எஸ் பாஸ் ! சினிமாவில் ஜெயிக்க போராடும் இளைஞர்களின் வாழ்க்கையை ஒரு கம்பீர பரிதாபத்தில் சொல்ல வந்திருக்கும் படம்தான், ஜெ.வடிவேலின் எழுத்து இயக்கத்தில் வந்திருக்கும் கள்ளப்படம். இது பார்க்கும் தகுதி உள்ள்ள்ள படமா ? பார்க்கலாம்
ஒரு கூத்துக் கலைஞருக்கு மகனாகப் பிறந்து , கூத்துக் கலைக்கு ஏற்பட்ட கொடுமையான நலிவாலும் அதனால் திகைந்த கொடூர அவமானத்தாலும் தந்தை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள, ஆறாத அந்த வடுவோடும் மாளாத கலைக் கனவோடும் சினிமாவில் சாதிக்க விரும்பி சென்னைக்கு வந்து, உதவி இயக்குனராகப் பணியாற்றி நன்கு தொழில் கற்ற நிலையில், படம் இயக்க தயாரிப்பாளர் தேடி அலைகிறார் வடிவேல் .
உடன் நண்பர்களாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ், இசையமைப்பாளர் கே மற்றும் எடிட்டர் காகின் ! எல்லோருக்கும் தங்களின் முதல் படத்துக்கான கூட்டுப் போராட்டத்திலும் தினசரி பசியை தீர்ப்பதற்கான சோற்றுப் போராட்டத்திலும் இருக்கிறார்கள் .
பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன் இப்படி…. ஒரு வேரில் இருந்து கிளைத்த அடுத்தடுத்த தலைமுறை இயக்குனர்கள் மட்டுமல்லாது, பாலா வரைக்கும் பலரிடமும் அசிஸ்டன்ட் டைரக்டராக முயன்று முடியாமலே போய் , ஹோட்டல் தொழில் செய்து கொண்டு “இங்கு திரைக்கதைகள் பழுது பார்த்துத் தரப்படும் ‘ என்ற வாசகம் அடங்கிய போர்டுடன் செட்டில் ஆன, சிங்கம் புலியின் ஹோட்டலும் அவரது நட்பும்தான் இந்த நால்வரின் ஒரே பிடிமானம் .
அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகி, முதல் படமும் ஆரம்பித்து அது பாதியில் நின்று போன நிலையில் அடுத்து படம் பண்ணவே முடியாமல் குடும்பம் குட்டி என்று ஆகி , வறுமையோடு போராடும்போதும் இந்த நால்வருக்கும் நம்பிக்கை ஊட்டும் சுந்தர மூர்த்தி (செந்தில்), வடிவேலின் மரியாதைக்குரிய மனிதர் .
கூத்துக் கலையின் அழிவு , அதனால் தந்தை மாட்டிக் கொண்ட தூக்குக் கயிறு இவற்றின் அடிப்படையில் ஒரு சிறந்த கதையை தயார் செய்து கொண்டு பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்கிறார் வடிவேல். ஆனால் எல்லோரும் கமர்ஷியல் என்ற பெயரில் குத்துப் பாட்டு , வெட்டு சண்டை, அசட்டு காமெடி, பெண்களை கேவலப்படுத்தும் வசனங்கள் இருக்கிற மாதிரி கதை கேட்டு, இந்தக் கதையைப் புறக்கணிக்கிறார்கள் .
”கூத்து என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையை இந்தக் கதை கவரும்” என்ற வடிவேலின் ஆணித்தரமான வாதத்தை அவர்கள் காது குடைய மட்டுமே பயன்படுத்துகிறார்கள் .
இந்தப் பக்கம், வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு முன்பாகவே சுந்தர மூர்த்திக்கு வரும் மரணமும் அவரது குடும்பத்தின் ஓலமும் வடிவேல் மற்றும் நண்பர்களை புயல் அடிக்கும் பூமியாக்குகிறது . ”இனியும் சும்மா இருந்தா நாமளும் சுந்தர மூர்த்தி சார் மாதிரித்தான் சாவோம் . எப்படியாவது உடனே படம் பண்ணனும் ” என்று வடிவேல் படபடக்க , “உடனே படம் பண்ணனும்னா, கொள்ளைதான் அடிக்கணும்” என்று சந்தோஷ் கிண்டலாக சொல்ல , சில நொடி அமைதியில் வடிவேல் கேட்கிறார் “கொள்ளை அடிப்போம் “
அதிர்ச்சி , கிண்டல் , கோபம் , எதிர்ப்பு , எரிச்சல் , அமைதி, சிந்தனை, ஒரு சின்ன டிரையல் என்று சில சம்பவங்களுக்கு பிறகு கொள்ளை அடிக்க முடிவாகிறது. யார் வீடு? தயாரிப்பாளர் தங்கப்பாண்டி வீடு !
வடிவேல் மற்றும் யூனிட் தங்கப்பாண்டி வீட்டில் கொள்ளை அடிக்க முடிவு செய்யும் அதே நாளில் தங்கப் பாண்டியின் வைப்பாட்டி லீனா தனது காதலன் மற்றும் அவனது நண்பர்களை வைத்து கொள்ளையடிக்க திட்டமிட , இரண்டு கோஷ்டியும் ஒரே நாளில் ஒரே இரவில் ஒரே சமயத்தில் அந்த வீட்டில் களம் இறங்க , மிக புத்திசாலித்தனமாக திட்டமிட்டு வடிவேல் அண்ட் யூனிட் இரண்டு கோடியே பதினேழு லட்ச ரூபாயை கொள்ளை அடித்துக் கொண்டு போக, லீனா அண்ட் குரூப் மாட்டிக் கொள்கிறது .
எப்படியாவது தன்னை காப்பாற்றும்படி இன்ஸ்பெக்டரிடம் (கவிதா பாரதி) லீனா கேட்க, அதற்கு விலையாக லீனவையே ‘கேட்கிறார்’ இன்ஸ்பெக்டர் . அவளும் ஒரு வித அலட்சிய விரக்தியோடு சம்மதிக்க, லீனாவைக் காப்பாற்றவாவது உண்மையான குற்றவாளியை பிடிக்க தீவிரமாக முயல்கிறார் இன்ஸ்பெக்டர்.
அதே நேரம் பணத்தை வைத்துக் கொண்டு, தான் ஆசைப்பட்டபடி கூத்துக் கலையை மையமாக வைத்து கூத்தாடி என்ற பெயரில் ஒரு நெகிழ்சியான படத்தை வடிவேலு அண்ட் யூனிட் எடுக்க ஆரம்பிக்கிறது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முதல் ஆட்டத்தில் வீசப்படும் முதல் பந்திலேயே , ஸ்டேடியத்தை தாண்டி விழுந்து பந்து காணாமல் போகிற மாதிரி, ஒப்பனிங் பேட்ஸ்மேன் ஒரு சிக்சர் அடித்தால் எப்படி இருக்கும் ?
படம் துவங்கிய உடனேயே நான்கு ‘சினிமா கனவு’ நண்பர்கள் மற்றும் லீனா கேரக்டரை அறிமுகப்படுத்தும் விதத்திலேயே அப்படி ஒரு நேர்த்தியில் அசத்துகிறார் இயக்குனர் வடிவேல் . அந்த நேர்த்தியும் கனகச்சிதமும் படம் முழுக்க தொடர்வது சுகமான சந்தோசம் !
ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சியில் இசையமைப்பாளர் , ஒளிப்பதிவாளர் , எடிட்டர் எல்லோரும் ஆடுவார்கள் . ஆனால் இயக்குனர் வடிவேலு மட்டும் ஆடமாட்டார் . காரணம், பின்னால் சொல்லப்படும் அந்த பிளாஷ்பேக்கில் உறைந்து கிடக்கும் வலி! இப்படி முன்னும் பின்னும் நினைத்து புரிந்து ரசிக்க படம் முழுக்க பல விஷயங்கள் இருப்பது அருமை . வெல்டன் வடிவேல் சார் !
