அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கேத்தரின் தெரசா, ராதா ரவி , யோகி பாபு, ரோபோ ஷங்கர்,மனோபாலா நடிப்பில்,
வேங்கட் ராகவன் திரைக்கதைக்கு பத்ரி வசனம் எழுத சுந்தர் சி கதை எழுதி இயக்கி இருக்கும் படம் கலகலப்பு 2. படம் கலகலக்க வைக்குமா? லகலகக்க செய்யுமா? பார்ப்போம் .
தமிழக அமைச்சர் ஒருவரின் (மது சூதனன்) சொத்துகள் அடங்கிய லாப் டாப்பை திருடிக் கொண்டு காசி போகும் ஆடிட்டர் ஒருவர் ( முனீஸ்காந்த் ராமதாஸ்) அஞ்சு கோடி கொடுத்தால் லேப் டாப்பை தருவதாக சொல்ல,
பணத்தைக் கொடுத்து லேப் டாப்பை வாங்கி வர ஒரு போலீஸ் அதிகாரியை (ராதாரவி) காசிக்கு அனுப்புகிறார் அமைச்சர் .
தனது முன்னோர் நூறு வருடம் லீசுக்கு விட்ட சொத்து காசியில் இருப்பதை அறிந்த இளைஞன் ( ஜெய்) அதை மீட்க காசி வருகிறான் .
அதை இப்போது லாட்ஜ் ஆக நடத்தி வரும் இன்னொரு இளைஞன் (ஜீவா) விசயம் தெரியாமல் உரிமையாளனையே அங்கே தங்க வைக்கிறான் .
அங்கே இருக்கும் பெண் தாசில்தார் ( நிக்கி கல்ராணி) ,மீது லாட்ஜின் நிஜ உரிமையாளனுக்கு காதல் வருகிறது .
லாட்ஜை இப்போது நடத்தும் வரும் இளைஞனின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கப் போன இடத்தில் அந்த மாப்பிள்ளையின் தங்கை மீது (கேத்தரின் தெரசா ) இவனுக்கு காதல் வருகிறது .
தாசில்தாரின் தமிழ்நாட்டு உறவினர் ஒருவருக்கு (சந்தான பாரதி) பிள்ளை இல்லாத நிலையில் அவர் ஒருவனை (மிர்ச்சி சிவா) மகனாக தத்தெடுக்கிறார் .
அவனோ பண விசயத்தில் லாட்ஜின் நிஜ மற்றும் தற்போதைய உரிமையாளர் இருவரையும் ஏமாற்றியவன்
தத்தெடுக்கும் தந்தையின் பரம்பரை வைரங்களை கொள்ளை அடித்துக் கொண்டு அவன் காசிக்கு வர , அவனை எல்லோரும் துரத்த , ஒரு நிலையில் மேலே சொன்ன அத்தனை கேரக்டர்கள் ,
இவர்களோடு ஒரு போலி சாமியார் ( யோகி பாபு), வைர உரிமையாளரின் மனைவியின் தங்கை (ரோபோ ஷங்கர்) மற்றும் சில கதாபாத்திரங்கள் ஆகியவை கலக்க ,
நடக்கும் சம்பவங்களே இந்த கலகலப்பு 2 .
பார்த்த விசயங்கள்தான் . ஆனால் அதை எல்லாம் ஒரு கோர்வையோடு கோர்த்து பின்னைப் பிணைத்து பின்னல் பின்னி திரைக்கதை அமைத்து இருக்கிறார் வேங்கட் ராகவன்.
அதில் காமெடி கொஞ்சம் காமெடி மாதிரி கொஞ்சம் , பரபரப்பு கொஞ்சம் , சுறு சுறுப்பு கொஞ்சம் , மசாலா கொஞ்சம் எல்லாம் வருகிறது . எல்லா கதாபாத்திரங்களுக்கும் தோதான ஒரு சம்பவமாவது கொடுத்து இருக்கிறார் வேங்கட் ராகவன்.
அதற்கு அதே பாணியில் காமெடி கொஞ்சம் , காமெடி மாதிரி கொஞ்சம் , கொஞ்சம் பலான விஷயம் எல்லாம் கலந்து வசனம் எழுதி இருக்கிறார் பத்ரி .
அதை தனது அனுபவ முத்திரை காரணமாக காமெடி, கலகலப்பு , கிளாமர், கலர் ஃபுல் மற்றும் கலர்ஸ்ஃபுல் எல்லாம் சேர்த்து கண்ணுக்கு குளிர்ச்சியாக இயக்கி இருக்கிறார் சுந்தர் சி
விளைவு ? கலகல என்று போகிறது கலகலப்பு 2 .
காசியின் பின்புலத்தில் கலர் பொடிகள், பூக்கள் படம் முழுக்க ஜாலம் செய்கின்றன , யூ கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு ரிச்னஸ் சேர்க்கிறது .
ஹிப்ஹாப் ஆதி இசையில் பாடல்கள் சுமார் ரகமே. பின்னணி இசையும் பெரிதாக சோபிக்கவில்லை (கேப் இருந்தால் தானே வாசிக்க முடியும்?)
ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் குறை சொல்ல முடியாத அளவில் இருக்கிறது .
சண்டைக் காட்சிகளில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் தளபதி தினேஷ் . சூப்பர்
ஜீவா, ஜெய் , சிவா மூவரும் ஜஸ்ட் லைக் தட் தங்கள் பாத்திரங்களை செய்து இருக்கிறார்கள் . மற்ற பலரும் கூட பண்பட்ட நடிகர்கள் என்பதால் நடிப்பில் ஒன்றும் குறை இல்லை,
இடுப்பு வளைவில் இதய விபத்துகளை நடத்துகிறார் நிக்கி கல்ராணி.
தன்னைத்தானே உரித்துப் போட்டுக் கொண்டு உய்யலாலா பாடுகிறார் கேத்தரின் தெரசா . அடேயப்பா !
சும்மா சம்மந்தமில்லாத காட்சிகளில் கூட பின்னணியில் நாலஞ்சு பெண்களை கண்ணுக்கு குளிர்ச்சியாக நடமாட விடுகிறார் பாருங்கள்… . அங்கே நிற்கிறார் இயக்குனர் சுந்தர் சி .
இப்படியாக காமெடி கொஞ்சம் , கலர்புல் கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் இவற்றை நம்பி களம் கண்டிருக்கிறது கலகலப்பு .