விக்டோரியா வாட்ச் டாக் நிறுவனம் சார்பில் எஸ். சுபாகரன் தயாரிக்க,
ஆடுகளம் நரேன் , விஜயலட்சுமி, காளி வெங்கட், அர்ஜுன் , ஜெனி, மற்றும் ஷிபானா, ரவீனா, அரவிந்த் ரகுநாத் , அரவிந்த் , ஷாமு, ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க ,
கதை திரைக்கதை வசனம் எழுதி எஸ். கல்யாண் இயக்கி இருக்கும் படம் கத சொல்லப் போறோம் .
எப்படி இருக்கு இவர்கள் சொல்லும் கதை ? பார்க்கலாம் .
உடல் நலக் குறைபாடு காரணமாக ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே தாயாக வாய்ப்புள்ள ஒரு பெண்ணுக்கு (விஜயலட்சுமி, மருத்துவமனையில் பெண் குழந்தை பிறக்கிறது .
தாய் மயக்கத்தில் இருக்கும் நிலையில் அவரது கணவரிடம் (ஆடுகளம் நரேன்) இருந்து. குழந்தையை ஒரு பெண் திருடிக் கொண்டு போய் விடுகிறாள் .
தந்தை போலீஸ் உதவியுடன் குழந்தையை தேட , கையில் குழந்தை இல்லாத நிலையில் திருடி எதிர்ப்படுகிறாள் .
அவளைத் துரத்த , தப்பி ஓடும் அவள் ஒரு லாரியில் அடிபட்டு கோமா நிலைக்குப் போகிறாள் .
அவளுக்கு எட்டு வருடமாக தங்களது சொந்த செலவில் சிகிச்சை அளிக்கிறது குழந்தையைப் பறிகொடுத்த தம்பதி ,
அவள் விழிப்பு நிலைக்கு வருவதற்காக காத்த்ருக்கிறது . அவளிடம் இருந்துதானே குழந்தை எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் .
இன்னொரு பக்கம் அனாதைக் குழந்தைகள் இல்லம் ஒன்றில் வாழும் குழநதைகளின் வாழ்வு சித்தரிக்கப்படுகிறது .
தாய்ப்பாசத்துக்கு ஏங்கும் பார்வை மாற்றுத்திறனாளி சிறுமியான பிரியா ( ஷிபானா) , அவளுக்கு எப்போதும் துணையாகவும் ஆறுதலாகவும் இருக்கும் சிறுமியான அனிதா (ரவீனா)….
குறும்புக்கார சிறுவன் அருண் (அரவிந்த் ரகுநாத் ) , சாப்பாட்டு ராமன் டீனு (அரவிந்த்) ,
அவர்களை அன்பாகக் கவனித்துக் கொள்ளும் மாஸ்டர் (அர்ஜுன் ) வாட்ச் மேன் (காளி வெங்கட் ) ஆகியோரின் உலகம் அந்த அநாதை இல்லம்
இவர்கள் எல்லோரும் சம்மர் கேம்புக்குப் போகும் போது அங்கே ஒரு லவ்லி குழந்தை ஷாமுவின் (ஷாமு ) நட்பு கிடைக்கிறது .
அனாதை இலத்துக்கு வெளியே இருந்து சண்டை போடும் சில சிறுவர்களும் அங்கே வர , சம்மர் கேம்ப்பிலும் சண்டை தொடர்கிறது .
இதனிடையே கோமா நிலையில் இருந்த குழந்தை திருடி இறந்து விட , , காணமல் போன குழந்தையை கண்டு பிடிக்கும் வாய்ப்பு, பாதிக்கப்பட்ட தம்பதிக்குப் பறிபோகிறது .
அவர்களுக்கு குழந்தை கிடைத்ததா ?அநாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இந்த தம்பதிக்கும் என்ன சம்மந்தம்?
— என்பதே இந்த கத சொல்லப் போறோம் படம் !
இதற்கு மேல் இந்தப் படத்தின் கதை பற்றி ஒன்றும் சொல்ல முடியாது . சொல்வது முறையும் அல்ல .
ஆனால் இதற்கு மேல்தான் இருக்கிறது இந்த படத்தின் பலமும் சிறப்புகளும் பிரம்மிக்க வைத்து நெகிழ வைக்கும் கதைப்போக்கும் . !
கவரிங் நகை வாங்கலாம் என்று போன போன கடையில் , அதே விலையில் ஒரிஜினல் தங்க நகை கிடைத்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஒரு அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம் .
படம் துவங்கியதில் இருந்து குழந்தை திருடி கோமா நிலைக்கு போவது வரையிலான அந்த ஆரம்பக் காட்சிகளிலேயே பரபரக்க வைத்து விடுகிறார் இயக்குனர்.
அடுத்து ரொம்ப இயல்பாக நிதானமாக எளிமையாக அநாதை இல்லம் பகுதிக்குள் நுழைகிறார் .
அங்கு வாழும் குழந்தைகளின் உலகத்தை மெல்ல மெல்ல விவரிக்கிறார் . பெற்ற தாய்க்காக ஏங்கும் அவர்களது ஏக்கத்தை துளித் துளியாக சேர்த்து , ஒரு ஏக்க நதியாக்குகிறார் .
ஆரம்பத்தில் வசனங்கள் கொஞ்சம் பக்குவம் இல்லாமல் இருக்கிறது .
பின்னர் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாமே என்று நம்மை நினைக்க வைக்கும் அளவுக்கு நெருங்குகிறது. ஒரு நிலையில் விஸ்வரூபம் எடுக்கிறது சபாஷ்
குழந்தைகளை வைத்து காமெடி காட்சி, நெகிழ்ச்சி காட்சி என்று மாறி மாறி திரைகதையில் பின்னிய விதம் சிறப்பானது .
அருண் குமாருக்கும் இன்னொரு சிறுமிக்குமான பழக்கத்தை சமூகப் பொறுப்போடு முடித்த விதம் இயக்குனர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது என்றால்,
அர்ஜுன் , ஜெனி இருவருக்குமான– பிரிந்த உறவு என்ன என்பதை வழக்கமான கதைப்போக்குக்கு அப்பாற்பட்டு வேறு மாதிரி கையாண்ட விதம் பாராட்ட வைக்கிறது
அனிதா கதாபாத்திரத்தை அடக்கி வாசிக்க வைத்துக் கொணடே வந்து, கடைசியில் விஸ்வரூபம் எடுக்க வைத்திருப்பது ,
இயக்குனரின் திரைக்கதை நுட்ப புத்திசாலித்தனத்துக்கும் உணர்வுப் பூர்வமான படைப்பாற்றலுக்கும் கட்டியம் கூறுகிறது
கிளைமாக்ஸ் டுவிஸ்ட் உள்ளத்தை இருக்கும் உன்னத கவிதை .
முறைப்படி இந்த திரைக் கதையில் கடைசியில் , அனதை இலத்தின் மதர் சார்பாக சொல்லப்படாத ஒரு சீன இருக்கிறது என்ற உணர்வு வந்தாலும்,
படத்தை கனமான இடத்தில் நிறுத்திய விதத்தில் நெக்குருக வைத்து உள்ளம் உறைய வைக்கிறார் இயக்குனர் கல்யாண் . கிரேட் .!
யார் அந்த சுட்டி அரவிந்த் ரகுநாத் ?
துறுதுறுப்பு, சுறுசுறுப்பு, உற்சாகம்…
நல்ல முக பாவனைகள் ….
டைமிங் சென்ஸ் என்று கலக்குகிறான் .
பார்வை மாற்றுத் திறனாளியாக நடித்து இருக்கும் ஷிபனா , ஓர் அழகிய சோகக் கவிதையாக படத்தில் வலம் வருகிறாள் .
அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ளத் தோன்றும் நடிப்பு .
அதனினும் ஒரு படி மேலேபோய் , வியக்க வைக்கிறாள் அனிதாவாக நடித்து இருக்கும் சிறுமி ரவீனா…..!
அடேயப்பா ….. எவ்வளவு பெரிய கேரக்டரை அனா யாசமாகத் தூக்கிச் சுமந்து அபாரமாக நடித்து இருக்கிறது .
அந்தக் குழந்தையின் முகத்தில்தான் எவ்வளவு மெச்சூரிட்டியான முக பாவங்கள் .அபாரமான நடிப்பு .
பிரம்மிக்க வைக்கிறாய் கண்ணே !
எட்டு வருடமாக மனைவியையும் ஆறுதல் படுத்திக் கொண்டு, இழந்த குழந்தையை தொடர்ந்து தேடும் கேரக்டரில் வாழ்ந்து பார்க்கிறார் ஆடுகளம் நரேன்
குழநதையின் இருப்பிடம் பற்றி அறிய கோமா நிலையில் உள்ள திருடியிடம் பொங்கும் காட்சியில்
அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார் விஜயலட்சுமி
ஜெமின ஜோம் அமர்நாத்தின் ஒளிப்பதிவு திரைக்கதைக்குள் இருக்கும் சோகத்தை அழகாக வெளிக் கொண்டு வர பணியாற்றி இருக்கிறது.
பவன் இசையில் பாடல்கள் சுமார் .என்றாலும் ஓலக் குரல பாடலாக வரும் அந்த தீம் மியூசிக் உள்ளத்தை அறுக்கிறது . இன்னும் காதுகளில் ஒலிக்கிறது .
மொத்தத்தில் கத சொல்லப் போறோம் …அம்மாக்களும் குழந்தைகளும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம்
மகுடம சூடும் கலைஞர்கள்
—————————— ——–
கல்யாண் , ரவீனா