தனது உத்தமவில்லன் படம் பற்றி பேச, இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் கமல் .
எடுத்த எடுப்பிலேயே பாலச்சந்தர் இந்தப் படத்தில் நடித்திருப்பது பற்றித்தான் பேச்சு .
” படம் ஆரம்பிக்கிற அன்னிக்கு கூட, ‘நான் ஒன்னும் வருத்தப்படமாட்டேன் . நீ வேண்ணா என் கேரக்டருக்கு வேற நடிகர போட்டுக்கோ’ ன்னார் கே.பி.சார். ‘ எனக்கு ஏதாவது ஆச்சுன்னா படம் நின்னுடும்’னார். பரவால்ல நான் உங்க சீன்கள் எடுத்தவரை வச்சுக்கற மாதிரி, கதையை மாத்திக்கறேன்’னேன். அதே போல நடிச்சு முடிச்ச பின்னாடி அவசர அவசரமா டப்பிங் பேசிக் கொடுத்தார் . அவருக்கு ஏதோ மனசுக்குள்ள பட்டிருக்கு ” என்றார் .
“பாலச்சந்தர் இந்தப் படத்துல நடிக்கும்போது , அடடா ! இவரை முன்பே பல படங்களில் நடிக்க வச்சிருக்கலாம்னு தோணலையா?” என்றேன்
“நீங்க வேற…… நான் ரொம்ப நாளா கூப்டுட்டுதான் இருந்தேன். சிவாஜி சார், கே. பி சார், நான் மூணு பேரும் நடிக்க, நான் இயக்க , பிதாமகன் என்ற பெயர்ல ஒரு படம் டைரக்ட் பண்ண ஆசைப்பட்டேன் . சிவாஜி சார் ஒத்துகிட்டார் . இவர் மறுத்துட்டார் . அப்புறம்தான் அந்த பேர்ல பாலா படம் எடுத்தார் ” என்றார் கமல் .
“படத்துல கதை திரைக்கதை கமல்னு போட்டு இருக்கு . வசனம் யாருன்னு போடலியே. நீங்க தானே ?”‘ என்றேன்.
“ஆமாம் . எனக்கு இப்படி கதை திரைக்கதை வசனம் , பாடல்கள் னு போடறதே பிடிக்கல. முன்னெல்லாம் நாடக ஆசிரியர்னு போடுவாங்க . அதுல மேற்சொன்ன எல்லாம் அடக்கம் . அந்த மாதிரி சினிமாவுக்கும் வரணும்னு ஆசைப்படுறேன்”
“மல்லன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் வையாபுரி நடிப்பதா போட்டு இருக்கீங்க . மல்லன் என்ற பேருக்கும் வையாபுரி உடம்புக்கும் எப்படி சம்மந்தப்படுத்தறீங்க ?”‘ என்றேன் .
“அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. கோவில் வாசல்ல பிச்சை எடுக்கறவன் ராஜான்னு பேரு வச்சிருப்பான் இல்லியா ? அப்படிதான் ” என்றார் கமல்.
தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் கமல் பதிலும்
“உத்தம வில்லன் என்றால் அவன் என்ன மாதிரி வில்லன் ?”
நாம வில்லன் என்ற வார்த்தையை ஆங்கில வார்த்தையா மட்டும் பாக்குறோம் . வில்லன் என்றால் வில்லாளி என்றும் அர்த்தம் வரும் . அவன் வில்லாதி வில்லன்னு சொல்வோம் இல்லியா அப்படி. ‘
ரமேஷ் அரவிந்த் இந்தப் படத்துக்கு டைரக்டர் ஆனது எப்படி?
‘ரெண்டு பேருமே கே.பி சாரிடம் இருந்து வந்தவர்கள் . அந்த நட்பு நெருங்கியது . நான் இன்னும் இயக்காமல் வைத்திருக்கிற பல கதைகள் அவருக்கு தெரியும். அப்படி இந்தக் கதையை சொல்லி கருத்துக் கேட்டபோது, இதை நான் இயக்குறேன்னு சொன்னார் . அப்படியே ஆரம்பிச்சோம்.
இந்தப் படம் நீங்க படிச்ச விசயங்களின் பாதிப்பா? பார்த்த படங்களின் பாதிப்பா?
இரண்டுமே இருக்கு . இது ஒரு மனிதனின் கதை . அவன் ஒரு நடிகன் . அவ்வளவுதான் . அவனை எட்டாம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனோடு சம்மந்தப்படுத்தும் வேலையை பாலச்சந்தர் நடிச்சு இருக்கற மார்க்கதரிசி என்ற டைரக்டர் கதாபாத்திரம் செய்யுது “
“ஆங்கிலப் படத்தை பார்த்து காப்பி அடிச்சுட்டு கதை திரைக்கதை வசனம் னு பேர் போட்டுக்கறது சரியா?”
” நானே ஒரிஜினல் இல்ல. என் அப்பா அம்மா மாதிரிதானே நான் இருக்கேன் . ஒருவேளை ரெண்டு மூக்கு நாலு கண் இப்படி தனித்தன்மையா பொறந்தாதான் நான் ஒரிஜினல் .”
“படம் ஓடலைன்னா பணத்தை திருப்பி கேட்கறது சரியா?”
“இதே முடிவுக்கு ரசிகன் வந்து பாதிப்படம் பார்த்துட்டு ‘படம் பிடிக்கல . மீதிப்படம் பார்க்க விரும்பல. மிச்ச பணத்தைக் கொடு’ன்னு கேட்டா என்னாகும் ?
“கமல் மாதிரி பெரிய நடிகர் நடிச்சும் விஸ்வரூபம் பார்ட் டூ வராமே இருக்கே . என்ன காரணம்?”
“அதன் தயாரிப்பாளரைதான் (ஆஸ்கார் ரவிச்சந்திரன்) கேட்கணும். . இத்தனைக்கும் அவர் ஒண்ணும் தோல்விப் படம் எடுத்திருப்பவர் அல்ல. (ஐ படம்!)
“சினிமாவில் கருத்து சுதந்திரம் பெரிசா பாதிக்கப்படுதே ?”
அந்த வேலையை தணிக்கத் துறையே செய்யுதே. ஒரு படம் அவங்க கிட்ட போனா , ‘இந்தப் படத்தில் இந்த மாதிரி விஷயம் இருக்கு . இதை இவங்கதான் பாக்கணும்’னு சான்றிதழ் தரும் வேலை மட்டும்தான் அவங்க செய்யணும் . ஆனா அவங்களே இப்போ ‘அதை சொல்லாதே; இதை எடுக்காதே’ன்னு தடுக்கறாங்க. ஷேக்ஸ்பியருக்கு அந்தக் காலத்தில் இருந்த கருத்து சுதந்திரம் கூட இப்போ உள்ள படைப்பாளிக்கு இல்ல “