காதலும் கடந்து போகும் @ விமர்சனம்

kiki 3

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார், ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஏ.ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி சார்பில் அபினேஷ் இளங்கோவன் மூவரும் வழங்க , 

விஜய் சேதுபதி, . மலையாள பிரேமம் படப் புகழ் மடோனா செபாஸ்டியன், சமுத்திரக் கனி ஆகியோர் நடிக்க , சூது கவ்வும் புகழ் நலன் குமாரசாமி இயக்கி இருக்கும் படம் காதலும் கடந்து போகும்.
படம் ரசிகனைக்  கடந்து போகுமா? கடத்திப் போகுமா? பார்க்கலாம் .
விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் (கே எஸ் ஜி வெங்கடேஷ்) மகளான யாழினிக்கு (மடோன்னா செபாஸ்டியன்),  சென்னைக்கு வந்து,
தனது ஐ டி எஞ்சினியரிங் படிப்புக்கு ஏற்ப,  பெரிய வேலை பார்க்க வேண்டும் என்று ஆசை . ஆனால் அவளது அப்பா அம்மாவுக்கு மகளை சென்னையில் தனியாக விட விருப்பம் இல்லை .
kiki 4
இந்த நிலையில் ஒரு,  சென்னை ஐடி கம்பெனியில் இருந்து  வேலைக்கு வரச் சொல்லி யாழினிக்குக் கடிதம் வர, அதை வைத்து  பெற்றோரை சம்மதிக்க வைத்து சென்னைக்கு வருகிறாள் யாழினி .
அவள் வந்த அன்று அந்த கம்பெனி இழுத்து மூடப்படுகிறது . விசயத்தை வீட்டில் சொன்னால் சென்னையில் தொடர்ந்து இருக்க முடியாது என்ற பயத்தில்,  
கம்பெனி மூடப்பட்டதை பெற்றோருக்குச்  சொல்லாமல் வேறு வேலை தேடுகிறாள் .கையில் இருக்கும் காசுக்கு ஏற்ப ஒரு,  குறைந்த வருவாய்ப் பிரிவினர் குடியிருப்பில் குடி வருகிறாள் .
அவள் குடி வரும் வீட்டுக்கு எதிர் வீட்டில்  இருக்கும் ரவுடி கதிர்  (விஜய் சேதுபதி ) .
ஒரு பெரிய தாதாவுக்காக (நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜி எம் சுந்தர் ) ஒரு குற்றத்தை ஒத்துக் கொண்டு ஜெயிலுக்குப் போய்,  பல வருடங்களை இழந்து வெளியே வந்தவன் கதிர்  . 
kiki 9
அப்படி குற்றத்தை ஒத்துக் கொள்ளும் அவனுக்கு அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளில் ஒன்று, அவன்  வெளியே வந்ததும் தனியே ஒரு டாஸ்மாக் பார் எடுத்துக் கொடுத்து அவனை ஒனராக்கி விடுகிறோம் என்பதுதான் . 
ஆனால் கதிரின் கோபத்தையும்  சொதப்பலான ரவுடித்தன செயல்பாடுகளையும் அதீத கோபத்தையும் காரணம் காட்டி அவனுக்கு எதுவும் செய்யாமல் எடுபிடியாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறாரன் அந்த  தாதா . 
குற்றம் நிரூபிக்கப்பட்டு பதவி இழந்த ஒரு போலீஸ் அதிகாரியும்  (சமுத்திரக்கனி ),  கதிரை ஒழிக்க சரியான சமயம் பார்த்துக் காத்திருக்கிறார் .
கதிருக்கும் யாழினிக்கும் ஆரம்பத்தில் ஏற்படும் மோதல் , பின்னர் நட்பாகி , முரண்பாடுகளுக்கு இடையிலும்  நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட  ஒரு செங்காய் நிலைக்கு வருகிறது . 
kikiki
தான் படித்த படிப்புக்கு ஏற்ப யாழினி வேலை தேடிப் போகும் நிறுவனங்களின்,  அதிகாரிகள்  அவளது  திறமையை அங்கீகரிக்காமல் யாழினி என்ற பேரை வைத்து அவளை பாடவும் ஆடவும் சொல்லி கிண்டல் செய்கிறார்கள்.
