கதம்.. கதம் @ விமர்சனம்

katham-katham-tamil-movie-official-theatrical-trailer-natty-nanda-babu-thooyavan

அப்பு மூவீஸ் சார்பில் முஸ்தரி மற்றும் கார்த்திக் தயாரிக்க, நட்டி நட்ராஜ், நந்தா , சனம் ஷெட்டி, மோனா ஆகியோர் நடிப்பில் பழம்பெரும் கதை வசனகர்த்தா தூயவனின் மகனான பாபு தூயவன் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் கதம்… கதம்.

பதம் பதம் என்று பாராட்டும்படி இருக்கிறதா படம்? பார்க்கலாம் .

பொள்ளாச்சி போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் (நட்டி) ரவுடிக்கும் மேலே . அடித்தட்டு வியாபாரிகளிடம் கூட அலுக்காமல் மாமூல் வாங்குபவர். இன்னொரு பக்கம் அடாவடி எம்பியான பெரியண்ணன் என்பவர் செய்யும் குற்றங்களுக்கு எல்லாம் துணை போயும் , அதை வைத்து துணைக் குற்றங்கள் செய்தும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் பரம அயோக்கியன் . அவர் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனே கிட்டத்தட்ட குடிகாரர்கள் படுத்திருக்கும் இடம்தான்.

அந்த ஸ்டேஷனுக்கு பணிக்கு வருகிறார் நேர்மையான சப் இன்ஸ்பெக்டரான நந்தா (நந்தா). அயோக்கிய இன்ஸ்பெக்டர் , மற்ற காவலர்கள் அனைவரும் பெரியண்ணனோடு சேர்ந்து செய்யும் குற்றங்களை எதிர்த்து, நிறைய அவமானங்களை சந்திக்கிறார் . அதையும் மீறி சில சமயம் சப் இன்ஸ்பெக்டர் திருடனையும் தீவிரவாதிகளையும் பிடித்து அது மக்களுக்கு தெரிகிற அளவுக்கு வந்து விட்டால், சப் இன்ஸ்பெக்டரை ஓரம் கட்டிவிட்டு தானே பெயர் வாங்கிக் கொள்கிறார் இன்ஸ்பெக்டர் .

இன்ஸ்பெக்டர் அடிக்கடி உறவாடும் ஒரு விலைமாது(மோனா) இன்ஸ்பெக்டரை காதலிக்கிறாள். பிராணிகள் மீது அன்பு காட்டும் ஒரு புளூ கிராஸ் பெண் (சனம் ஷெட்டி) சப் இன்ஸ்பெக்டரைக் காதலிக்கிறாள் .

எம் பி ஆரம்பித்து வைத்த ஒரு பைனான்ஸ் கம்பெனியின் உரிமையாளர், பணம் போட்ட மக்களை ஏமாற்றிவிட்டு சுமார் தொண்ணூறு கோடி பணத்தோடு தப்பிக்க முயல , அவனைப் பிடித்து மக்களையும் ஏமாற்றி பணத்தை தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ள இன்ஸ்பெக்டரும் எம் பி யும் முயல, அதைப் பங்கு பிரிக்கும் விவகாரத்தில் ஆரம்பித்து எம் பி பெரியண்ணனுக்கும் அயோக்கிய இன்ஸ்பெக்டருக்கும் பகை வளர்கிறது .

இன்ஸ்பெக்டரை பெரியண்ணன் கொலை செய்ய முயல , சப் இன்ஸ்பெக்டர் காப்பாற்றுகிறார் . படுகாயத்துக்கு ஆளான இன்ஸ்பெக்டருக்கு அவர் ஏமாற்றிய பொதுமக்களே ரத்தம் கொடுத்து உயிரைக் காப்பாற்றுகின்றனர். இன்ஸ்பெக்டர் மனம் மாறித் திருந்துகிறார் . ஆனால் அதை நம்ப சப் இன்ஸ்பெக்டர் மறுக்கிறார் . தவிர நடக்கும் சில சம்பவங்களால் , இன்ஸ்பெக்டர் தொடர்ந்து அயோக்கியத்தனம் செய்வது போலவே தோன்றுகிறது சப் இன்ஸ்பெக்டருக்கு.

ஒரு நிலையில் எம் பி பெரியண்ணன் , நேர்மையான சப் இன்ஸ்பெக்டர் இருவரின் பகைக்கும் ஆளாகிறார் திருந்திய இன்ஸ்பெக்டர் . இதன் உச்சமாக பெரியண்ணனின் உதவியோடு இன்ஸ்பெக்டராக பதவி உயரும் சப் இன்ஸ்பெக்டர் , அதற்கு பரிகாரமாக திருந்திய இன்ஸ்பெக்டரை உயிரோடு எம் பி பெரியண்ணன் மற்றும் அவரது கொலை வெறிக் கோஷ்டியிடம் ஒப்படைக்க……அடுத்து என்ன நடந்தது என்பதே கதம் .. கதம் !

kadham kadhamஅயோக்கிய இன்ஸ்பெக்டராக நடித்து இருக்கும் நட்டியின் அறிமுகக் காட்சிகள் , கேரக்டரைசேஷன் , போன்றவை போரடிக்காமல் இருக்கின்றன . நடிப்பு, வசன உச்சரிப்பு இரண்டிலும் அசத்துகிறார் நட்டி . நேர்மையான ஸ்மார்ட் ஹீரோவாக அழுத்தமாக முத்திரை பதிக்கிறார் நந்தா .

சனம் ஷெட்டி , மோனிகா இருவரும் ஜஸ்ட் ஒகே . சைய சைய பாட்டில் வித்தியாசமான நடன அசைவுகளால் கவர்கிறார் தாரிகா. பெரியண்ணனாக நடித்து இருப்பவரின் குரலே மிரட்டலாக இருந்து, அந்த கேரக்டர் மேல் கவனம் குவிக்கச் செய்கிறது . .

யூ கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு எக்ஸ்ட்ரா கமர்ஷியல் குணாதிசயத்தை தருகிறது . (இது பாராட்டுதான்).

படத்தின் முதல் பாதி முழுக்க ராதா கிருஷ்ணன் – நிமேஷ் இருவரும் எழுதி இருக்கும் வசனங்கள் அட்டகாசம் . வசனங்கள் மட்டுமல்ல .. மக்களாட்சி , கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ளிட்ட சில படங்கள் ஞாபகம் வந்தாலும் கூட, திரைக்கதையில் பல காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன . அதே ஜோரில் இரண்டாம் பாதியும் போயிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .

நேர்மையான சப் இன்ஸ்பெக்டர் நந்தா அயோக்கிய இன்ஸ்பெக்டரான நட்டியைப் பழிவாங்க , அவரை விட பெரிய கிரிமினலான பெரியண்ணனோடு கூட்டணி போடுகிறார் என்பதெல்லாம் … அச்சச்சோ ! மாபெரும் கதாபாத்திரச் சீர்குலைப்பு .

கிளைமாக்சையும் இன்னும் கூர்மையாக தெளிவாக அமைத்திருக்கலாம் .

கதம்… கதம் ….அடி உதை

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →