துவாரகா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெங்கடேஷ் , சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பவ்யா த்ரிகா நடிப்பில் தினேஷ் பழனிவேல் எழுதி இயக்கி இருக்கும் படம் கதிர் .
கல்லூரியில் படித்து விட்டு கிராமத்தில் நண்பர்களுடன் குடித்துக் கூத்தடித்துக் கொண்டிருக்கும் இளைஞன் (வெங்கடேஷ்) , ஒரு நிலையில் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு சென்னை வருகிறான். சென்னையில் வாடகை வீட்டில் வாசித்தபடி தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும் தன் நண்பனோடு தங்கி வேலை தேடத் திட்டமிடுகிறான் .
வந்த இடத்தில் ஒண்டிக்கட்டையான , கண்டிப்பான வயதில் மூத்த – வீட்டு உரிமையாளப் பெண்மணியின் (ரஜினி சாண்டி) கோபத்துக்கும் பிறகு அன்புக்கும் பாத்திரமாகிறான்.
ஒரு வேலையும் கிடைக்க அங்கே அவனுக்கு முதல் நாளே ஒரு அதிர்ச்சி . மனமுடைந்து வேலையை விட முடிவு செய்யும்போது, அவனைத் தேற்றும் அந்த பெண்மணி தனது வாழ்வின் அதிர்ச்சிகளைச் சொல்கிறார் .
உழைக்கும் மக்களுக்காக போராடி முதலாளித்துவ கோரப் பற்களை பிடுங்க முயன்ற பொதுவுடமைப் போராளியோடு (சந்தோஷ் பிரதாப்) அவருக்கு இளம் வயதில் இருந்த காதலும் தியாகமும் விவரிக்கப்படுகிறது .
அது அவனை எப்படி மாற்றியது , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த கதிர் .
மிக எளிமையாக அதே நேரம் நீளமான காட்சிகளோடு துவங்கும் படம், நாயகன் சென்னை வந்ததும் சிறப்படைகிறது. வீட்டு உரிமையாளர் பெண்மணிக்கும் நாயகனுக்குமான மோதல் பிறகு நட்பில் சற்றே யதார்த்தம் குறைவு என்றாலும் கூட , முற்றிலும் புதிய அந்த கதைப் போக்கு அட என்று ஈர்க்கிறது. படத்தில் முதலில் கவரும் அம்சம் இதுதான் .

படத்தின் இன்னொரு அடடே ஆச்சர்யம் வீட்டு ஓனர் பெண்மணியாக நடித்துள்ள ரஜினி சாண்டி . ஒரு சில காட்சிகளில் வந்து போகும் கதாபாத்திரம் போல ஆரம்பித்து கடைசி வரை தொடரும் அந்த அதிமுக்கியக் கதாபாத்திரத்தில் கவனமாக லாவகமாக உற்சாகமாக நடித்து அந்தக் கதாபாத்திரத்தை அழகாகத் தாங்கி இருக்கிறார் ரஜினி. அந்தக் கதாபாத்திரத்தின் இளம் வயதுப் பெண்ணாக நடித்திருப்பவரும் சிறப்பு .
அழகான இளம் கதாநாயகியோடு (பவ்யா த்ரிகா ?) வரும் அந்த காதல் கதையும் சற்றே நீளம் என்றாலும் பரவாயில்லை ரகமாக அமைகிறது .
வீட்டு உரிமையாளர் பெண்மணியின் இளம் வயதுக் கதை பொதுவுடமை பேசுகிறது. (அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயத்துக்கு அது எப்படி சென்னைக்கு வந்து சொந்த வீடு வாங்கி நிரந்தரத் தங்கலுக்கு ஆளாகி இருக்கும் என்ற கேள்வி மட்டும் துரத்துகிறது.) ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன் கவனிக்கப்படும் பகுதி இது . அந்தக் காட்சிகளில் வண்ணச் சாயல், கலை இயக்கம், உடைகள் யாவும் மிக அருமை .
சுதந்திரத்துக்குப் பின்னான தமிழக வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வான கீழ வெண்மணி படுகொலைகளை அடிப்படையாக கொண்டு அந்த இளம் வயதுக் கதையை அமைத்துள்ளார் இயக்குனர் . ஆனால் மிக மேம்போக்கான பட்டும் படாத மாதிரியான காட்சிகளால் அது சாதாரண கதைப் போக்காக பலம் இழக்கிறது. படத்தில் குறிப்பிடும் வருடம், நெல் – பணம், இப்படி சில குறியீடுகளை வைத்தே நாம் அது கீழ வெண்மணி படுகொலையின் பிரதிபலிப்பு என்று புரிந்து கொள்ள முடிகிறது .
அந்தப் பகுதியை மட்டும் அழுத்தமாக – உண்மைக்கு நெருக்கமான – இப்போது கொண்டாடப் படும் தலைவர்கள் எல்லாம் அப்போது நடத்திய மாய்மால நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அமைத்து இருந்தால் இந்தப் படம், சும்மா தெறிக்க விட்டிருக்கும். (கீழ வெண்மணி என்று ஒரு படமே தமிழில் வந்திருக்கிறது என்பது வேறு விசயம்)
பொதுவாகவே படம் முழுக்கவே எளிதில் யூகிக்க முடிந்த காட்சிகள் , திருப்பங்கள்.
கதாநாயகன் நண்பர்களோடு கிராம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்து, தடைகளை உடைத்து போராடும் அந்தப் பகுதியில் எழுதி இயக்கி இருக்கும் இயக்குனர் தினேஷ் பழனிவேல் பாராட்டுப் பெறுகிறார் . அவரது பொது உடமை சிந்தனைக்கும் வாழ்த்துகள் . பாராட்டுகள். போற்றுதல்கள்.
இன்னும் கொஞ்சம் சிறப்பான திரைக்கதை, உண்மைகளுக்கு நெருக்கமான விவரணைகள் , படத் தொகுப்பு , துணை நடிக நடிகையரிடம் வேலை வாங்குதல் இவற்றில் கவனம் செலுத்தி இருந்தால் படம் மிகப் பிரம்மாதமாக வந்திருக்கும் .
இப்போதும் பரவாயில்லை . சிறப்பு