அல்லது’ படுக்கைக்கு வந்தால் வேலை’ உறுதி என்கிறார்கள் . அப்படி அவள் மனம் வருந்தி நோகும்போது எல்லாம் அவளுக்கு தன் பாணியில் ஆறுதல் சொல்வதோடு ,
யாழினியை காமத்துக்கு அழைத்த நபரை அடித்து உதைக்கவும் செய்கிறான் கதிர் .
யாழினி மனதளைவில் கதிரை மேலும் நெருங்குகிறாள் .
இந்த நிலையில் யாழினியை வேலைக்கு அழைத்த நிறுவனம் மூடப்பட்டதை அறிந்த அவளது தந்தை, யாழினியை ஊருக்கு வரச் சொல்கிறார் . அப்பாவை மீண்டும்  சமாளிக்க கதிரை தனது காதலனாகவும் ,
kiki 2
தனக்கு வேலை வாங்கித் தற இருக்கும் பெரிய ஐ டி நிறுவன அதிகாரியாகவும் சித்தரிக்கும் யாழினி , அவனை ஊருக்கும் அழைத்துப் போகிறாள்.
அங்கு போலியாக நடிக்க முடியாமல் கதிர் குலைய , அதே நேரம் தாதா  தொடர்பான விசயத்தில் ஏற்படும் ஒரு சிக்கல் காரணமாக கதிர் உடனே சென்னைக்கு வர வேண்டி இருக்கிறது . 
எப்படியவது யாழினிக்கு அவளுக்கு பிடித்த ஒரு வேலையை வாங்கித் தர கதிர் வெறித்தனமாக முடிவெடுக்க, தாதாவுக்காக , மேலே சொன்ன போலீஸ் அதிகாரியை கொலை செய்யும் பணி கதிருக்கு விதிக்கப்படுகிறது . 
அதைத்  தொடர்ந்து யாழினி — கதிர் இருவரும் மிக விலகி,  வேறு வேறு உலகங்களுக்குள் பயணிக்க வேண்டி வருகிறது . 
kiki 7
யாழினியின் கனவு நிறைவேறியதா ? கதிர் என்ன ஆனான் என்பதே , இந்த காதலும் கடந்து போகும் 
Kim Kwang sik  என்பவர் எழுதி இயக்கி 2010 ஆம் ஆண்டு வெளிவந்த கொரியப் படமான  My Dear Desperado  படத்தின்  உரிமையை விலை கொடுத்து நேர்மையான முறையில்  வாங்கி,
அதிகார பூர்வமான முறையில் மறு உருவாக்கம் செய்யப்பட படமே காதலும் கடந்து போகும் . 
படத்தின் பெரும்பாலான காட்சிகள் மூலப் படத்தில் உள்ளது போல அப்படியே இருந்தாலும் வசனம் , படமாக்கல் , நடிக நடிகையர் தேர்வு , இயக்கம் என்று தன் பங்குக்கு தமிழில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி . 
ஒரு அப்பாவி இளைஞனை தாதா பலிகடாவாக்க முயல்வதை அவனுக்கே  சொல்லியும் அவன் புரிந்து கொள்ளாத நிலையில்,  கோபத்தோடு அவனைக் கணடித்து ,
kiki 77 
அவனை விஜய் சேதுபதி அடித்து விரட்டி  தப்பிக்க வைக்கும் அந்தக்  காட்சியை படமாக்கிய விதமே போதும்,  நலன் குமாரசாமியின் இயக்கத் திறமைக்கு  கம்பீர உதாரணம் சொல்ல !
