அருள் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பி.கே.சந்திரன் தயாரிக்க, அவரது மகன் சுபீஷ் சந்திரனின் கதை திரைக்கதை வசனத்தில்,
அம்ஜத், லட்சுமி ப்ரியா, ஸ்ரீனிவாசன், நாசர், பூஜா, நடிப்பில் ராபர்ட் ராஜ் இயக்கி இருக்கும் படம் களம். காணத் தகுந்ததா ? பார்க்கலாம் .
பலவீனமான வாரிசுகளைக் கொண்ட பரம்பரை சொத்துக்களை, போலிப் பத்திரம் தயார் செய்தும் மிரட்டியும் சொந்தமாக்கிக் கொள்ளும் தாதா மதன் (மதுசூதனன்) .
அவரது மகன் கௌதம் (அம்ஜத்) , அப்பா அம்மா (ரேகா சுரேஷ்)வுக்குத் தெரியாமல் , தீக்ஷா (லட்சுமி பிரியா) என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா போய் விடுகிறான் .
மகன் மீது பெற்றோர் படுகோபமாக இருக்க, கௌதம் தீக்ஷா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து சிறுமியாக (பேபி தியா) வளர்ந்த நிலையில், இந்தியா வருகின்றனர் .
அந்த சமயம் ராஜேந்திர பூபதி என்ற ஒரு பழைய ஜமீந்தாருக்கு சொந்தமான அரண்மனை பங்களா ஒன்றுக்கு போலி வாரிசு தயார் செய்து, அதை அநியாயமாக உரிமையாக்கிக் கொள்கிறார் மதன் .
இந்தியா வந்திருக்கும் மகன், மருமகள் பேத்தியை அந்த பங்களாவில் தங்க வைத்து விட்டு , மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக நொய்டா போகிறார் மதன் .
அரண்மனை பங்களாவில் கௌதம் , தீக்ஷா, ஹியா மற்றும் கனி என்ற வேலைக்காரி நால்வர் மட்டுமே இருக்கும் நிலையில் வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பது , ஈ எஸ் பி ஓவியர் நீலா (பூஜா) மூலம் தெரிய வருகிறது .
கௌதம் , தீக்ஷா, ஹியா மற்றும் கனி நால்வரும் ‘பேயை’ பார்க்கின்றனர் .
பேய் ஓட்ட வரும் நகுலன் (ஸ்ரீனிவாசன்) ஒரு மந்திரக் கயிறை கொடுத்து இதை அவிழ்க்காமல் ஒரு நாள் கழித்து விட்டால் ஆபத்து இல்லை என்கிறார் . ஆனால் வேலைக்காரி கனி அதை அவிழ்த்து விட ,
அவளை பேய் குத்திக் கொல்வதை கௌதமும் தீக்ஷவும் பார்க்கிறார்கள் . ஊரில் இருந்து வரும் மதன் பேயைப் பார்த்து பயந்து மாடியில் இருந்து விழுந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு போகிறார் .
ரத்தத்தால் ராஜ வம்சம் கொண்ட , தற்போதைய ஏழை ஒருவனுக்கு இந்த பங்களாவை கொடுத்து விட்டால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும் என்று நகுலன் அடுத்த தீர்வு ஒன்றைக் கூற ,
அப்படி ஒரு நபர் கிடைத்தானா? இல்லையா? அப்புறம் என்ன ஆனது என்பதே களம் .
தமிழ் சினிமாவில் 1950 களில் சமூகப் படங்கள் வந்து, அதில் பேய்கள் வர ஆரம்பித்த காலம் முதல் ஒரு ஷாட் வந்து கொண்டிருக்கிறதே .. பயந்த கதாபாத்திரம் முன்னால் நிற்க ,
பின்னாடி தூரத்தில் ஜன்னலுக்கு வெளியே கருப்பான உருவத்தில் பேய் கிராஸ் செய்யுமே .. அதே ஷாட் இந்தப் படத்தில் வருகிறது வருகிறது வந்து கொண்டே இருக்கிறது .