இதுதான் இப்படி என்றால், சினிமாக்காரனின் கதை என்ற வசதியை லாவகமாகப் பயன்படுத்திக் கொண்டு , சார்லி சாப்ளின் , பாலுமகேந்திரா , இயக்குனர் வடிவேலுவின் குருவான மிஷ்கின் , ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம சந்தோஷின் குருவான பி.சி. ஸ்ரீராம் ஆகியோரை அங்கங்கே கவுரவப்படுத்தி இருப்பது அழகோ அழகு . (”நன்றாக சமைக்கத் தெரிந்தவர்களால்தான் ஒரு நல்ல இயக்குனர் ஆக முடியும் என்பார் பாலுமகேந்திரா” )
படத்தில் நண்பர்கள் தங்கி இருக்கு வீட்டின் ‘செட்’ டை (இலவசமாக?) போட்டுக் கொடுத்த முகமூடி ஆர்ட் டைரக்டர் பாலாவுக்கும் அந்த செட்டிலேயே நன்றி சொல்கிறார் வடிவேல் . இது மட்டுமா? ஒரு வெற்றிப் படத்தை தயாரித்தும், ஒரு நடிகர் ஒரு நாள் ஷூட்டிங் வராததால் பெரும் செலவு ஏற்பட்டு நஷ்டப்பட்டு, தெருவுக்கு வந்த ஒரு நிஜமான தயாரிப்பாளரை, கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு கேரக்டரில் நடிக்க வைத்த விதத்திலும் வடிவேலுவின் ‘பூடகம்’ பூத்துக் குலுங்குகிறது.
லீனா கேரக்டருக்கு லக்ஷ்மி பிரியா பொருத்தமாக இருக்கிறார் . நடிக்கிறார் . காஸ்டியூமருக்கு ஒரு ஜே!
ஒரு கழிவிரக்கமான கேரக்டரில் இயல்பாக நடித்து கனம் ஏற்றிவிட்டுப் போகிறார் செந்தில் .சிங்கம் புலி வழக்கம் போல அசத்தல்
கவிதாபாரதி அறிமுகக் காட்சியில் அவரை மஃப்டியில் உட்கார வைத்து அவர் இன்ஸ்பெக்டர் என்பதையே உணர முடியாதபடி கையடக்க ஃபிரேம் வைத்து…. மெல்ல மெல்ல பிரேம் , சூழல், காட்சியின் வீரியம் ஆகியவற்றை விஸ்தரித்துக் கொண்டே போகும் காட்சியில், இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் வீடுகட்டி விளையாடுகிறார்கள் . சபாஷ் .
வடிவேல் எழுதி இருக்கும் வசனங்கள் சுருக்கமாகவும் சுருக்கென்றும் இருக்கின்றன. உதாரணம் “சினிமாவுல ஜெயிக்கிறமான்னுதான் பார்க்கறானுங்க. எப்படி ஜெயிககறோம்னு எவன் பாக்கறான் ?”
கே யின் மண் மனம் பேசும் இசை, காகினின் நல்ல படத் தொகுப்பு, ஸ்ரீராம் சந்தோஷின் ஒளிப்பதிவு , எளிமையை பிரம்மாண்டமாகக் காட்டும் வடிவேலுவின் ஷாட்கள் இவற்றின் அருமையான கூட்டுத் திறமையால் காட்சிக்கு வந்திருக்கும் — கூத்துக் கலையின் அழிவை சொல்லும் அந்த- பாடல் மனத்தைக் கனக்க வைக்கிறது . அந்த இசையும் குரல்களும் காதுகளின் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கின்றன.
கூத்துக் கலைக்கு சரியான சமயத்தில் கைகொடுக்க வந்திருக்கும் வடிவேலுக்கு வாழ்த்துகள் .
கள்ளப் படம் … (உள்ளக்) கொள்ளைப் படம் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————–
வடிவேல், ஸ்ரீராம சந்தோஷ், காகின் , கே , ஆனந்த் பொன்னிறைவன்