படம் முழுக்க வசனத்தில் அப்படி ஒரு தனித் தன்மையும் நேர்த்தியும் ஜொலிக்கிறது , ஏகப்பட்ட இன்ஜினீயரிங்   பட்டதாரிகள் வேலை இல்லாமல் சிலர் இப்படி இப்படி படுக்கை பேரத்துக்கு கூட அழைக்கப்படும் நிலையில்,
 மேற்கொண்டு ஐம்பது என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு  அரசு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதை “அறிவிருக்கா?” என்று தில்லாக கண்டிக்கும் விதமாகட்டும் …
“நீ என்ஜினியரா/” என்ற கதிரின் கேள்விக்கு , யாழினி அலுப்பும் எரிச்சலுமாக “தமிழ் நாட்டுல எல்லோருமே எஞ்சினியர்தான்” என்று ஏகடியமாக சொல்வதாகட்டும் ..
kiki 6
நாயுடனான எஸ்கிமோக்களின்  தூக்கம் , ஒயின் குடித்த இறால் மீனை உயிரோடு எண்ணையில் போட்டு பொறித்து எடுத்து தின்பது பற்றிய விளக்கம்… இப்படி  , படத்தில் பல வசனங்களை அமைத்திருக்கும் விதம் ,
மறுபடியும் அதை பயன்படுத்தும் உத்தி, அது  நோக்கப்படும் கோணம்,வித்தியாசமான சிந்தனை.. ..இப்படி இந்தப் படத்தின்  உள்ள வசனங்களின் சிறப்பை முழுக்கச்  சொல்லி முடிக்க முடியாது 
பல நூறு கோடி செலவு செய்து  கடல்,  கப்பல் என பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட டைட்டானிக் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஏற்படும் உணர்வை,
இந்தப் படத்தின் ஆண்ட்டி கிளைமாக்சில் கொண்டு வந்து நிறுத்திய விதம் ஆசம் அட்டகாசம் 
இப்படியாக…. காட்சி அமைப்பில் , ஃபிரேம்களில் , ஷாட்களை எடுத்த வகையில்,  பின்புலத்தை , மழை உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளை, நடிக நடிகையரின் நுண்ணிய உணர்வுகளை பயன்படுத்திய விதத்தில் …
kiki 7777 
சபாஷ் நலன்…. குமாரசாமி .ரொம்பவே பெருமைப்படலாம் . .
சந்தோஷ் நாராயணின் பாடல்களிசை  படத்தில்  உற்சாக நதியை ஊற்றுகிறது என்றால், அவரது பின்னணி இசை படத்தை இன்னொரு தளத்துக்கு –  தன்மைக்கு கொண்டு போய் சிறப்பு சேர்க்கிறது .
வித்தியாசமான மெட்டுகள், இசைக் கருவிகள் பயன்பாடு , இசை உத்திகள் எல்லாம் படத்துக்கு அப்படி ஒரு ராட்சஷ சப்போர்ட்  தருகின்றன . 
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு  காட்சியின் உணர்வுக்கு இயைந்து போய் பலம் சேர்க்கும் அதே நேரம் , தனது சிறப்பையும் பக்குவமாக வெளிப்படுத்திக் கொள்கிறது . செம கில்லாடித்தனம் .
முதல் பகுதி வரை கிட்டத்தட்ட நின்று நிதானித்து மெதுவாக நிகழ்கிற கதைப் போக்கை சுவாரசியம் கெடாமல் தந்ததில் லியோ ஜான் பாலின் படத்தொகுப்புக்கு பெரும் பங்கு உண்டு . 
kiki 888
அப்படியானால் படத்தின் இரண்டாம் பகுதி ? அது சொல்லிப் புரியும்  விஷயம் இல்லை . பார்த்து பரவசப்பட வேண்டிய டீம் வொர்க்  மேஜிக் !
வாவ் விஜய் சேதுபதி … அடிப்படையில் நல்லவனான, நம்பியவர்களாலேயே ஏய்க்கப்படுகிற, அந்த வேதனையால் ரவுடித்தனத்தில் சொதப்புகிற,
கோபக்கார காட்டுச் செடி மனிதனின் கதாபாத்திரத்தை அற்புதமாக செய்து  இருக்கிறார் .
