ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் , தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் க்ராஸ்ரூட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க….. ஐஸ்வர்யா ராஜேஷ், குழந்தை நட்சத்திரங்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து மணிகண்டன் இயக்கி இருக்கும் படம் காக்கா முட்டை .
ரொம்ப நாளாக வெள்ளித்திரையில் தென்படாத சிம்பு இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். குழந்தை நட்சத்திரங்களான ரமேஷ் மற்றும் விக்னேஷ் இருவரும் இந்தப் படத்துக்காகத்தான் தேசிய விருதுகள் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வேதச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது…. 62வது தேசிய விருத்துக்கான பட்டியலில் இரண்டு தேசிய விருதுகளை வென்றது…. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது, பார்வையாளர்களின் தேர்வு, சிறந்த நடிகர்களுக்கான கிராண்ட் ஜூரி விருது என மூன்று விருதுகளை வென்றது … இப்படி பல விருதுகளை வென்ற இந்தப் படத்தைப் பார்த்தபோது….
நமக்கு வருத்தமே வந்தது .
காரணம் இந்தப் படத்துக்கு இன்னும் பல விருதுகள் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் . அப்படி ஓர் அற்புதமான திரை அனுபவமாக இருக்கிறது காக்கா முட்டை .
சென்னையில் கூவத்தை ஒட்டி இருக்கும் ஒரு சேரிப்பகுதி . மறுபக்கம் நீண்ட ரயில்வே டிராக்குகள் , அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை, வறுமை, உறவு, பாசம், தன்மானம், சில்லுண்டிக் குற்றங்கள், அங்கே நிகழும் அரசியல், காசைத் தண்ணீராக இறைக்கும் மேற்கத்திய கலாச்சாரத்தின் பளபளப்பில் கண் கூசி மயங்கும் அவர்களின் ‘தினசரி சில ரூபாய்கள் வருமான ‘ வாழ்க்கை … இந்த வேறுபாட்டில் கசங்கும் உள்ளங்கள் … இவையே இந்தப் படம் .
கணவன் ஜெயிலில் இருக்கும் நிலையில் அவனை மீட்கப் போராடும் ஏழைப் பெண் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் . உடன் இருக்கும் , வயதான, பாசமான மாமியார். பத்து வயதுக்கு உட்பட்ட இரண்டு மகன்கள் . (ரமேஷ் மற்றும் விக்னேஷ்) கூடவே அந்த வீட்டில் தானும் ஒரு அங்கத்தினராக வாழும் ஒரு குட்டி நாய்.
சாப்பிடும் சோற்றில் கொஞ்சம் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு போய், ஒரு மரத்தின் கீழ் வைத்து, அதை காக்கா சாப்பிட வரும்போது மரத்தில் ஏறி கூட்டில் இருக்கும் காக்கா முட்டைகளை குடிப்பது அந்த இரண்டு சிறுவர்களின் பொழுதுபோக்கு . அதிலும் நேர்மை உண்டு . எல்லா முட்டைகளையும் குடிக்க மாட்டார்கள் . காக்கை மீது உள்ள பாசத்தால் குஞ்சு பொறிக்க சில முட்டைகளை விட்டு விடுவார்கள் . இவர்களுக்குப் பெயரே சின்ன காக்கா முட்டை , பெரிய காக்கா முட்டை என்பதுதான்
கடக்கும் கூட்ஸ் ரயில் வண்டிகளில் இருந்து சிதறும் நிலக்கரித் துண்டுகளை பொறுக்கிச் சேர்த்து எடை போட்டு, தினமும் ஐந்து ரூபாய் சம்பாதிப்பதே அந்த சிறுவர்களின்வாழ்வாதாரத் தொழில் .
அதே வயசு சர்வர் சிறுமியர் அடங்கிய எதிரிக் குழு ஒன்றும் அவர்களுக்கு உண்டு . ரேஷனில் அரிசி ஸ்டாக் இல்லை என்பது பற்றிக் கூட கவலை இல்லாமல் இலவச தொலைக்காட்சிப் பெட்டியை ஒன்றுக்கு இரண்டாக ரேஷன் கார்டு அடிப்படையில் வாங்கி வைத்துக் கொண்டு, டிவி பார்த்துப் புல்லரிக்கும் அறிவு மயக்கமும் அவர்களுக்கு உண்டு .
தாங்கள் உண்டு ; தங்கள் வாழ்க்கை உண்டு….தங்கள் வறுமை உண்டு; வாழ்க்கை உண்டு…. சங்கடம் உண்டு; சந்தோசம் உண்டு என்று வாழ்ந்து வரும் அந்த சிறுவர்கள் வாழ்வில் ஒரு திருப்பம் வருகிறது .
வழக்கமாக அவர்கள் காக்கா முட்டை குடிக்கும் மரம் இருக்கும் ஐந்து கிரவுண்டு நிலத்தை வாங்கும் ஒருவர், அங்குள்ள மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளி அந்தக் காக்கைகளை அனாதையாக்கி விட்டு, அந்த இடத்தில் பிரம்மாண்டமான கவர்ச்சிகரமான பிட்சா கடை வைக்கிறார் . மரக் கிளைகள் இருந்த இடத்தில் பிட்சா உணவகத்தின் கிளை !
இலவச தொலைக்காட்சிப் பெட்டியில் அந்த சிறுவர்கள் பார்த்து ரசிக்கும் நடிகர் சிம்பு அந்தக் கடையைத் திறக்க வர , எல்லோரும் அங்கே போய் சிம்புவைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். சிம்பு போனதும் பிட்சாவின் நிறமும் வடிவமும் அந்த வண்ணங்களும் அவர்களை ஈர்க்கின்றன.
ஒரு முறை பிட்சா டெலிவரி பாய் வழி மாறி சேரிக்குள் வந்து அட்ரஸ் தெரியாமல் விழிக்க , அவன் மூலம் பிட்சாவை முகர்ந்து பார்க்க மட்டும் வாய்ப்புக் கிடைக்க, அந்த வாசமும் சிறுவர்களை ஈர்க்கிறது . ஆனால் விலையோ 300 ரூபாய் . அவர்களது அர்ர்ரர்ர்ர்ர்றுபது நாள் வருமானம் . !
இப்போது அவர்கள் தினசரி வருமானமாக தரும் ஐந்து ரூபாய்களும் அம்மாவின் உழைப்பும் சேர்ந்துதான் , அப்பாவுக்கு ஜாமீன் வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் வக்கீலுக்கு ஃபீஸ் ஆகப் போய்க் கொண்டிருக்கிறது.
சிறுவர்கள் பாட்டியிடம் விஷயத்தை சொல்ல, அவர் தோசை மேல் , தக்காளி, குடை மிளகாய் எல்லாம் அரிந்து போட்டு பீட்சா வடிவத்தில் தோசை செய்து கொடுத்தும் அது சிறுவர்களுக்கு பிடிக்கவில்லை. பிட்சா ஆசை விடவில்லை.
ரயில்வே டிராக் லைன்மேனான பழரசம் (ஜோ மல்லூரி) என்ற நபருடன் இவர்களுக்கு உள்ள நட்பு இங்கே உதவிக்கு வருகிறது. இவர்களின் ஏக்கமும் பழரசத்தின் மனதை இளக்குகிறது . எனவே நிலக்கரி கொட்டி வைக்கப்பட்டு இருக்கும் அறையை இந்த சிறுவர்களுக்கு பழரசம் திறந்து விட , அதை வைத்து பிட்சா வாங்கத் தேவையான முன்னூறு ரூபாயை சீக்கிரம் சம்பாதிக்கிறார்கள்.
வீட்டுக்கு என்று சரியான அட்ரஸ் இல்லாத காரணத்தால் பிட்சா கடைக்கே போய் சாப்பிட முடிவு எடுக்கிறார்கள். அங்கே போனால் இவர்கள் கிழிந்த உடையைப் பார்த்து வாட்ச் மேன் உள்ளே விட மறுக்கிறான் . காரணம் இவர்களது அழுக்கான உடை.
ஒரு பணக்கார குடியிருப்பின் கேட் உள்ளே வழக்கமாக நின்றபடி , பிளாட்பாரத்தில் நிற்கும் இவர்களிடம் அடிக்கடி பேசும் ஒரு பணக்கார சிறுவன் போட்டு இருக்கும் சட்டை சகோதரர்கள் இருவரையும் கவர, அதை வாங்கிய இடம் மைலாப்பூர் சிட்டி சென்டர் என்று அறிந்து , தங்கள் புத்திசாலித்தனதால் உடை பெற்று , மீண்டும் பீட்சா கடைக்குள் நுழைந்தால்…..
அவர்கள் சேரிப் பையன்கள் என்பதை ஞாபகம் வைத்திருக்கும் வாட்ச்மேன் உள்ளே விட மறுக்க , பெரிய காக்கா முட்டை காரணம் கேட்க , உள்ளே இருந்து வரும் மேனஜர் பெரிய காக்கா முட்டையை ஓங்கி அறிகிறான் . உலகமே சில நொடிகள் சைலன்ட் ஆகிறது.
இவர்களது எதிர் குரூப் சிறுவன் ஒருவன் அதை வீடியோ எடுக்க, அந்த வீடியோவைப் பார்த்த சேரி இளைஞர்கள் இருவர் அந்த வீடியோவை வைத்து பிட்சா கடைக்காரனிடம் பணம் பிடுங்க முயல , கடைக்கார்கள் தொகுதி எம் எல் ஏ வின் உதவியை நாட, அதற்குள் அது சன் டிவியில் ஒளிபரப்பாகி விட ….
அதன் பின் நடக்கும் அரசியல் , அதிகார வர்க்க , மீடியா உலக , மற்றும் பொது ஜனத்தின் அறிவர்ந்த ரவுடித்தனமான , கொடுமையான, மடமையான , சுயநலமான, யதார்த்தமான , நகைச்சுவையான , விரக்தியான , வருத்தமான , நெகிழ்ச்சியான , எதுவும் மாறாத செயல்பாடுகளின் பொக்கிஷக் குவியலே இந்தப் படம் .
எந்தச் சார்பிலும் சாயாமல் பொதுவாக இருந்து எல்லாக் குழு மக்களின் கதாபாத்திரங்களையும் தீர்மானித்து , நிர்மாணித்து , நிர்வகித்து கதை திரைக்கதை அமைத்து …. அதை சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இயக்கி…. அதி முக்கியமாக அப்படி ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைத்து…..
அதிலும் முக்கியமாக அந்த சிறுவர்களிடம் பிரமிப்பூட்டும் வகையில் அதி அற்புதமாக வேலை வாங்கி இருக்கும் மணிகண்டன் …… இந்த ஆண்டில் தமிழ் சினிமா கண்டெடுத்து இருக்கும் கலை வைரம் !
வறுமையிலும் சந்தோசம் என வாழ்க்கையை இயல்பாய் எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரங்கள் …. மாமியாரை தாயாக நினைக்கும் மருமகள்…… மகனை விட மருமகளை நேசிக்கும் மாமியார்…. முட்டை உடைத்து குடித்தாலும் காக்கைக்கும் குஞ்சு பொரிக்க முட்டை வைத்து வரும் சிறுவர்களின் மன சாட்சி….. ஒரு பிட்சா தின்னும் ஆசையில் உறவாய் வளர்க்கும் நாயையே விற்க முன் வரும் சிறுவர்களின் பிட்சா வெறி….
அதே நேரம் பணக்காரப் பையன் தான் தின்று வைத்த மிச்ச பிட்சாவை கொடுக்கும்போது அதை வாங்கித் தின்ன இடம் கொடுக்காத அவர்களது தன்மானம் … இரண்டு சிறுவர்களின் எளிய ஆசையை ஒரு சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள மனிதர்களும் நிறுவனங்களும் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சொல்வதில் இருக்கும் தெளிவான சமூக அரசியல் பார்வை ….
உங்களிடம் தமிழ் சினிமா நிறைய எதிர்பார்க்கிறது மணி கண்டன்!.
நாலடிக்கு நாலடி வீட்டுக்குள் இருந்து கிளம்பும் கேமரா நகர்ந்து, பின்வாங்கி . பின் எழுந்து உயர்ந்து , விரிந்து , சுழன்று , ஒட்டு மொத்த சேரிப் பகுதியையும் விழுங்கிப் பிரதிபலிக்கும் காட்சியில் அந்த ஒரே ஷாட்டில் திரைக்கதை ஆசிரியர் , ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று எல்லா வகையில் சென்டம் வாங்குகிறார் மணிகண்டன் .
“இது என்ன புட்டா அப்படியே வருது . பிட்சாவுல நூல் நூலா வருமே ….?”
“கெட்டுப் போனாதான்டா நூல் நூலா வரும் ……”
— இது போன்ற வசனங்கள் மூலம் ஒரே நேரத்தில் நகைச்சுவையையும் சட்டயரையும் கலந்து கொடுக்கும் நேர்த்தியை பாராட்ட வார்த்தைகள் இல்லை .
குடிகாரனை வீட்டில் சேர்ப்பதற்கு பத்து ரூபாய் பணம் கிடைக்க அதையே தொழிலாக மாற்ற முயலும் அவர்கள் உத்தியும் அது நகைச்சுவையாக முடியும் விதமும் மணிகண்டனின் கண்ணியமான கமர்ஷியல் சினிமா அறிவுக்கு ஒரு பருக்கைப் பதம்.
காக்கா முட்டை சகோதர்களின் எதிரிக் குழு சிறுவர்கள் , ரயிலில் வாசலின் நின்றபடி செல்போனில் பேசிக் கொண்டு போகும் நபர்களின் கையில் ஓங்கி அடித்து செல்போனை விழச் செய்து பணம் ஈட்டிப் பிழைக்க…..
பிட்சா சாப்பிடும் ஆசையில் அதே வேலை செய்ய முடிவு செய்து கையில் தடியோடு நிற்கும் பெரிய காக்கா முட்டை , ரயில் வரும் நேரத்தில் அப்படி செய்ய மனம் இல்லாத நல்ல பிள்ளையாக திரும்பும் அந்த கேரக்டரைசேஷன் வெளிப்பாடு ….
இன்றைய சமூகத்திற்கு அவசியம் சொல்லப்பட வேண்டிய ஒரு அறிவுரை !
பணக்கார வீட்டுப் பையன் கையில் வைத்திருக்கும் குட்டி நாயின் விலை 25000 என்று கேள்விப்பட்டதும் , தங்கள் வீட்டில் உள்ள நாயை ஆட்டோக்காரர் ஒருவரிடம் விற்க முயல , அவரும் விலை கேட்கும்போது 25000 என்று விலை சொல்லி, அந்த சிறுவர்கள் ஆட்டோ டிரைவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் அந்தக் காட்சியில் நிலம் அதிர வெடிக்கிறது யதார்த்த நகைச்சுவை
கோபத்தில் அவர்கள் நாயை அங்கேயே விட்டு விட்டு மெதுவாக வீட்டுக்கு வர, பாட்டி இறந்து விட , அவர்களுக்கும் முன்பே அங்கே நாய் வந்து படுத்துக் கிடக்கும் காட்சியில், வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளை சொல்ல முயல்கிறார் மணிகண்டன்.
யோகி பாபுவின் காமெடியும் சும்மா பின்னிப் பெடல் எடுக்கிறது .
ஜி வி பிரகாஷ் குமாரின் இசை மறைபொருளாக இருக்கும் சின்ன சின்ன உணர்வுகளை கூட பலப்படுத்திப் படைக்கிறது .
மறைந்த படத் தொகுப்பாளர் அமரர் கிஷோரின் படத்தொகுப்பு படத்தை ஜல்லிக்கட்டுக் காலை போல சீறிப் பாய வைக்கிறது
அந்த சிறுவர்களின் மந்திர நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை . அவர்களுக்கு விருது கிடைத்தது நியாயமான விஷயம் . ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் , மணிகண்டனின் திரைக்கதைக்கும் மட்டுமாவது இன்னும் இரண்டு தேசிய விருதுகள் கண்டிப்பாகத் தரப்பட்டிருக்க வேண்டும்.
காக்கா முட்டை …. பொன் முட்டை
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————–