அக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி டில்லி பாபு தயாரிக்க, ஜி வி பிரகாஷ் , பாரதிராஜா, இவானா, தீனா, ஞானசம்பந்தன் நடிப்பில் பி வி சங்கர் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம்.
யானை, புலி போன்ற மிருகங்களின் வாழ்க்கையும் மனிதர்களின் வாழ்க்கையும் அடிக்கடி உரசிக் கொள்ளும் மலைக்காட்டுக் கிராமமான இருட்டிபாளையத்தில் நண்பனோடு (தீனா) சேர்ந்து சில்லுண்டித் திருட்டுகள் செய்து வாழும் பயல் ஒருவன் (ஜி வி பிரகாஷ்)
திருடப் போன இடத்தில் அப்பாவி போல நடித்து வசமாக மாட்டி விட்டாலும் அப்புறம் தப்பிக்க வைக்கும் வீட்டு உரிமையாளரான ஒரு ஒரு கல்லூரிப் பெண்ணின் ( இவானா) கை விட்டுப் போன பொருளைத் திருடிக் கொடுக்க, காதலும் வருகிறது.
திருட்டுத் தொழிலை விட்டு விட்டு வனத்துறை வேலைக்குப் போக அவன் முயல , அதற்கு அரசு எந்திரம் ரெண்டு லட்ச ரூபாய் ஆயில் கேட்க , அதற்காக அநாதை இல்லம் ஒன்றில் வாழும் ஒரு பெரியவரை ( பாரதிராஜா) தத்து எடுத்துக் கொண்டு வந்து , சில நாட்களுக்குப் பிறகு காட்டு யானையிடம் தள்ளி விட்டு கொன்று விட்டு, அதற்கு நஷ்ட ஈடாகக் கிடைக்கும் பணத்தை வைத்து வேலை வாங்க முடிவு செய்து அவன் பெரியவரை தத்து எடுத்துக் கொண்டு வர ,
நடந்தது என்ன என்பதே படம் .
அட்டகாசமான லொக்கேஷன் .
அதைச்அலேக் அலேக்காக சுருட்டி விழுங்கும் அற்புத ஒளிப்பதிவு
கொங்கு மண்டலத் தங்கத் தமிழை சற்றும் மாசு படுத்தாமல் பயன்படுத்தி இருக்கும் அம்சம்.
அழகான இளம் இவனா .
பொருத்தமாக ஜி வி பிரகாஷ் .
கம்பீர பாரதிராஜா
அக்சஸ் பிலிம் பேக்டரியின் சிறப்பான தயாரிப்புத் தரம்
இவையே பலம்.
ஜி வி பிரகாஷ் கேரக்டரை அளவுக்கு மீறி தவறாகச் சித்தரித்து இருக்கும் விதம் ,
யானை மிதித்த பெண் உருவத்துக்கான பொருத்தமான டம்மி கூட சரியாகத் தயார் செய்யாத அலட்சியம்
ஊர்த்தலைவர் கேரக்டரும் அது தொடர்பான காட்சிகளும் செய்யும் கழுத்தறுப்பு ,
பாட்டியோடு கல்யாணம் என்பதை எல்லாம் நகைச்சுவை என்று நம்பும் அநியாயம்
கருவாச்சி .. கருவாச்சி என்று இவானாவுக்கு பாடல் வைக்கும் சினிமாத்தனம் ( உண்மையில் இந்த படத்துக்கு பொருத்தமான கதாநாயகியே தோழியாக வரும் பெண் தான் )
மிக மெதுவாக நகரும் காட்சிகள்
இரண்டாம் பாகம் முழுவதையும் சுலபமாக யூகிக்க முடிவதால், முழுசாகத் தெரிந்த கதையை ஒண்ணேகால் மணி நேரம் உட்கார்ந்து பார்ப்பதால் ஏற்படும் அலுப்பு
ஆக்ஷன் சொன்ன உடன் ஏதோ உடம்பில் கரென்ட் பாய்வது போன்ற உணர்வில் செயற்கையாக நடிக்கும் தீனா,
சர்க்கஸ் பற்றிய விஷயம் தேவையும் இல்லாமல் ஆழமும் இல்லாமல் துருத்திக் கொண்டு நிற்கும் அபத்தம்
அழுத்தம் இல்லாத வசனங்கள்,
உணர்வுக் கூட்டலை உருவாக்கத்த் தெரியாத பக்குவமற்ற டைரக்ஷன்..
இவை பலவீனம்
மொத்தத்தில் கள்வன் … இடைவேளை முடிந்த கொஞ்ச நேரத்திலேயே சிக்கிக் கொள்கிறான்