கூரிய பார்வை, இறுக மூடிய உதடு, விட்டேத்தியான நடை உடை பாவனை, துறுதுறு துடுக் துடுக் வசன உச்சரிப்பு , கலங்கிக் குலையும் சோகம் என்று மிகப் பிரம்மாதமாக தனக்கு அந்த கதாபாத்திரத்தையும் ,
அந்த கதாபாத்திரத்துக்கு தன்னையும் கொடுத்து உள்ளார். கிரேட் ஜாப் விஜய குருநாத சேதுபதி ! சிறப்பு ! வெகு சிறப்பு !
kiki 88
யாழினி கேரக்டரின் குணாதிசயத்துக்கு மடோன்னா செபாஸ்டியனின் குனாதிசயச் செறிவு நிறைந்த முகம் அப்படி ஒத்துழைக்கிறது . சரக்கடிகும் காட்சிகள் உட்பட பல காட்சிகளில்,
 மிக நுண்ணிய உணர்வுகளைக் கூட அழகாக வெளிப்படுத்துகிறார் .
இட்லிக்கு என்று முதல்   நாள் இரவு ஆட்டி வைத்த அரிசி மாவு,  மறுநாள் அதிகாலையில் புரையோடி, பாத்திரத்தை மூடி வைத்த  தட்டையே  தூக்கி நிறுத்திக் கொண்டு,  பொங்கிப் பூரித்துப் புரையோடி நிற்பது மாதிரி,
 ஒரு சிரிப்பு சிரிக்கிறார்  பாருங்கள் . அட ! அட ! அட ! அப்படி ஒரு முழூஊஊஊஊ…சிரிப்பு ! 
kiki 8
படத்தில்  வரும் மற்ற நடிகர்களும் கேரக்டருக்கு ஏற்ற  நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் .படத்தில் மழையையும் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக்கி அதையும் சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் நலன் குமாரசாமி 
மூணு மணி நேர தூரத்தில் உள்ள விழுப்புரத்தை சொந்த ஊராகக் கொண்ட பொண்ணு,  வேலை இல்லாத நிலையில்சென்னையில் வம்படியாக தங்கிக் கொண்டு,
 பட்டினி கிடந்தது எல்லாம்  கஷ்டப்படுகிறது என்பதையும் , மகள் மூன்று மாதங்களாக  வேலை இன்றி வருமானம் இன்றி சாப்பிடக் கூட காசு இல்லாமல் இருப்பதும்…
தோ  பக்கத்தாண்ட  விழுப்புரத்தில் உள்ள அவளது அப்பா அம்மாவுக்கு , அதுவும் மகள் சென்னைக்கே போகக் கூடாது என்று பிடிவாதமாக வ்வேறு  இருந்த அப்பா அம்மாவுக்கு தெரியவே தெரியாது என்பதும்  
kiki 1
போங்கூ…. அய்யா …போங்கூ….(பேசாம விழுப்புரத்தை விருதுநகர் என்றோ வில்லிப்புத்தூர் என்றோ சொல்லி இருக்கலாமோ டைரக்டர் சாப் ?)
ஒரிஜினல் கொரியப் படத்தில் உள்ள கிளைமாக்சையே வைக்க வேண்டும் என்பதாலோ , அல்லது இங்கே விளக்கி சொல்ல முடியாத காரணத்திற்காகவோ,
படத்தை இப்படி முடித்து இருக்கிறார் இயக்குனர் . இது மிக நன்றாகவே இருக்கிறது . 
ஆனால் கதிர் மீது ஒரு துளி மழை விழுவதைக் காட்டிய நிலையில் அப்படியே நிறுத்தி , யாழினி தன் கனவு பற்றி விளக்கி விட்டு , கனத்த மனதோடு பணிகளை தொடர்ந்தாள் என்ற ரீதியில்  படம் முடிந்து இருந்தால் …
இந்தப் படத்தின்  கிளைமாக்ஸ் கொடுக்கும் கனமான நெகிழ்வின்படி , இன்னொரு டைட்டானிக் படமாகவே இது மலர்ந்து இருக்கும் . ஆனாலும் இப்போது இருக்கும் மூடவும் மிக  நன்றாகவே இருக்கிறது 
 kiki 777
தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக மலர்ந்து இருக்கிறது இந்தப் படம் .
மொத்தத்தில் காதலும் கடந்து போகும் .. ரசிகர்களின் இதயத்துக்குள் போகும் ! 
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————-
நலன் குமாரசாமி, சந்தோஷ் நாராயணன் , விஜய் சேதுபதி,  மடோனா செபஸ்டியன், தினேஷ் கிருஷ்ணன் … இவர்களுடன் Kim Kwang sik 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →