‘அப்படி போடு அருவாள’ என்று, ரஜினிகாந்த் எதையாவது ஆரம்பித்தாள் போச்சு; அடுத்த நொடியே …
‘குறுக்க போடு கொடுவாள’ என்று யாராவது கிளம்பிடுறாங்கப்பா !
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ‘மெட்ராஸ்’ ரஞ்சித் இயக்க ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு காளி , கண்ணபிரான் , என்று பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் கபாலி என்று பெயர் முடிவானது (ரஜினி நடித்த ஒரு தெலுங்குப் படமோ அல்லது கன்னடப்படமோ காளி கோவில் கபாலி என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது )
வட சென்னையில் வாழ்ந்த ஒருவரின் கதை… முழு படப்பிடிப்பும் மலேசியாவில்.. ரஜினியின் மகளாக போதைக்கு அடிமையான பெண்ணாக தன்ஷிகா… அவரது ஜோடியாக முக்கிய வேடத்தில் அட்டக்க்கத்தி தினேஷ் ….. என்று வரும் செய்திகள் எல்லாம், சொம்மா சொல்லக் கூடாதேய்..
அப்டியே அள்ளிக்கினு போது…. !
அதே நேரம் …
கபாலி என்று பெயர் வெளியான உடனேயே கபால் என்று குதித்து வருகிறது, அந்த செய்தி
மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பெயரும் கபாலிதானாம். காவ்யா என்ற கன்னடப் பெண்ணே கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை . கடந்த சில ஆண்டுகளாக எடுத்துக் கொண்டே ஏ ஏ ஏ .. இருக்கிறார் சிவகுமார். அவரே தயாரிப்பு என்பதால் பணம் கிடைக்கும்போதெல்லாம் படப்பிடிப்பு நடக்கிறதாம் .
தொண்ணூறு சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் அந்தப்படத்துக்கு, கடந்த ஒரு மாதம் முன்புகூட சென்னையில் படப்பிடிப்பு நடந்திருக்கிறதாம் .பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்து இருப்பது உண்மை.

சிவா பிக்சர்ஸ் என்கிற பெயரில் கில்டில் இந்தப்பெயர் பதிவு செய்யப்பட்டதாம்.
முறைப்படி அவர் அந்தப் பெயரை புதுப்பிக்கவில்லை என்று சொல்லி, ரஜினி படத்துக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாகப் புலம்பும் சிவகுமார் , “நான் பல லட்சங்கள் செலவு செய்து படமெடுத்துக்கொண்டிருக்கிறேன், இப்போது எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. எங்கள் ரஜினி தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் கன்னட பாசம் உடையவர் . எனக்கு நியாயம் செய்வார் ” என்கிறாராம்.
ஆண்டவா ! மோசமான திரைக்கதைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் . இந்த பெயர் வைக்கிற பஞ்சாயத்துகளில் இருந்து தமிழ் சினிமாவை காப்பாற்று .