அருள் அப்பளம் உரிமையாளர் பி.கே. சந்திரன் தயாரிக்க, அவரது மகன் சுபிஷ் சந்திரன் கதை திரைக்கதை வசனம் எழுத, ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஜீவா, இதற்குத்தானா ஆசைப்பட்டாய் கோகுல் மற்றும் ஜெய் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ராபர்ட் எஸ் ராஜ் என்பவர் இயக்கத்தில், என் எல் ஸ்ரீனிவாசன்,’சுட்டகதை’ லக்ஷ்மி பிரியா, அம்ஜத், கோலி சோடா மது சூதனராவ் ஆகியோர் நடிக்கும் படம் களம் .
சென்னையில் அடாவடியாய் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் ஒருவரின் நடவடிக்கைகள் பிடிக்காத அவரது மகன், அவரை விட்டு பிரிந்து அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கேயே ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு இருந்து விடுகிறான் . ஆனால் ஒரு நிலையில் அம்மாவின் வற்புறுத்தல் காரணமாக சென்னையில் வசிக்க முடிவு செய்து அமெரிக்காவில் இருந்து வருகிறான்.
அவர்களை தனது வீட்டில் தங்க வைக்க விரும்பாத ரியல் எஸ்டேட் அதிபர், 1920 ஆம் ஆண்டு செத்துப் போன ஒரு ஜமீன்தாருக்கு சொந்தமான ஒரு பழமையான வீட்டை வாங்கி புதுப்பித்து அங்கு மகனையும் மருமகளையும் தங்க வைக்கிறார் . மனைவி குழந்தையுடன் அங்கு வந்த நாள் முதல் அந்த தம்பதிகளுக்கு பல வித்தியாச , விபரீத , வினோத, சம்பவங்கள் நடைபெறுகின்றன . அதற்கான காரணம் என்ன? இதில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு தொடர்பு இருக்கிறதா? நடைபெறும் பிரச்னைகளில் இருந்து அந்த தம்பதிகள் எப்படி மீண்டார்கள் என்பதே இந்தப் படம், என்கிறது பட யூனிட் .
அருள் அப்பளம் நிறுவனத்துக்கு விளம்பரப்படம் எடுத்துக் கொடுத்ததன் மூலம் அந்த நிறுவனத்துக்கு அறிமுகம் ஆனவராம் ராபர்ட் ராஜ் . அருள் மூவீஸ் திரைப்படம் எடுக்க முடிவு செய்த நிலையில், தயாரிப்பாளரின் மகன் சுபிஷ் ஒரு கதையை சொல்ல , “சூப்பராக இருக்கிறது . நீங்களே டைரக்ட் பண்ணுங்க. நான் கூட இருந்து சப்போர்ட் பண்றேன்” என்றுதான் சொன்னாராம் ராபர்ட் ராஜ் . ஆனால் விளம்பரப்படத்தை இயக்கிய பொது ராபர்ட் ராஜின் திறமையைக் கண்டு வியந்த நிலையில் அவரையே இயக்குனராக்கி விட்டார்கள் தயாரிப்பாளர் பி.கே.சந்திரனும் அவரது மகனான கதை திரைக்கதை வசனகர்த்தா சுபிஷ் சந்திரனும் .
“இந்த படத்தின் தன்மை புதுசு . நிச்சயமாக உங்களுக்கு மிக சிறப்பான அனுபவம் தரும் படமாக இருக்கும் . நான் கொடுத்த கதையை மிகக் குறுகிய காலத்தில் மிக சிறப்பாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் . நூற்றி இருபது ரூபாய் கொடுத்து படம் பார்க்கவரும் ரசிகனை ஏமாற்றி விடக் கூடாது என்ற அக்கறையில் சிரத்தையோடு உழைத்து இருக்கிறோம் ” என்கிறார் சுபிஷ் சந்திரன் .
“படத்தில் நீங்கள் பார்த்து வியக்கப் போகும் பங்களா சென்னை சேத்துப்பட்டில்தான் இருக்கிறது . அதை வாடகைக்கு எடுத்து டல் செய்து , பிறகு நவீனமாக்கி பிறகு மீண்டும் இயல்பாக்கி செலவு செய்து படம் எடுத்தோம் . இந்தப் படம் வேகமாக சிறப்பாக குறுகிய காலத்தில் முடிய, ஒளிப்பதிவாளர் முகேஷ், கலை இயக்குனர் செந்தில் ராகவன் நடிக நடிகையர் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பு முக்கியமானது . தொடர்ந்து ஐந்து நாட்கள் கூட வேலை ஓய்வில்லாமல் வேலை செய்து இருக்கிறார்கள் . மறக்கவே முடியாத ஒத்துழைப்பு ” என்கிறார் இயக்குனர் ராபர்ட் எஸ் ராஜ் .
” எங்களது அடுத்த படம் மலையாளப்படம். அதையும் ராபர்ட் எஸ் ராஜ் தான் இயக்குகிறார் ” என்கிறார் தயாரிப்பாளர் பி. கே. சந்திரன்.
படத்தின் ஹீரோ என் எல் ஸ்ரீனிவாசன் . இவரது தந்தை நாச்சியப்பன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் . அவர் தயாரித்த படங்களில் ஒன்றுதான் , கே.பாக்யராஜ் படைப்பில் உருவாகி சாதனை படைத்த அந்த ஏழு நாட்கள் !
சபாஷ் .. அந்த ஒரு களம் என்று பேர் வாங்கும்படி இந்த ஒரு படத்தையும் கொடுங்க கண்ணுகளா!