைபேசியில் பேசும் காட்சி உட்பட அடுத்து வரும் காட்சிகளில் அசத்தி இருக்கிறார் .
 
வேலை செய்யும் இடத்தில் தனக்கான மரியாதை குறையும்போது , தான் முன்பு எப்படி மரியாதையாக நடத்தப்பட்டோம் என்று, 
 
பத்துக் காட்சிகளில் சொல்லப்பட வேண்டிய விஷயத்தை ஒரு முகபாவத்தில் கொடுத்து விட்டுப் போகிறார் . பிரம்மாதம்.  
 
மரியா கதாபாத்திரமும் லக்ஷ்மி மஞ்சுவின் நடிப்பும் … இவருக்காக அதுவும் அதற்காக இவரும் போல …
 
அப்படி ஒரு பொருத்தம் . தனக்குள் தான் இருக்க விரும்பும் குடும்பத்தலைவி ஏக்கத்தை அவர் மென்மையாக நடித்து இருக்கும் விதம்  அருமை . 
தன்மானத்துக்கும் வருமானத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தை அவர் கெத்தாக செய்து இருக்கும் விதம் அருமை . 
 
ராதாமோகனின் படங்களில் எம் எஸ் பாஸ்கருக்கு என்றே வழக்கமாக இருக்கும் பாணியில் இதிலும் ஒரு சிறப்பான கதாபாத்திரம் . நல்ல நடிப்பு. 
 
ஒரே காட்சியில் வந்தாலும் தனக்கே உரிய பாணியில் சொந்தக் கதை சோகக் கதை சொல்லி நடித்து விட்டுப் போகிறார் சிம்பு . நல்ல மனசு .
 
மாஸ்டர் தேஜஸ் கிருஷ்ணா,   உமா பத்மநாபன் , மனோபாலா பாத்திரப் பொருத்தம் .
 
இப்படி மனசுக்கு குளிர்ச்சியாக வந்திருக்கும் படத்தை கண்ணுக்கும் குளிர்ச்சியாக கொண்டு வருவதில், 
 
சவால் விட்டு ஜெயித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி . ரம்ம்ம்மம்ம்ம்மியம்!  குறிப்பாக வண்ண ஆளுமையும் தூய்மையும் . அருமை 
 
கதிரின் சிறப்பான கலை இயக்கமும் அதற்கு ஒரு காரணம் . சிறப்பு . 
 
ஏ ஆர் ரகுமான் பட்டறையில் இருந்து வந்திருக்கும் காஷிப் இசையில் டர்ட்டி பொண்டாட்டியும் , கிளம்பிட்டாளே  விஜயலட்சுமி பாடல்கள் டால் அடிக்கிறது . பொருள் பொதிந்த பின்னணி இசை . 
 
சிறிதும் பெரிதுமாக .. நெகிழ்வும் மகிழ்வும் தவிப்பும் துடிப்புமாக அடுத்தடுத்து வரும் காட்சிகளை, 
 
சேதாரம் இல்லாமல் கோர்த்து தரத்துக்கு ஆதாரம் ஆகி இருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் . 
 
ஜோதிகாவுகாவுக்கான உடை அலங்காரம் , ஒப்பனையும் மிக சிறப்பு . 
 
வயசான காலத்திலும் பொருத்தமான நபரை பார்க்கும் – தனிமையில் இருக்கும் நபருக்கு காதல் வரும் என்ற வசனத்தை, 
 
அப்படியே மனோபலாவுக்கும் உமா பத்மனாபனுக்குமான குளோசப்பில் நிறுத்தியது ஏன் ?
 
பயம்?  நீளக் குறைப்பில் மாயம்? அப்படியே இரண்டு காட்சி வந்திருந்தாலும் காமெடியாக ஆரம்பித்து அழுத்தமான விசயமாகவும் அமைந்து  இருக்குமே . 
 
அவ்வளவு திறமையான விஜய லக்ஷ்மி இரவில் பணிக்கு வர முடியாத நிலையில் ,

ஒரு பகல் நேர நிகழ்ச்சிக்கு மாற்றலாம் என்ற யோசனை பண்பலை அலுவலகத்தில் யாருக்குமே வராமல் திரு திருவென விழிப்பது ஏன் ?  
 
பெண்களின் பிரச்னையை பேசுகிற – பெண்களுக்கான இந்தப் படத்தில்  மனோபாலா பேசும் இரட்டை அர்த்த வசனம் தேவையா ?
 
இப்படி ஓரிரு கேள்விகள் வந்தாலும் , சமையல் அறைக்குள் பொசுங்கும் விஜயலக்ஷ்மிகளுக்கு கண் திறக்கும் படமாக ,
 
மனித நேயத்தை நேர்மையை உறவின் அருமையை உறவு கடந்த சமூக நேசத்தின் மாண்பை காவியமாக சொல்கிறது காற்றின் மொழி . 
 
மிக சிறப்பான ஒரு படத்தை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்  
 
மொத்தத்தில் 
 
காற்றின் மொழி…. பண்பு அலை …. அன்பு அலை  .. நேச அலை !
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————-
ராதாமோகன் , பொன். பார்த்திபன் ,  மகேஷ் முத்துசாமி, லக்ஷ்மி மஞ்சு ,கே எல் பிரவீன் , தயாரிப்பாளர் தனஞ்செயன் 
 
 
 
 
 
 
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *