எஸ் ஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் புன்னகைப் பூ கீதா தயாரிக்க, விமல் , சமுத்திரக் கனி , கீதா , ஆகியோர் நடிக்க , நாகேந்திரன் இயக்கி இருக்கும் படம் காவல் . படம் ரசிகர்களின் ஆவலுக்கு பதில் சொல்லுமா ? பார்க்கலாம் .
நட்பு, காதல் , தொழில் , அரசியல் இவற்றுக்காக கொலைகள் நடந்த காலம் போய், இப்போது இன்னும் அநியாயமாக, முன் பின் தெரியாத – சம்மந்தமே இல்லாத – நபரை, பணத்துக்காக மட்டுமே கொலை செய்யும் ஆட்கள் பெருகி விட்ட காலம் இது. கொல்பவனுக்கும் எதற்காக கொல்கிறோம் என்பது தெரிவது இல்லை . கொல்லப்படுபவனுக்கும் எதற்காக கொல்லப் படுகிறோம் என்பது புரிவது இல்லை .
அப்படி, தமிழகம் முழுக்க நடைபெறும் கொலைகளுக்கு ஆள் அனுப்பும், சென்னை மீனவக் குப்ப தாதாவான கர்ணா என்பவனிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவன் செய்யும் தவறுகளுக்கு துணை போகிறது, எம் எஸ் பாஸ்கர், சிங்கமுத்து , இமான் அண்ணாச்சி ஆகிய போலீஸ்காரர்கள் குழு . அவர்தம் மனைவிகளும் தமது கணவர்களை லஞ்சம் வாங்கத் தூண்டும் பணப் பேய்களாக இருக்கிறார்கள் .
அவர்களது பிள்ளைகளும் (விமல், கும்கி அஸ்வின் ஆகியோர் ) அப்பாவிடம் காசு வாங்கி ஜாலியாக செலவு செய்து , ஒரு நிலையில் பணம் போதாமல் போக , கர்ணாவுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கிறர்கள் .
கடற்கரையில் துப்பாக்கி சுடும் பலூன் விற்றபடி இந்தக் கும்பலை கண்காணிக்கும் என்கவுண்டர் போலீஸ் அதிகாரி சமுத்திரக் கனி சரியான சமயத்தில் ஆக்ஷனில் இறங்க , அதை கர்ணாவுக்கு சொல்லி தப்பிக்க வைக்கிறார் விமல். அதன் மூலம், திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன ஒரு இளம் போலீஸ் அதிகாரியின் மரணத்துக்கும் விமல் காரணம் ஆகிறார் .
பதிலுக்கு சமுத்திரக் கனி போடும் திட்டத்தில், கர்ணாவின் தம்பி என்கவுண்டரில் கொலைப்பட , அதில் தப்பும் கர்ணா, விமல் மற்றும் நண்பர்களையே சந்தேகப்பட்டு, அவர்களையே கொலை செய்ய முயல , ஊழல் போலீஸ் அப்பாக்கள் பதற .. அப்புறம் என்ன நடந்தது என்பதே காவல் படம் .
கடைசி சில காட்சிகளுக்கு முன்பு வரை விமல் வில்லனாகவே இருக்கிறார். அவரது நண்பராக வரும் அஸ்வின் சிரிக்க வைக்க முயல்கிறார் . ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் பெண்ணாக வந்து விமலைக் காதலிக்கும் பாத்திரத்தில் கீதா இயல்பாக நடித்து உள்ளார்.
கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் சமுத்திரக்கனி . நல்ல விசயம் . ஆனால் எப்படிப்பட்ட காட்சி என்றாலும் அவரது கண்களையும் உதடுகளையும் தவிர , முகத்தில் சிறு அசைவு கூட வரமாட்டேன் என்கிறதே… ஏன் ?
ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்றால் என்ன என்று புரியாத விமல் , ஒரு சாவு வீட்டில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்ய கீதாவை ஒப்பந்தம் செய்ய, விஷயம் அறிந்து கீதா எகிற, ‘சாவுக்கு அழக் கூட ஆள் இல்லாத சென்னை வாழ்க்கையில் இனி பிணத்தை எடுக்கவும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் தேவைப்படும்’ என்ற ரீதியில் விமல் பேசும் காட்சி, சிந்திக்க வைக்கிறது . அருமை .
ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஒகே .
படத்தில் காதல் , காமெடி , செண்டிமெண்ட், பரபரப்பு , மெசேஜ் என்று எல்லாமும் இருக்கிறது. ஆனால் வேகமாக படம் நகர வேண்டும் என்ற கண் மூடித்தமான நோக்கத்தில் எல்லாவற்றையும் மேம்போக்காக சொல்லி விட்டு ஓடுகிறார்கள், தேவையான விவரணையோ அழுத்தமோ பல காட்சிகளில் இல்லை .
ஒண்ணாம் நம்பர் அயோக்கிய போலீஸ்காரர் கதாபாத்திரம் (எம் எஸ் பாஸ்கர் ), தனது மகன் மாட்டிக் கொண்ட பிறகு மட்டும் ரொம்ப ஒழுங்காக, யூனிஃபார்ம் பற்றி எல்லாம் சித்தாந்தக் கருத்துச் சொல்வது …
‘பொதுஜனம் தப்பு செய்தால் சிறை தண்டனை; அதே தப்பை போலீஸ்காரன் செய்தால் டிரான்ஸ்பர்’ என்ற பாணியில், அந்த ஊழல் அப்பாக்களை எல்லாம் சமுத்திரக் கனி கதாபாத்திரம் மன்னிப்பது … இவை எல்லாம் அழுகுணி ஆட்டங்கள் என்றால்…
பக்கா அயோக்கியனான விமல் கதாபாத்திரத்திடம் சமுத்திரக் கனி துப்பாக்கியைக் கொடுத்து தாதா கர்ணாவை சுடச் சொல்லும்போது” உன் உடம்புல ஓடுவது போலீஸ் ரத்தம் . நீ அவனை சுடு ” என்று ‘ கண்டுபிடிப்பது’ செம காமெடி . கதாபாத்திரங்களை எப்படி கடமைக்கு நுனிப்புல் மேய்ச்சலாக வடிவமைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதெல்லாம் உதாரணம்
‘நியாயமோ அநியாயமோ ஏதாவது ஒரு காரணத்துக்காக பழி வாங்கும் உணர்ச்சியோடு கொலை செய்பவனைக் கூட மன்னிக்கலாம். ஆனால் முழுக்க முழுக்க காசுக்காக, சம்மந்தமே இல்லாத ஒருவரை அநியாயமாக கொலை செய்யும் கூலிப் படைக் கொலைகாரர்களை மன்னிக்கவே கூடாது ‘என்பதுதான் , இந்தப் படம் சொல்ல வந்திருக்கும் மிக நியாயமான விஷயம். படத்தில் சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயமும் இதுதான் .
படம் துவங்கும்போதே இதை முதல் காட்சியிலேயோ , அல்லது சில காட்சிகளின் கொத்தாகவோ அழுத்தமாக சொல்லிவிட்டு , அப்புறம் முக்கிய கதாபாத்திரங்கள், காதல், மோதல் கதைக்கு எல்லாம் போய் விட்டு , கடைசியில் மீண்டும் இந்த விசயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைத்து கிளைமாக்ஸ் கொடுத்து இருந்தால் இந்தப் படம் பெரிதாக கவனிக்கப்பட்டு இருக்கும் .
ஆனால் இந்த நல்ல விஷயத்தை ஒரு வசனத்தில் போகிற போக்கில் சமுத்திரக்கனியின் வேகமான உச்சரிப்பால் மட்டும் சொல்லி விட்டு விட்டு அம்போ என்று கைகழுவி விடுகிறார்கள்.
காவல்… வாட்ச் மேன்.