ரஃப் நோட் நிறுவனம் சார்பில் பரத் சீனி , விஜய் மில்டன் இருவரும் தயாரிக்க, நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் வெளியிட,
பரத், ராஜ குமாரன் , ராதிகா பிரசித்தா , சுபிக்ஷா, இயக்குனர் வெங்கடேஷ் நடிப்பில்
கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து விஜய் மில்டன் இயக்கி இருக்கும் படம் கடுகு . காரம் எப்படி? பார்க்கலாம் .
புலியாட்டக் கலைஞரும் உச்ச பட்ச நேர்மையாளருமான புலிப் பாண்டி (ராஜ குமரன்), புலியாட்டத்துக்கு ரசிப்பாதரவு குறைந்து போன நிலையில் நொடித்துப் போய் ,
ஒரு பிரச்னையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு (இயக்குனர் வெங்கடேஷ்) பரிச்சயமாகி, அவருக்கு எடுபிடி உதவியாளரா க மாறி அவருடனேயே இருந்து விடுகிறார். .
தரங்கம்பாடிக்கு இன்ஸ்பெக்டர் மாற்றல் ஆகிப் போக, அங்கும் அவர் கூடவே போகிறார்.
தரங்கம்பாடியின் நகர் மன்றத தலைவரும் சொந்தக் காசில் ஊருக்கு நல்லது செய்பவருமான ஒரு பாக்சரின் (பரத்) பரிச்சயம் இன்பெக்டருக்கு கிடைக்கிறது .
தரங்கம்பாடியில் ஒரு பிரச்னை காரணமாக ஸ்டேஷனுக்கு வந்து அப்படியே காவல் நிலையத்தில் நிரந்தர பெட்டி கேஸ் கைதி ஆகி , அங்கேயே தங்க ஆரம்பித்து விட்ட ஒருவனுக்கும் புலிப்பாண்டிக்கும் நட்பு ஏற்படுகிறது .
பெட்டி கேஸ் ஆள் ஓர் இளம்பெண்ணை (சுபிக்ஷா) ஒருதலையாய் விரும்புகிறான் .. அதற்கு புலிப்பாண்டி உதவுகிறார் .
பெட்டி கேஸ் காதலன் அந்தப் பெண்ணுக்கு அனுப்பிய ஒரு பரிசு , ஒரு விபத்தாக பாக்ஸர் மூலம் அந்த பெண்ணுக்குப் போக அவளுக்கும் பாக்சருக்கும் காதல் வந்து விடுகிறது .
சிறு வயதில் அநியாயமாக பாலியல் புகார் சொல்லப்பட்டு விபச்சாரிப் பட்டம் கட்டப் பட்டு ஊடகம் மூலம் ஊர் அறிந்த செய்தியான ஒரு பெண் (ராதிகா பிரசித்தா)
முன் பின் அறியாத தரங்கம்பாடிக்கு வந்து பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறாள் . ஆசிரியைக்கும் புலிப்பாண்டிக்கும் இடையில் நற்பண்புகளால் கவரப்பட்ட காதல் வருகிறது.
இதற்கிடையில் பாக்சரின் சாதிக்கார அமைச்சர் ஒருவரின் பி ஏ மற்றும் ஊர் நபர்கள் மூலமாக பாக்சருக்கு எம் எல் ஏ பதவி ஆசை உருவாக்கப்படுகிறது .
அமைச்சர் பாக்சரின் வீட்டுக்கு வருகிறார் . புலிப்பாண்டியின் புலியாட்டம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரவேற்கப்படும் அமைச்சர், போதையில் ஒரு கேவலமான செயலை செய்கிறார் .
அந்த கேவலத்துக்கு ஆளாகும் நபரைக் காப்பாற்ற ஆசிரியை முயல்கிறார் . அந்த முயற்சியில் புலிப்பாண்டியும் ஈடுபடுகிறார். இதனால் புலிப்பாண்டிக்கும் பாக்சருக்கும் பகை வருகிறது .
நேர்மையான இன்ஸ்பெக்டர் மாற்றல் ஆகிப் போகிறார் .புதிதாக வரும் இன்ஸ்பெக்டரின் பாக்சரின் கொடூர அடியாளாக இருக்கிறார் .
ஆள் பலம், பண பலம், அதிகார பலம் , உடல் பலம், வஞ்சக அறிவு பலம் என்று எல்லாம் கொண்ட பாக்சருக்கும் , எளிய , குட்டையான , வறிய புலிப்பாண்டியும் மோதிய போது நடந்தது என்ன என்பதே இந்தக் கடுகு .
இதுவரை தமிழ் சினிமாவில் பாட்டிலோ சண்டையிலோ காமெடியிலோ அல்லது பயமுறுத்தவோ ஓரிரு காட்சியில் மட்டும் வந்து போகும் புலியாட்டக்காரன் கதாபாத்திரத்தை,
படம் நெடுக வருமாறு கொண்டு வந்த விஜய்மில்டனுக்கு சபாஷ் .
ஒரு முதியவர் எல்லோரையும் அடித்து வீழ்த்துவதை லாஜிக்காக காட்ட இந்தியன் ஷங்கர் வர்மக் கலையை பிடித்தார் அல்லவா ?
அதே போல எல்லாவித பலங்களும் கொண்ட பாக்சரின் இடுப்பளவு உயரம் மட்டுமே வரும் பாண்டி அவனை எதிர்ப்பதை லாஜிக் செய்ய புலியாட்டத்தைப் பிடித்த விதம் சபாஷ் போட வைக்கிறது .
ஆனால் அந்த கேரக்டருக்கு ராஜ குமாரனை கொண்டு வந்து அவ்வளவு பொருத்தமாக நடிக்கப் போட்டார் பாருங்கள் . அங்கேதான் நிற்கிறார் விஜய் மில்டன் .
பொதுவில் ஹீரோவாக நடிக்க செட் ஆகாத ராஜ குமாரனின் குரலும் பேச்சும் இந்த கேரக்டருக்கு மட்டும் அச்சு அசலாக பொருந்துவது ஒரு மேஜிக்.
இவை இரண்டுக்கும் மகுடம் சூட்டுகிறது விஜய் மில்டனின் வசனங்கள்.
“ஒரு கலை அழியும்போதே அந்தக் கலைஞனும் அழிஞ்சு போய்டணும் “
“ஆமா…. நான் புளூ பிலிம்லதான் நடிக்கிறேன்’னு சொல்லிக்கிட்டு வெளிய வர பொண்ணப் பார்த்து ‘சன்னி லியோன் வாழ்க’ன்னு கோஷம் போடறீங்க .
ஆனா அநியாயமா அவதூறுக்கு ஆளாகிற பெண் உண்மைய சொல்லிக் கதறினா மட்டும் ஏன்டா கேலி பேசியே கொல்றீங்க?”
“சாப்ட்டியா நல்லா இருக்கியான்னு கேட்க, நிறைய பேருக்கு கண் முன்னாடி ஆளே இல்ல. அதான் அப்படி கேட்க ஆள் வர்ற பேஸ்புக் சக்கை போடு போடுது “
இப்படி படம் முழுக்க ஒரு வசன ராஜாங்கமே நடத்துகிறார் .
அதுவும் கிளைமாக்சில் வரும் ” நம்மள பத்தி மத்தவன் என்ன நினைக்கிறான் என்பது முக்கியம் இல்ல . கண்ணாடி முன்ன நிற்கும்போது நாம என்ன நினைக்கிறோம் என்பதுதான் முக்கியம் ” என்ற வசனம்…..
சரியான ஒருவனை கூடி நின்று பின்னால் பேசி கேலி செய்து கிண்டல் செய்யும் அற்ப மனிதர்களை செருப்பால் அடிக்கும் இந்த வசனம் ….. கிளைமாக்சுக்கே கிளைமாக்ஸ் ஆக ஜொலிக்கிறது .
பின்னணி இசையே இல்லாத மரண வீட்டு சோகம், கை பிடித்தல் மூலம் ஆள் அறிய வைப்பது உள்ளிட்ட காட்சிகளில் இயக்குனர் விஜய் மில்டன் கவனம் கவர்கிறார்
முதல் பாதியில் விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் அபாரமோ அபாரம் . இரண்டாம் பகுதி அபாரம்
அனூப் சீலின் கொடுத்து இருக்கும் பின்னணி இசை ஆங்காங்கே நெகிழ்த்துகிறது .
ராஜ குமாரனுக்கு இது லைஃப் டைம் கேரக்டர் . பாராட்டுக்கள் . இதுபோல அவருக்கு ஏற்ற கதைகளைப் பிடித்தால் நல்லது . (அவருக்கு மட்டுமல்ல . ரசிகர்களுக்கும் )
நல்லவனும் சுயநலத்துக்காக சோரம் போகிறவனுமாகிய பாக்சர் கேரக்டரில் தூள் ‘பரத்’தியிருக்கிறார் என்றே சொல்லலாம் .
பாலியல் பழி ஆசிரியை கேரக்டரில் குற்றம் கடிதல் பிரசித்த ராதிகா பிரசித்தா , வித்தியாச சித்திரமாக ஜொலிக்கிறார் .
சுபிக்ஷா நேர்ந்து விடப்பட்ட ஆட்டுக் குட்டி போல அந்த வழியே திரிகிறார் அவ்வளவுதான் .
இன்ஸ்பெக்டராக வரும் வெங்கடேஷ் , பெட்டி கேஸ் நண்பன் இருவரும் சூப்பர்.
இரண்டாவதாக வரும் இன்ஸ் மிரட்டுகிறார் .
பாக்சரின் பாட்டி கேரக்டரில் சம்திங் மிஸ்ஸிங் .
புலியாட்டம்…. அந்த கலையின் வீரம்,, அதில் உள்ள உத்திகள் , அதை ஆடுபவனின் பலம் இவைதான் படத்தின் கரு. அப்படி இருக்க முதன் முதலாக ராஜ குமாரன் புலியாட்டம் ஆடும் காட்சி,
சும்மா ஒரு பட்டையை கிளப்பும் பாட்டோடு திரையை தெறிக்க விட்டிருக்க வேண்டாமா?
‘கெட்டவங்களோட மோசமானவங்க தப்பு நடக்கும்போது தடுக்காத நல்லவங்கதான் ‘என்பதுதான் படத்தின் அடிநாதமான மெசேஜ் . ஆனால் அந்த மெசேஜுக்கு கிளைமாக்ஸ் உண்மையாக இருக்கிறதா ?
நாளைக்குக் காலை பத்து மணிக்கு ராஜ பக்சேவை கருணா , கத்தியால் குத்தி விட்டால் , துரோகி கருணா ஹீரோ ஆகி விடுவாரா ?
பாதிக்கப்பட்டவன் மன்னித்தாலும் மனம் திருந்திய குற்றவாளி, தான் செய்த தப்பை ஊரறிய ஒத்துக்கிட்டாதானே பாஸ் அவன் ஹீரோ ?
அத்தனை வருடமாக அவ்வளவு பழிகளையும் அநியாமாகத் தாங்கி தன்னை தற்காத்துக் கொண்ட ஒரு பெண்மைக்கு அந்த சீரழிவு தேவையா ? அதனால் திரைக்கதைக்கு என்ன பலம் / பலன்?
இப்படி சில கேள்விகள் வருவது கூட படம் மனதை ஈர்ப்பதால்தான் . .
மொத்தத்தில் கடுகு ….. உத்தியில் ஆங்காங்கே சிறுத்தாலும் உணர்வில் ஆக்கபூர்வமான காரம்
மகுடம் சூடும் கலைஞர்
———————————