சத்தம் கேட்டு யாராவது கையில் விளக்கு எடுத்துக் கொண்டு என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கக் கிளம்பினால், ரொம்ப மெதுவாக இஞ்ச் இஞ்ச்சாக எட்டு வைத்து நடந்து,
பங்களாவை ஒரு சுற்று சுற்றி விட்டு வந்து படுத்துக் கொள்கிறார்கள் . (டி ஆர் பி இல்லாத டிவி சீரியல்கள் கெட்டது போங்கள்.)இப்படி நாலு கேரக்டர்கள் தலைக்கு நான்கு தடவை செய்கிறார்கள் .
அரண்மனைக்கு மேலே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து வருவதை ஹ்ர்ர்ரர்ர்ர்ஹ்ஹ்ஹஹ்ஹா …. என்ற பின்னணி இசையோடு ஏறக் குறைய பத்து இருபது முறை காட்டுகிறார்கள் .
நிலா காட்டி இருட்டு வருவதும் வெளிச்சம் வந்து விடிவதும் மாறி மாறி நடக்கிறது. எப்போதாவது பேய் குளோசப்பில் வந்து கோர முகம் காட்டுகிறது .
இதை எல்லாம் சொல்லக் காரணம் கிண்டல் செய்வதற்காக அல்ல . படு பரிதாபமான திரைக்கதையும் காட்சிகளுக்குப் பஞ்சமும் இருந்தால் ஒரு படம் விஷுவலாக எப்படி இருக்கும் என்பதை உணர்த்துவதற்குத்தான்.
சினிமா மேதைகள் என்று வியக்கப்படுபவர்கள் கூட , தங்கள் கதைக்கு சரியான – சிறப்பான திரைக்கதை அமைக்கும் விஷயத்தில்தான் பகீரத தவமும் பிரம்மப் பிரயத்தனமும் செய்கிறார்கள்.
அது முடியாத சமயங்களில் வரும் படங்களில் அவர்களே சிதறிப் போகிறார்கள் . திரைக்கதை என்பது விளையாட்டல்ல என்பதை உணரவேண்டும்
வீட்டுக்குள் விழுந்த கனி பிணம் என்ன ஆனது என்று யாருமே தேட மாட்டார்களாம். ஒரு தொடர்ச்சியோ ஒழுங்கோ இல்லாமல் தங்கள் வசதிக்கு காட்சிகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .
அதனால் பார்ப்பவர்கள் அசதி ஆகி விடுகிறார்கள்.
படத்தில் பாராட்ட வேண்டிய அம்சங்கள் என்றால்… ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மிக பொருத்தமான ஆட்களை போட்டு இருக்கிறார்கள் . அந்த பொருத்தமே பாதி நடிப்பைக் கொடுத்து விடுகிறது . சபாஷ்.
கடைசியாக வரும் அந்த டுவிஸ்ட் மிக சிறப்பானது . நியாயமானது . தேவையானது . அதுவே இந்தப் படத்தை லாஜிக்கலான பேய்ப் படமாக மாற்றுகிறது .
ஆனால் அதை மட்டுமே மனசுக்குள் ரொம்ப சிலாகித்துகே கொண்டு மேட்டர் ஆஃப் ஃபேக்ட் ஆக மட்டுமே சொல்லி விட்டு திருப்தியாகி விட்டார்கள் .
உண்மையில் அது ஒரு அட்டகாசமான எமோஷனல் ஏரியாவாக வந்திருந்தால் படம் அபாய கட்டத்தை தாண்டி இருக்கும் .
ஜமீன்தார் ராஜேந்திர பூபதி பற்றிய விசயத்துக்கு ஓர் அட்டகாசமான பிளாஷ் பேக் தயார் செய்து அதை விஷுவலாக எடுத்து படம் பார்ப்பவர்களை வாய் பிளக்க வைத்து இருந்தாலும் ,
அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட் இன்னும் வலுவாக பலன் தந்திருக்கும் . களத்தில் வெற்றி கிடைத்து இருக்கும் .
அவை இல்லாததால் களம் ….. காலி மைதானம்