கமல்ஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இணைந்த தயாரிப்பில் , கமல்ஹாசன் எழுதி நடிக்க , ரமேஷ் அரவிந்த் இயக்கி இருக்கும் உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா , ஒரு பாரம்பரியத்தின் ஆழம் நவீனத்தன்மையின் உயரம் இரண்டும் அடர்ந்து செறிந்த ஒரு விழாவாகவே இருந்தது . பார்த்திபனின் நிகழ்ச்சித் தொகுப்பால் உற்சாகத்துக்கும் பஞ்சம் இல்லை .
எட்டாம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் , இந்த நூற்றாண்டு கமர்ஷியல் சினிமா சூப்பர் ஸ்டார் என்று இரண்டு கதாபாத்திரங்களில் கமல் நடிக்க, இரண்டு பாத்திரங்களுக்கும் ஒரு நிலையில் இணைப்பு கொடுத்து பயணிக்கும் திரைக்கதையில் அமைந்த படம் இது .
கமல்ஹாசானின் குருவான மறைந்த இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்க ( உடன் இயக்குனர் கே விஸ்வநாத்தும் !) படப்பிடிப்பில் அவர் இருந்த காட்சித் துணுக்குகள் , படம் பற்றி பாலச்சந்தர் வியந்து பாராட்டிய விஷயங்கள் திரையிடப்பட , பாலச்சந்தர் பற்றி கமல் பேசும்போது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்
இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் நடிகர் நாசரின் மகன் விபத்தில் சிக்கி படு காயம் அடைந்தார். ஒரு தந்தையாக அப்போது தனக்கு ஏற்பட்ட உணர்வுகளையும் , தன்னால் மகனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாத நிலையில் ”எனக்கு ஷூட்டிங் வையுங்கள் ” என்று கமலிடம் வற்புறுத்தியதையும் அதற்காக பிரித்த செட்களை மறுபடியும் போட வகையில் கமல் பல லட்சங்கள் நஷ்டப்பட்டதையும் நாசர் விளக்க , அது ஒரு உணர்ச்சிகரமான காவியமாக இருந்தது.
படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொது ஊர்வசி கர்ப்பம் ஆகி விட …(நோ.. அப்படி இல்ல… அப்படி இல்ல…) அதனால் படப்பிடிப்பில் நடந்த கலாட்டாக்கள் , டெலிவரிக்கு போகும் முன்பு கமல் டப்பிங்கை முடித்தது என்ற ஊர்வசி பேசிய பல விஷயங்கள் கல கல கல்கண்டு .
சகல கலா வல்லவன் படத்தின் இளமை இதோ இதோ பாடல் முதல் .. விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற ‘ எதைக் கண்டு .. ‘ பாடல் வரை சில சில வரிகள் தொகுப்பில் அமைந்த புளூரசன்ட் வண்ணம் மற்றும் லைட் நடனம் கண்ணுக்கு விருந்தாக இந்த நேரம் , அந்தப் பாடல்கள் மூலம் கமல்ஹாசனின் வளர்ச்சியின் குறுக்கு வெட்டை உணரும்படியாக இருந்தது.
மாபெரும் வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர் ஞான சம்பந்தன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்க , அவர்களும் விழாவை கொஞ்சம் உயரப்படுத்தினார்கள்.
படத்துக்கு கமல்ஹாசனும் விவேகாவும் எழுதிய பாடல்களைப் பற்றி , சுப்பு ஆறுமுகம் , ஞான சம்பந்தன் , கமல்ஹாசன் , பார்த்திபன் , லிங்குசாமி , கவிஞர் விவேகா கவிஞர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்ட அமர்வு ஒன்று மிக அற்புதமான நிகழ்வாக அமைந்து , நடப்பது பாடல் வெளியீட்டு விழா அல்ல , இலக்கிய விழா என்ற உணர்வை ஏற்படுத்தியது .
அந்த அமர்வில் கம்பன் , கண்ணதாசன் , சிவாஜி கணேசன் , இளையராஜா , வைரமுத்து ஆகயோரின் பெருமைகள் அழகாகப் பேசப்பட்டன . மிகுந்த தமிழ் உணர்வுடன் தன்னை மறந்து உற்சாகத்துடன் பேசினார் கமல் . “என் பாடல் வரிகளில் கம்பன் தெரியலாம் . கண்ணதாசன் தெரியலாம் . நான் அவங்க பிள்ளைதானே. பிள்ளை கிட்ட அப்பனோட அடையாளம் இருக்கணும் . அதுதான் அம்மைக்கு பெருமை . தமிழ் அம்மைக்கும் !” என்றார் கமல்
படத்தில் ”சாகாவரம் சோகமே ” என்று எழுதி இருப்பது பற்றி ஞானசம்மந்தன் கேட்ட கேள்விக்கு ” வாழ்வது போலவே சாவதும் ஒரு கடமை . யாராக இருந்தாலும் ஒரு நிலைக்கு அப்புறம் நிறுத்திக்கணும் . அப்போதான் அடுத்தவங்களுக்கு இடம் கிடைக்கும் ” என்றார்.
” இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் கமல்சாரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் ” என்றார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் .
வாகை சூடவா படத்தில் இடம் பெற்ற “சாரைக் காத்து வீசும்போது …” பாட்டின் மெட்டு கமலை மயக்க , அதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு இசையமைப்பாளராகி இப்போது உத்தம வில்லன் படத்துக்கும் இசையமைத்து இருக்கும் ஜிப்ரான் ” ஒரு புரஃபசரை இம்ப்ரெஸ் பண்ண துடிக்கும் மாணவன் என்ன என்ன எல்லாம் செய்வானோ அதைத்தான் கமல் சாரை இம்ப்ரெஸ் பண்ண நான் செய்தேன் ” என்றார் ஜிப்ரான் .
இறுதியில் நடந்த பாடல் வெளியீடு இன்றைய நவீனத்தின் உச்சம் .
நிகழ்ச்சிநடந்த சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இருந்து கமல்ஹாசன் பாடல்களைவெளியிட , மும்பையில் தனது இருப்பிடத்தில் லேப்டாப் முன்பு அமர்ந்திருந்தசுருதி ஹாசன் பாடல்களை ஆன் லைன் மூலம் பெற்றுக் கொண்டார் . அதற்கு ஒருநிமிடம் முன்பு வரை கூட நாம்தான் பாடல்களை பெற்றுக் கொள்ளப் போகிறோம்என்பது சுருதிக்கு தெரியாது .கமலிடம் சுருதி பேசுவதை பெரிய ஸ்கிரீனில்ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் விசயமும் சுருதிக்குதெரியாது .
விளைவு ? இதுவரை பலருக்கும் தெரியாத உண்மை ஒன்று வெளிப்பட்டது .
அது…. கமல்ஹாசனை சுருதிஹாசன் பாப்பு என்றுதான் அழைக்கிறார்